ஆன்மிகம்

காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா + "||" + In kancipurat Varatharaja Perumal Street View

காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா

காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா
ஆண்டுதோறும் மார்கழி மாதம் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் வேடன் வேடத்தில் செவிலிமேட்டுக்கு புறப்பட்டு வரும் விழா நடத்தப்படுகிறது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலின் தல புராணத்தின்படி, ராமானுஜர் வழிதவறி காஞ்சீபுரம் செவிலிமேடு காட்டுப்பகுதியை வந்தடைகிறார். அப்போது அவருக்கு வேடன் ஒருவர் அடைக்கலம் தந்து, தினசரி பூஜைகளை செய்வதற்கு உதவுகிறார். பிறகு வேடன் வேடத்தில் உதவியது வரதராஜ பெருமாள்தான் என்பதை ராமானுஜர் உணர்கிறார். இதன் நினைவாக, அந்த இடத்தில் ராமானுஜருக்கு தனிக்கோவில் அமைக்கப்படுகிறது.


இந்த நிகழ்வையொட்டி ஆண்டுதோறும் மார்கழி மாதம் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பெருமாள் வேடன் வேடத்தில் செவிலிமேட்டுக்கு புறப்பட்டு வரும் விழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி செவிலிமேட்டில் அமைந்திருக்கும் ராமானுஜர் கோவிலுக்கு நேற்று முன்தினம் வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார். ராமானுஜர் கோவிலை அடைந்த பெருமாளுக்கு ராமானுஜர் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் செய்யும் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து, வேடர் வேடத்தில் பவனி வந்த வரதராஜ பெருமாளும், ராமானுஜரும், ராமானுஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு தேசிகர் மண்டபத்தை அடைந்தனர். பின்னர் விளக்கொளி கோவில் தெரு, சின்ன காஞ்சீபுரம் சாலை வழியாக வரதராஜர் கோவில் மாட வீதியை வந்தடைந்தனர். பின்னர் பெருமாளும், ராமானுஜரும் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு மண்டகப்படி திருவிழா நடைபெற்றது. பின்னர் வரதராஜ பெருமாள் மற்றும் ராமானுஜர் அவரவர் சன்னதிக்கு சென்றனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.