இறைவனுக்கு அமுதுபடைத்த நாயனார்


இறைவனுக்கு அமுதுபடைத்த நாயனார்
x
தினத்தந்தி 27 Nov 2018 11:49 AM GMT (Updated: 27 Nov 2018 11:49 AM GMT)

காவிரி பாயும் வற்றாத வளம் கொழிக்கும் ஊர் ஆக்கூர். இங்கு 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் வசித்து வந்தார். இவர் சிறந்த வள்ளல்.

தன் இல்லம் நாடி வருபவர்களுக்கு இல்லை என்று கூறாது உணவு அளித்து உபசரிப்பவர் சிறப்புலி நாயனார். எத்தனை சிவனடியார்கள் வந்தாலும் அனைவருக்கும் மனம் கோணாது அமுது படைத்து வந்தார் சிறப்புலி நாயனார். அதனாலேயே சுந்தரர் இவரை ‘சீர்கொண்ட புகழ் வள்ளல்’ எனப் போற்றியுள்ளார்.

நாயனார் ஒரு நாள் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவூட்ட முடிவு செய்தார். ஆனால் ஒருவர் குறையவே நாயனார் மன வேதனை அடைந்தார். உள்ளம் உருக இத்தலத்து இறைவனான தான்தோன்றி அப்பரை வேண்டினார். அடியாரின் மன வேதனையை இறைவன் உணர்ந்தார். உடனே தானே சிவனடியார் வேடம் பூண்டு நாயனாரின் இல்லம் வந்தார். நாயனார் ஆயிரம் பேருக்கும் அமுது படைத்தார். பின் நாயனாருக்கு இறைவன் காட்சி தந்தார்.

நாயனாருக்கு ஆயிரத்தில் ஒருவராக வந்து அமுதுண்ட இறைவன் ‘ஆயிரத்தில் ஒருவர்’ என அழைக்கப்படலானார். பின்னர் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தன்று சிறப்புலி நாயனாரை இறைவன் ஆட்கொண்டார். எனவே இந்த ஆலயத்தில் இன்றும் அந்த நட்சத்திர நாளில் சிறப்புலி நாயனார் வழிபாடு சிறப்புற நடந்து வருகிறது.

இந்த ஆயிரத்தில் ஒருவர் அருள்புரியும் ஆலயமே தான்தோன்றி அப்பர் ஆலயம். இறைவன் தான்தோன்றியப்பர். இறைவியின் திருப்பெயர் வாள்நெடுங்கண்ணியம்மை. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் விசாலமான வெளிபிரகாரம். எதிரே இறைவனின் ஆலயம் உள்ளது. முற்பிறவியில் சிலந்தியாக இருந்து யானை மேல் பகை கொண்டு உயிர்விட்டபின் இறைவன் ஆட்கொள்ள மறுபிறவியில் சோழ மன்னனாய் பிறந்தான். அந்த சோழ மன்னன் கோசெங்கோட்சோழன் யானை ஏற முடியாத எழுபது மாடக்கோவில்களை கட்டிய வரலாறு தெரிந்ததே. அந்த மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று.

இறைவன் சன்னிதிக்கு நேரேயும், தென்புறத்திலும் படிகட்டுகள் உள்ளன. ஆலயம் 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சன்னிதிக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் உள்ளன. இந்த முகப்பு மண்டபத்தின் கிழக்கில் சிவசூரியன், பைரவர், காலபைரவர் திருமேனிகள் உள்ளன.

