கைரேகை அற்புதங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம்


கைரேகை அற்புதங்கள் :  தீர்க்க சுமங்கலி யோகம்
x
தினத்தந்தி 21 Dec 2018 8:12 AM GMT (Updated: 21 Dec 2018 8:12 AM GMT)

எல்லோருக்கும் ‘தீர்க்க சுமங்கலி யோகம்’ அமைவதில்லை. வெகு சிலருக்கே அந்த பாக்கியம் கிடைக்கிறது.

திருமணமாகி 70 வயதுக்கு மேலும், பூ, குங்குமம், மஞ்சளும் வாழ்வது என்பது அற்புதமான யோகநிலை என்றே குறிப்பிடலாம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 9-ம் வீட்டுக்கு அதிபதி உச்சம் பெற்றிருந்தால், அந்த பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார். 9-ம் வீட்டு அதிபதி பாவியானாலும், உச்ச நிலையை அடைந்து விட்டால் தீர்க்க சுமங்கலி யோகம் அமைந்து விடுகிறது.

ஒரு பெண்ணின் 8-ம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் மட்டுமின்றி, மாங்கல்யத்துக்குரிய வீடும் ஆகும். 8-ம் வீட்டுக்கு அதிபதி வலுப்பெற்று விட்டால் அந்தப் பெண் தன் கணவனுடன் நெடுங்காலம் வாழ்வார். ஒரு பெண் ஜாதகத்தில் 10-ம் வீட்டு அதிபதி குரு அல்லது சுக்ரனாக அமைந்தால், அந்த பெண்ணுக்கு அழகு, செல்வம் படைத்த கணவன் அமைவது உறுதி.

ஒரு பெண்ணுக்கு 7-ம் வீட்டு அதிபதி லக்னத்தில் பலமாக அமைந்தாலோ அல்லது சுக்ரனது பார்வை லக்னத்திலோ, 7-ம் வீட்டிலோ அமைந்தால் அவருக்கு நீண்ட மாங்கல்ய பலம் அமைகிறது. 7-ம் வீட்டில் உச்ச பலம் பெற்ற கிரகம் அமைந்து, லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பலம் பெற்று இருந்தால், அந்த பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் அமையும். 7, 8 ஆகிய இடங்கள் சுத்தமாக அமையப்பெற்று, அசுப கிரகங்களின் பார்வை இந்த இரு வீடுகளிலும் ஏற்படாமல் இருந்தால், அந்த ஜாதகர் திருமணமாகி, பல ஆண்டுகள் வரை மாங்கல்ய பலத்துடன் வாழ்வார்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 11-ம் வீட்டுக்கு அதிபதி, 9-ம் வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் இருந்தால், அந்த பெண்ணின் வீட்டில் லட்சுமிதேவி வாசம் செய்வாள். அதே போல் லக்னாதிபதி பலம் பெற்றால் தான், நல்ல புத்திரர்களையும்,புத்திரர்களால் மேன்மையும் அடைய முடியும். பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் வீட்டோன், மாங்கல்ய வீட்டுக்கு அதிபதி உச்சம் பெற்றால், அந்தப் பெண் நெடுங்காலம் தன் கணவனுடன் கூடி வாழ்வாள்.

இனி கைரேகை சாஸ்திரப்படி சுமங்கலி யோகத்தைப் பார்க்கலாம். புதன் மேட்டின் அடியில் இருதய ரேகையின் மேல் பாகத்தில் குறுக்காக செல்லும் ரேகை தான் திருமண ரேகை. அழுத்தமாக அமைந்த ரேகை தான் விவாகத்துக்கு உட்பட்டது. திருமண ரேகை நீளமாக அமைந்த பெண்ணுக்கு, நெடுங்காலம் தன் கணவனுடன் கூடி வாழ்வார். ஒரு போதும் திருமண ரேகை வெட்டுப்படவோ, பிளவு படவோ அமையக் கூடாது. இந்த அமைப்புகள் பிரச்சினையைக் கொடுக்கும். நீளம் குறைந்த திருமண ரேகை, நெருங்கிய உறவில் நடந்த திருமணத்தை குறிப்பிடுவதாகும்.

திருமண ரேகை, சூரிய ரேகையை முட்டி நிற்கலாம். ஆனால் வெட்டிச் செல்லக்கூடாது. திருமண ரேகை ஒரு போதும் இருதய ரேகைக்கு கீழே அமையக்கூடாது. அப்படி அமைந்தவருக்கு திருமணம் நடக்காது. திருமண ரேகையில் இருந்து ஒரு புதிய கிளை உற்பத்தியாகி, அந்த கிளை ரேகை, இருதய ரேகைக்கு சமமாக நீண்டு சென்றால் அந்த ஜாதகரின் கணவர் வெகு காலம் அந்தப் பெண்ணுடன் உயிர் வாழ்வார். அந்தப் பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Next Story