மனக்கட்டுப்பாடு அவசியம்


மனக்கட்டுப்பாடு அவசியம்
x
தினத்தந்தி 26 Dec 2018 9:22 AM GMT (Updated: 26 Dec 2018 9:22 AM GMT)

அருள்மறையாம் திருக்குர்ஆனில் ‘அல் அஃராஃப்’ (சிகரங்கள்) என்ற அத்தியாயத்தில் சில வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு வசனத்தில் ‘பல் ஆம் இப்னு பாஊர்’ என்ற அறிஞரைப்பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

இறையச்சம், தீவிரமான வணக்க வழிபாடுகள் போன்றவற்றின் மூலம் இறைவனின் அருளைப்பெறும் ஒருவர், தனது நேர்வழியில் இருந்து தவறினால் என்ன ஆகும் என்று இந்த வரலாறு நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதுபற்றி இந்த வாரம் காண்போம்....

கொடுங்கோல் அரசன் பிரவுன், மூஸா நபிகளையும், அவரது கூட்டத்தாரையும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கி துன்புறுத்தினான். அல்லாஹ்வின் வல்லமையால் பிரவுனும், அவனது படைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். அதன்பின்னர் மூஸா நபியின் தலைமையில் மக்கள் அமைதியாய் வாழ்ந்திருந்த காலம் அது.

அப்போது எகிப்தை சுற்றியிருந்த மற்ற நாடுகளில் உள்ளவர்கள் மூஸா நபிகள் கொண்டு வந்த தவ்ராத் வேதத்தையும், ஏக இறைவன் அல்லாஹ் மட்டுமே என்ற கொள்கையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதோடு மூஸா நபிகளை பின்தொடர்ந்த மக்களுக்கும் தொல்லைகள் கொடுத்தனர்.

அந்த மக்களின் அட்டூழியத்தை அடக்குவதற்காக அவர்கள் மேல் போர் தொடுக்க வேண்டும் என்ற கட்டளையை மூஸா நபிக்கு இறைவன் பிறப்பித்தான். இதன்படி முதலில் அவர் மிஸ்ரு என்ற நாட்டின் மீது படையெடுத்துச்சென்று போர் புரிந்து வெற்றி கொண்டார். அடுத்து, மூஸா நபிகள் போர் தொடுக்க திட்டமிட்ட நாடுகளில் ஒன்று ‘கன்ஆன்’.

மூஸா நபிகள் தன் நாட்டின் மீது படையெடுத்து வந்தால் தன்னை சிறை பிடிப்பதோடு, தன் நாட்டையும் கைப்பற்றிக் கொள்வார் என்று அந்த நாட்டு மன்னன் பயந்தான்.

இதையடுத்து கன்ஆன் நாட்டு மன்னன் சதி ஆலோசனை செய்தான். அவன் மந்திரிகளை அழைத்துப்பேசினான். அப்போது மந்திரிகள், தங்கள் ஊரில் வசிக்கும் பல்ஆம் இப்னு பஊரா என்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் பற்றி மன்னனிடம் தெரிவித்தனர்.

வேதத்தை தெளிவு பெற கற்றறிந்த மார்க்க மேதையாகவும், வழிபாடுகளை தவறாது நிறைவேற்றும் பக்திமானாகவும் பல்ஆம் விளங்கினார். இவரது பக்தியை மெச்சிய அல்லாஹ், அவருக்கு ‘இஸ்முல் அஹ்லம்’ என்ற உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கி கவுரவப்படுத்தியிருந்தான்.

இதன்மூலம், தனக்கு எது தேவை என்றாலும் அதைத்தருமாறு இறைவனிடம் அவர் பிரார்த்தனை செய்தால் போதும், உடனே அவருக்கு அது கிடைத்துவிடும். அத்தகைய உயர்ந்த அந்தஸ்த்து தான் இஸ்முல் அஹ்லம் என்பது.

பல்ஆம் இதை பயன்படுத்தி இறைவனிடம் தனது தேவை மட்டுமின்றி பிற மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். இவரது ஆற்றலைப் பற்றி கேள்விப்பட்ட அந்த ஊரைச் சுற்றி வாழும் மக்கள் அவரை சந்திக்க திரண்டு வந்தனர். பலர் அங்கேயே தங்கியிருந்து அவரிடம் மார்க்க கல்வியும் கற்று வந்தனர். அந்த அளவிற்கு சிறந்த அறிஞராக அந்தஸ்த்தோடு வாழ்ந்து வந்தார்.