அடுத்துள்ள மகா மண்டபத்தின் ஈசானிய மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தை அடுத்து உட்பிரகாரம் உள்ளது. பிரகாரத்தை வலமாக வந்தால் பாணலிங்கங்களும், அதை அடுத்து விசுவநாதர், விசாலாட்சி அம்மனும் உள்ளனர். அடுத்து இந்த ஊரில் பிறந்து இங்கேயே முக்தி அடைந்த, இறைவனுக்கு அமுது படைத்த சிறப்புலி நாயனார் உருவம் தனி சன்னிதியில் உள்ளது. அடுத்து நாவுக்கரசர், ஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சங்கிலியார், பாவை நாச்சியார் திருமேனிகள் உள்ளன. மேற்கு திருச்சுற்றில் கணபதியும், பாலமுருகன், அருணகிரி, கஜலட்சுமி, கயிலாய நாதரும், தெற்கில் பர்வதவர்த்தினி, வாயுலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

மகாமண்டபத்தில் சிறப்புலி நாயனாரின் சன்னிதிக்கு நேர் எதிரே தெற்கு நோக்கிய நிலையில் நாயனாருக்கு காட்சி கொடுத்த மூர்த்தியாகிய ஆயிரத்தில் ஒருவர் சன்னிதி உள்ளது. கையில் தண்டு ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார் இறைவன். இந்த மூர்த்தி செப்பு மேனியாகும். அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களின் உருவம் மாடத்தின் உள்ளே மிக அழகாக அமைந்துள்ளது.

உள்ளே கருவறையில் இறைவன் தான்தோன்றியப்பர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மேல்பகுதி சற்றே பிளந்த நிலையில் காட்சி தருவது எங்கும் காணாத அமைப்பாகும். இந்த ஊருக்கு அருகே உள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்தபோது இந்த பாணம் வெடித்ததாக செவிவழி தகவல்.

சோழமன்னன் காலத்தில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த ஆலயம். கோவில் கட்ட எண்ணி ஊர் மக்கள் இடத்தை தேர்வு செய்து அதை சமன் செய்த போது ஓரிடத்தில் மிகப்பெரிய ஒலி எழுந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது அங்கே சிவபெருமானின் லிங்கத்திருமேனி விண்ணொளியாகப் பிரகாசித்தது. அந்த இடத்திலேயே சோழ மன்னன் ஆலயம் கட்டினான். இறைவன் தானாகக் கிடைத்ததால் இறைவனுக்கு தான்தோன்றியப்பர் எனப் பெயரிட்டு அழைத்தனர். தரையை தோண்டிய போது லிங்கத்தின் மேல்பகுதி சற்றே பிளந்து இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இறைவனின் தேவகோட்டத்தில் அகத்தியர், நர்த்தனவிநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை திருமேனிகள் உள்ளன. தவிர இந்த ஆலயத்தைக் கட்டிய கோசெங்கோட்சோழன் இறைவனை வழிபடும் நிலையில் உள்ள திருவுருவம் உள்ளது.

இறைவன் ஆலயத்திற்கு வலதுபுறம் இறைவி வாள் நெடுங்கண்ணியின் ஆலயம் உள்ளது. இறைவியும் கீழ்திசை நோக்கியே அருள்பாலிக்கிறாள். இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் ராஜேந்திரசோழன், பல்லவன், கோப்பெருந்சிங்கன், பாண்டியன் குலசேகரன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டு சாசனங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன.

ஆலய வெளி திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்து தலவிருட்சமான சரகொன்றை மரம் தழைத்தோங்கி நிற்க அதனை அடுத்து சரஸ்வதி தேவியின் சன்னிதி உள்ளது. இங்கு சரஸ்வதி வீணையுடன் காட்சி தருகிறாள். அடுத்து முருகன், வள்ளி, தெய்வானையும் வடக்கில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளன.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்திற்கு தினசரி மூன்று கால ஆராதனை நடக்கிறது. ஐப்பசியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதுடன் சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், கார்த்திகை என அனைத்து விசேஷ நாட்களிலும் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இத்தல இறைவன் இறைவியை ஆராதிப்பதால் திருமண தடை விலகுவதுடன் இத்தலம் ஒரு பரிகார தலமாகவும் விளங்குகிறது என்று பக்தர்கள் சொல்வது உண்மையே.

அமைவிடம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்லும் நெடுஞ்சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்கூர் என்ற ஊரில் உள்ளது இந்த ஆலயம். மயிலாடுதுறை, காரைக்கால், சீர்காழி, திருக்கடையூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி நிறைய உள்ளது.

Next Story