முதல் பாவத்தின் பரிகாரம்


முதல் பாவத்தின் பரிகாரம்
x
தினத்தந்தி 8 Jan 2019 7:18 AM GMT (Updated: 8 Jan 2019 7:18 AM GMT)

அல்லாஹ், ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களைப் படைத்து, அவர்களை எல்லாப் படைப்பினங்களையும் விட உயர்ந்த தன்மையுடையவராக உருவாக்கி, சொர்க்கத்தில் வாழ்ந்திருக்கச் செய்தான்.

ஆதம் (அலை) உயிர் பெற்று கண் விழித்து பார்த்த போது, அவர்கள் அருகில் ஒரு உருவம் வெண்மையான ஒளிப்பிழம்பாய் நிற்பதை கண்ணுற்றார்கள்.

“என் இறைவனே! இது என்ன ஒளிரும் வெண்மையில் ஒரு உருவம்” என்று வினவிய போது, ‘இது தான் உங்கள் சந்ததியில் சில ஆயிரம் காலங்கள் கடந்து தோன்றப் போகின்ற தாவூது நபிகள். அவர் அறுபது ஆண்டுகள் உலகில் உயிர் வாழ்வார்’ என்று அல்லாஹ் பதில் சொன்னான்.

ஆதம் நபிகள் அல்லாஹ்வை நோக்கி, “எனக்கு ஆயிரம் ஆண்டுகளை ஆயுளைத் தந்த என் இறைவனே, என்னுடைய வயதில் நாற்பது ஆண்டுகளை தாவூது நபிகளுக்கு கொடுத்து அவர்களை நூறு ஆண்டுகள் வாழச்செய் ரஹ்மானே” என்று வேண்டிக்கொண்டார்.

அல்லாஹ்வும் மனம் மகிழ்ந்தவனாக, “சரி அப் படியே ஆகட்டும்” என்றான்.

ஆதம் நபி முதன் முதலாக செய்த நன்மையான காரியம் ‘தர்மம்’ என்ற கொடைத்தன்மை ஆகும். தன்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தன்னுடைய ஆயுளில் இருந்து தர்மம் செய்தார்கள்.

ஒரு மனிதன் தர்மம் என்ற நல்லறத்தை செய் வதற்கு எதுவுமே தடையில்லை. தன்னிடம் எது இருக்கின்றதோ அதைக்கொண்டு தர்மம் செய்யலாம். பொருளாக இல்லை என்றால் தன்னிடம் உள்ள அறிவு, ஞானம் இவற்றை எல்லாம் கொண்டு தர்மம் செய்ய வேண்டும் என்கின்ற உண்மையை இது புலப்படுத்துகின்றது.

இறைவனின் மாபெரும் கருணையால், ஆதம் நபிகள் சொர்க்கத்தில் சிறந்த நிலையில் வாழ்ந்து வந்தார்கள். இதனால், அவர்கள் மீது பொறாமை கொண்டான் இப்லீஸ். அல்லாஹ் தடை செய்திருந்த கனியை ஆதம் நபிகளை புசிக்கச் செய்ய சதி ஆலோசனை செய்தான்.

அதை திருக்குர்ஆன் (7:20) இவ்வாறு குறிப்பிடுகிறது:

“தவறான எண்ணத்தை அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து; அவர்களை நோக்கி, ‘அந்த கனியைப் புசித்தால் நீங்கள் இருவரும் வானவர்களாகவோ, அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகி விடுவீர்கள், என்பதற்காகவே தவிர வேறெதற்காகவும் உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை’ என்று கூறியதுடன், ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருது கிறேன்’ என்று அவ்விருவரிடமும் சத்தியம் செய்து, அவர்களை மயக்கி, அம்மரத்தின் கனியைப் புசிப்பதற்காக அதன் பக்கம் அவர்களைச் செல்ல வைத்தான்”.

ஆதம் நபியின் எண்ணங்கள் தூய்மையாக இருந்த போதிலும், அவரை வழிகெடுத்து பாவத்தில் வீழ்ந்து விடும்படி செய்து விட்டான், சைத்தான்.

இந்த நிகழ்வை திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு பதிவு செய்கின்றான்:

“முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை”. (திருக்குர்ஆன் 20:115)

“எனினும் இப்லீஸாகிய சைத்தான் அதை காரணமாக வைத்து அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து சொர்க்கத்திலிருந்தும், அவர்கள் இருந்த மேலான நிலையிலிருந்தும் அவர்களை வெளியேறும் படி செய்து விட்டான்” (திருக்குர்ஆன் 2:36).

