ஆன்மிகம்

மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை - தேனி மு.சுப்பிரமணி + "||" + Sabarimala that makes you feel calm - Theni M. Supramani

மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை - தேனி மு.சுப்பிரமணி

மனதை சாந்தப்படுத்தும் சபரிமலை - தேனி மு.சுப்பிரமணி
காலவ மகரிஷியின் மகளாக இருந்த லீலாவதி, ஒரு சாபத்தின் காரணமாக அசுர குலத்தில் மகிஷியாகப் பிறந்தாள். அவள் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதற்காக வித்தியாசமான வரம் ஒன்றை பிரம்மனிடம் கேட்டுப் பெற்றிருந்தாள். ‘சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் மகனாகப் பிறந்த பன்னிரண்டு வயது பாலகனால் மட்டுமே தன் அழிவு இருக்க வேண்டும்’ என்ற வரம் அது.
ஒரு முறை மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவின் அழகில் மயங்கிய சிவபெருமான், மோகினியுடன் இணைந்தார். இதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் கழுத்தில் மணி மாலை அணிவித்து காட்டில் விட்டுச் சென்றனர். அங்கு வேட்டையாட வந்த பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன், அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று ராணியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னான். குழந்தை இல்லாத அவர்களுக்கு அந்தக் குழந்தை ஆறுதலாக இருந்தது. கழுத்தில் மணி மாலை இருந்ததால் குழந்தைக்கு ‘மணிகண்டன்’ என்று பெயரிட்டனர்.


இந்த நிலையில் ராணிக்கு ஒரு மகன் பிறந்தான். எனவே மணிகண்டன் மீது இருந்த அன்பு, ராணிக்கு குறையத் தொடங்கியது. தனக்கு பிறந்த மகனே அரசாள வேண்டும் என்று நினைத்த ராணி, அதற்கு தடையாக இருக்கும் மணிகண்டனை அழிக்க நினைத்தாள். எனவே தனக்கு தீராத தலைவலி ஏற்பட்டிருப்பதாகவும், அதனை தீர்க்க புலிப்பால் கொண்டு வர வேண்டும் என்றும் அரண்மனை வைத்தியரை வைத்து பொய் கூறினாள்.

புலியின் பாலைக் கொண்டு வர பலரும் தயங்கிய நிலையில், தாயின் நோய் தீர்க்க தானே செல்வதாக முன் வந்தான் 12 வயதான பாலகன் மணிகண்டன். காட்டில் தன்னை வழி மறித்த மகிஷியையும் வதம் செய்தான். இதனால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். அவர்களே புலிகளாக மாறி, மணிகண்டனுடன் நாடு திரும்பினர். புலிகள் சூழ, ஒரு புலியின் மேல் அமர்ந்து வந்த மணிகண்டனைக் கண்டு ராணி திடுக்கிட்டாள். மணிகண்டனின் தெய்வீக சக்தியை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

தான் இந்த பூமிக்கு வந்த நோக்கம் நிறைவேறி விட்டதாகவும், இனி நான் வேறு இருப்பிடம் செல்ல வேண்டும் என்றும் மணிகண்டன் சொன்னார். பின்னர் ஒரு அம்பை எடுத்து எய்து, ‘நான் எய்த அம்பு விழும் இடத்தில் எனக்குக் கோவில் கட்டுங்கள்’ என்று தந்தை ராஜசேகரனிடம் சொன்னார். அதன்படி அமைக்கப்பட்டது தான் சபரிமலை என்று தல வரலாறு சொல்கிறது.

கோவில் அமைப்பு

சபரிமலையில் பதினெட்டுப் படிகளில் மேல் ஏறிச் செல்லும்படி உயரமான இடத்தில், கிழக்கு நோக்கிய நிலையில் ஐயப்பன் சன்னிதி இருக்கிறது. கோவில் கருவறையில் தர்ம சாஸ்தாவான ஐயப்பன், அறிவின் உயர்நிலையைக் கைவிரல்களால் காட்டும் அடையாளமான சின் முத்திரையோடு காட்சி தருகிறார். மேலும் ஒரு ஆடையால் முழங்காலைச் சுற்றிக் கொண்டு, குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கோவில் வளாகத்தில், கன்னிமூல கணபதி, நாகராஜா உள்ளிட்டோருக்கும் சன்னிதிகள் உள்ளன. அருகில் மாளிகைப் புறத்து அம்மன் சன்னிதி இருக்கிறது.

ஆலயம் ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அதுபோன்ற நாட்களில் அதிகாலை 4 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் நடை திறந்திருக்கும். தவிர கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 41 நாட்கள் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடத்தப்படும். இந்த நாட்களில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மண்டல பூஜையின் நிறைவு நாளில் தங்கத்தால் ஆன உடை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தை மாதம் மகர விளக்கு பூஜை, சித்திரை விஷு ஆகிய தினங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சபரிமலையில் 56 வகையான வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அமைவிடம்
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந் திருக்கும் சபரிமலைக்கு செல்ல, பம்பை என்ற இடம் வரை பஸ் வசதி உள்ளது. பம்பையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்லலாம். சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து மரபு வழியில் பயன் படுத்தி வரும் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்தே சபரிமலைக்குச் செல்கின்றனர். கோட்டயம் நகரிலிருந்து மணிமலை வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில்இருக்கும் பம்பைக்குப் பேருந்து வசதி இருக்கிறது.