இத்தனை சிறப்பு மிக்க அவரைப்பற்றி மந்திரிகள், மன்னனிடம் எடுத்துக்கூறினார்கள். மேலும், இஸ்முல் அஹ்லம் என்ற சிறப்புத்தன்மை பல்ஆம்மிடம் உள்ளது. இதனால், மூஸா நபிக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு அவரிடம் சொல்ல வேண்டும். அதை ஏற்று அவர் பிரார்த்தனை செய்தால் தான் மூஸா நபியின் படைகளிடம் இருந்து நாம் தப்பிக்க முடியும் என்று மந்திரிகள் மன்னனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, மன்னனும் மந்திரிகளும் அறிஞர் பல் ஆம் வீட்டுக்குச் சென்றனர். அவரிடம், ‘மூஸா நபி மூலம் தன் ஆட்சிக்கு வர இருக்கிற ஆபத்தை எடுத்துச் சொன்னார்கள். இந்த ஆபத்திலிருந்து கன்ஆன் நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்றால், மூஸா நபிக்கு எதிராக நீங்கள் இறைவனிடம் துஆச் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

ஆனால், பல்ஆம் இதை ஏற்க மறுத்து இவ்வாறு கூறினார்:

“மூஸா நபி அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபி. அவர் தந்தது தான் தவ்ராத் வேதம். அதனை ஓதி செயல்படுத்தி வந்ததால் தான் எனக்கு இஸ்முல் அஹ்லம் என்ற சக்தியே இறைவனால் கொடுக்கப்பட்டது. அப்படி இருக்க நான் எப்படி ஒரு நபிக்கு எதிராக துஆச் செய்ய முடியும். மேலும் அது எப்படி அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும். எல்லோருக்கும் நன்மை செய்கின்ற நல்ல துஆக்கள் தான் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும். ஜின்கள், சைத்தான் போன்று கெட்ட விஷயங்களில் என்னை ஈடு படுத்திக் கொள்ளவோ, கெடுதல், சூனியம் செய்யவோ மாட்டேன் என்று மறுத்துவிட்டார்”.

மன்னனும் அவரை தன் வழிக்கு கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. எனவே குறுக்கு வழியில் அவரை வீழ்த்த திட்டமிட்டனர்.

பல்ஆம் சிறந்த ஞானியாக இருந்த போதிலும் தனது அழகான மனைவி மீது அவருக்கு மோகம் அதிகமாக இருந்தது. அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினான் மன்னன். இதையடுத்து அந்தப்பெண்ணை அழைத்து தனது திட்டத்தை விவரித்தான். அந்தப்பெண்ணுக்கு, அவர் விரும்பிய அத்தனை பரிசுப் பொருட்களையும் அளவில்லாமல் கொடுத்து ‘பல்ஆமை, மூஸா நபிக்கு எதிராக துஆச் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான்.

அந்தப்பெண்ணும், பரிசுப்பொருட்களுக்கு மயங்கி, தன் கணவனின் பலவீனத்தை பயன்படுத்தி அவரின் உறுதியை குலைத்தாள், மனதை கலைத்தாள். பெண்ணாசையில் மதிமயங்கிய பல்ஆம், மூஸா நபிகளுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய முன்வந்தார்.

நல்ல செயலுக்காக கொடுக்கப்பட்ட ஒரு சக்தியை தவறாக பயன்படுத்த முன்வந்ததால் அது இறைவனுக்கு கோபம் மூட்டியது. உடனே பல்ஆம்முக்கு அளித்த சிறப்புத்தன்மையை அவரிடம் இருந்து இறைவன் அகற்றினான்.

அது மட்டுமல்லாமல், மூஸா நபிக்கு எதிராக பிரார்த்தனை செய்ய ஒப்புக்கொண்ட அவரது நாக்கு மிக நீளமாக வளர்ந்தது. நாயின் நாக்கு எப்படி நீளமாக வெளியே தொங்கிக்கொண்டு இருக்குமோ, அப்படி அவரது நாக்கு வாய்க்கு வெளியே தொங்கியது. இந்த நிகழ்வு குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

“(நபியே!) நீங்கள் அவர்களுக்கு (“பல்ஆம் இப்னு பாஊர்” என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக்காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் (பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, சைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்”. (திருக்குர்ஆன் 7:175)

‘நாம் எண்ணியிருந்தால் நம் அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் சரீர இச்சையை பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது’ (திருக்குர் ஆன் 7:176).

இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கோடிட்டு காட்டுவது என்னவென்றால், மார்க்க அறிவில் சிறந்தவர்களும், மேதைகளும் கூட உலக இன்பங்களில் குறிப்பாக மண்ணாசை, பெண்ணாசை போன்றவற்றில் சிக்கி தங்கள் கவனத்தை சிதறடித்தால் நிச்சயமாக அது அவர்களுக்கு வழிகேடாகவே அமையும். தங்களுடைய சிறப்பு தன்மையை, ஞானத்தை, காத்துக்கொள்ள வேண்டும் என்றால் சிற்றின்பம் என்ற சிந்தனையைக் களைந்து மிக கவனத்துடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் வெற்றிகரமான வாழ்க்கை இவ்வுலகிலும், மறுவுலகிலும் கிடைக்கும்.

உலகில் ஒருவர் கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் வாழவேண்டும் என்றால் மனக்கட்டுப்பாடு மிக அவசியம். அப்படிப்பட்ட மனத்தூய்மை தந்து, எல்லோரும் நல்வாழ்வு வாழ, எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமின்.

(தொடரும்)

Next Story