புராண கதாபாத்திரங்கள்


புராண கதாபாத்திரங்கள்
x
தினத்தந்தி 8 Jan 2019 7:03 AM GMT (Updated: 8 Jan 2019 7:03 AM GMT)

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...

கபிலா
தவ வலிமை மிகுந்தவர்களில் ஒருவர் கபிலா முனிவர். ஒரு முறை இவர் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது சகாரா என்ற மன்னனின் 60 ஆயிரம் பிள்ளை களால், கபிலா முனிவரின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட கபிலா முனிவர், அந்த 60 ஆயிரம் பேரையும் தன் பார்வையின் உக்கிரத்தால் எரித்து சாம்பலாக்கினார். இதனால் அவர்களின் ஆன்மா மேல் உலகம் செல்லாமல் தவித்தது. சகாரா மன்னனின் வழி வந்தவர் பகீரதன். இவர் தன்னுடைய முன்னோர்கள் சாப விமோசனம் பெற்று முக்தி அடைவதற்காக சிவனை நினைத்து தவம் செய்தார். இதையடுத்து ஆகாய கங்கையைக் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகித்தால், அவரது முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து பகீரதன் கடுமையான தவம் செய்து, ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்து, சிவனை பூஜித்தார். இதனால் அவரது முன்னோர்களுக்கு மோட்சம் கிடைத்தது.

கார்த்திகேயன்
கந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவர், தமிழ்க் கடவுள் முருகன் என்றும் பெயர் பெற்றுள்ளார். தேவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தி வந்த சூரபதுமர்களை அழிப்பதற்காக சிவபெருமானை அனைவரும் வேண்டினர். இதையடுத்து சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அதனை வாயு பகவான் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்கள் 6 பேரால் வளர்க்கப்பட்டனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். அன்னை பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக மாற்றி ஞானப் பால் ஊட்டினார். பின்னர் அவருக்கு சக்தி வேலை வழங்கி சூரபதுமர்களை அழிக்க அனுப்பி வைத்தார்.

கவுமோதகி
பகவான் கிருஷ்ணரின் கரங்களில் இருக்கும் கதையின் பெயரே கவுமோதகி. சங்கு, சக்கரத்தைப் போன்று மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கதாயுதம். அந்த கவுமோதகி என்னும் கதாயுதத்திற்கு, நீரின் கடவுளாக விளங்கும் வருண பகவானை, திருமால் பரிசளித்தார். அது காடவ காடுகளில் ஏற்பட்ட பெரும் நெருப்பினை அழிப்பதற்கு உதவியாக இருந்தது. பின்னாளில் இது நிகழும் என்பதை கருதிக் கொண்டே அவ்வாறு கிருஷ்ணர் செய் திருந்தார். அதன்படியே காடவ காடுகளின் நெருப்பினை கவுமோதகியின் சக்தியைக் கொண்டு வருண பகவான் தடுத்து நிறுத்தினார்.

கவுரவர்கள்
திருதிராஷ்டிரனின் மகன்கள், 100 பேர் கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருதிராஷ்டிரனின் மனைவியான காந்தாரி, வயசா என்ற முனிவரிடம் தனக்கு 100 பிள்ளைகள் வேண்டும் என்று வேண்டினாள். அதே வரத்தை அவர் அளித்தார். அதன்படி காந்தாரி கர்ப்பம் தரித்தாள். ஆனால் இரண்டு வருடங்களாக கர்ப்பத்தை தாங்கியிருந்தும், குழந்தை வெளிவரவில்லை. இதனால் காந்தாரி பெரும் வேதனை அடைந்தாள். அவரது கருவில் இருந்து வெளிப்பட்டது குழந்தையாக இல்லாமல், வெறும் சதை பிண்டமாக இருந்தது. அதனை வயசா முனிவர், 100 துண்டுகளாக்கும்படி உத்தரவிட்டார். அப்போது காந்தாரி தனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டும் என்று கேட்டாள். இதையடுத்து 101 துண்டுகளாக்கப்பட்டது. அந்த பிண்டங்கள் 100 ஆண் பிள்ளைகளாகவும், ஒரு பெண் பிள்ளையாகவும் உருவெடுத்தது. அவர்களே கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த கவுரவர்கள் அனைவரும் மகாபாரத குருஷேத்திரப் போரில் பாண்டவர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

Next Story