மண்டல விரதம்
சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாகும். மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி, காட்டுக்கு அனுப்பிய ராணியும், அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர். அந்த நாட்களில், அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல், உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது. அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே, அந்த 41 நாட்கள் அமைந்தன. கடைசியில், காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே, ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது. பின்னர் அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது.


விரதம் இருக்கும் முறை
சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயப்பனை வழிபட விரும்பும் பக்தர்களுக்கு, சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் வரை விரதமிருக்க வேண்டும். விரத தொடக்க நாளில் ருத்திராட்சம் அல்லது துளசி மணிகளால் செய்யப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். விரத நாட்களில் மாமிச உணவு, மதுபானங்கள், புகையிலை பயன்படுத்தக்கூடாது. மேலும் அநாகரிகமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். தலை முடி மற்றும் முகத்தில் வளரும் தாடி, மீசையை திருத்தம் செய்யக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்படும் வரை, தினமும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும். கருப்பு, நீலம் அல்லது குங்குமப்பூ நிறத்திலான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வயதில் மூத்த ஐயப்ப பக்தரின் வழிகாட்டுதலுடன், இருமுடி கட்டிச் சபரிமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்ப வேண்டும்.

கோவிலுக்குக் காப்பீடு
திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், சபரிமலை சுவாமி ‎ஐயப்பன் கோவிலைச் சுமார் ரூ.30 கோடி அளவில் காப்பீடு செய்திருக்கிறது. மேலும், இந்த ‎இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு ‎விபத்துகளில் இருந்து இலவசக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் ‎அறிமுகப்படுத்திச் செயல் படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து ‎மலையேற்றப் பாதையில், சன்னிதானம் சென்றடையும் வரையிருக்கும் 18 ‎கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில், ‎விபத்துக்குள்ளாகி காயமடைவோர் மற்றும் உயிரிழப்பவர்களுக்குச் சுமார் ‎ஒரு லட்சம் ரூபாய் வரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக ‎வழங்க முடியும்.

ஹரிவராசனம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு நடை அடைப்புக்கு முன்பு, ‘‎ஹரிவராசனம்...’ என்ற பாடல் இசைக்கப்படுகிறது. சபரிமலையில் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் ‎இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல், ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சன்னிதியில் சுவாமி அத்தாழ பூஜைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கோவில் நடையில் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் ‎பாடிய ‘ஹரிவராசனம்..’ பாடல் ஒலிபரப்பப் படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கூட எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர்.

சபரிமலை செல்ல..
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வதற்குப் பல வழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதி நகரங்களான குமுளி, செங்கோட்டை ஆகிய ஊர்களின் வழி யாகச் சபரிமலைக்குச் செல்கின்றனர். குமுளி வழியில் செல்பவர்கள், அங்கிருந்து வண்டிப்பெரியார், எருமேலி, பிலாப்பள்ளி ஆகிய ஊர்களின் வழியாக சுமார் 176 கிலோமீட்டர் தூரமும், செங்கோட்டை வழியில் செல்பவர்கள் அங்கிருந்து புனலூர், பத்தனம்திட்டா வழியாகச் சுமார் 166 கிலோமீட்டர் பயணித்தும் பம்பையை அடையலாம். பம்பையில் இருந்து நான்கு கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்ல வேண்டும். ஐயப்ப பக்தர்களில் சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து மரபுவழியில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் 45 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்கின்றனர்.

ஐயப்பன் சிலை

சபரிமலையில் பரசுராமரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் ஐயப்பன் சிலை, 1950-ம் ஆண்டில் நடைபெற்ற தீ விபத்தில் சேதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து ‘சிலையை யார் செய்ய வேண்டும்?’ என்று தேவப்பிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சன்னிதி முன்பாகச் சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது. அதில், தமிழகத்தை சேர்ந்த இருவரின் பெயர்கள் வந்தன. அவர்கள் இருவரும் அதனை ஏற்று, கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இருந்த தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியைக் கொண்டு புதிய ஐயப்பன் சிலையை உருவாக்கி, சபரிமலைக்கு வழங்கினர். தற்போது அந்தச் சிலையே வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது.

இருமுடி வண்ணங்கள்

சபரிமலைக் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள், இருமுடி கட்டி செல்வார்கள். பருத்தித் துணியில் கைகளால் தைக்கப்பட்ட பையினுள், இறைவனுக்குப் படைப்பதற்கான ‎பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் இருக்கும். இந்தப் பையைத் தான் ‘பள்ளிக்கட்டு’ அல்லது ‘இருமுடிகட்டு’ என்று சொல்கின்றனர். இந்த இருமுடியில் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யைக் கொண்டு, சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. சபரிமலைக்கு முதல் முறையாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் ‎குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியையும், மற்றவர்கள் கருப்பு அல்லது நீல ‎வண்ணத்திலான இருமுடிகளைப் பயன்படுத்துகின்றனர்.