சைத்தானின் சூழ்ச்சியால் ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் அந்த கனியைப் புசிக்கவே, அதுவரை அவர்களைக் காத்து நின்ற புனித தன்மை அவர்களை விட்டு விலகியது.

“அவ்விருவரும் அந்த மரத்தின் பழத்தை சுவைக்கவே அவ்விருவரின் மர்ம உறுப்புகளும் அவர்களுக்குத் தெரிந்து, அச்சோலையின் இலையைக் கொண்டு தங்களை மூடிக் கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அது சமயம் இறைவன், ‘அம்மரத்தை விட்டும் நான் உங்களைத் தடுத்திருக்கவில்லையா? நிச்சயமாக சைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களுக்கு கூறவில்லையா’ என்று அவ்விருவரையும் அழைத்துக் கூறினான்.” (திருக்குர்ஆன் 7:22).

இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு சொல்லும் பாடம் என்னவெனில் மனிதன் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து முதல் பாவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அதற்கான தண்டனை என்று எதுவும் தரப்படவில்லை. இருந்தாலும் அதனை ஆழமாக சிந்திக்கும் போது தண்டனைக்கெல்லாம் சிகரமாய் அமையக் கூடிய மானபங்கம் என்ற பெரும் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதை உணர முடியும். உயிரினும் பெரிது மானம். அதற்கு அங்கே ஊறு விளைவிக்கப்பட்டிருக்கிறது. அந்தரங்க பகுதியை மறைத்துக் கொள்வதற்கு இலை தழைகளை தேடி ஓடுகிறார்கள். மானத்தை காக்க வேண்டும் என்ற உணர்வையும் மேலோங்கச் செய்கின்றான்.

திருக்குர்ஆனின் மற்றொரு இடத்திலே கணவனும் மனைவியும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் போது, “கணவன்-மனைவிக்கு ஆடை, மனைவி-கணவனுக்கு ஆடை” என்பதாக குறிப்பிடுக்கின்றான். அதாவது, ‘ஒருவர் மானத்தை ஒருவர் கட்டிக் காத்து வாழ வேண்டும்’ என்று கட்டளையிடுகின்றான்.

அல்லாஹ்வின் கட்டளைக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆதம் (அலை) மாறு செய்து விட்டார். அதனால் சொர்க்கத்தில் வாழும் அந்தஸ்த்தையும் இழந்து விட்டார்.

இந்தியாவும் இலங்கையும் ஒன்றாய் இணைந் திருந்த நிலப்பரப்பில் ஆதம் (அலை) இறக்கி விடப்பட்டார். அவர் இறங்கிய மலை “ஆதம் பாவா மலை” என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அது போன்று ஹவ்வா (அலை) சவுதி அரேபியா நாட்டில் ஜித்தாவில் உள்ள பாலைவனத்தில் இறக்கி விடப்பட்டார். எத்தனையோ ஆண்டுகள் இருவரும் கஷ்டங்கள் பல அனுபவித்து ஒருவரை ஒருவர் தேடி அலைந்து கடைசியில் மக்கா நகரில் அரபாவில் “ஜபலே ரஹ்மத்” எனும் மலைக்குன்றில் ஒன்றிணைந்தார்கள். அதன் பின் அவர்களின் உலக வாழ்க்கை ஆரம்பம் ஆனது.

அவர்கள் ஒருவரை ஒருவர் தேடி அலைந்த கால கட்டத்தில் தங்கள் தவறை நினைத்து வருந்தி பாவமன்னிப்பு கேட்டு வந்தார்கள் என்பதையும் அல்லாஹ் தெளிவு பெற கூறுகின்றான்.

“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள்புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டம் அடைந்தவர்களாகி விடுவோம்” என்று பிரார்த்தித்து கூறினார். (திருக்குர்ஆன் 7:23)

அது போன்று தான் நம் வாழ்க்கையிலும் பாவம் செய்யும் எண்ணம் இல்லை என்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் அல்லது கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் அல்லது பாவம் நடைபெறும் இடம் என தெரிந்தும், அது போன்ற இடங்களுக்கு சிலரின் வற்புறுத்தலால் செல்லும் போது, நாமும் பாவ வலையில் சிக்கிக்கொள்கிறோம். இதை அறிந்து அவற்றை தவிர்த்து வாழ வேண்டும்.

கிருபையுள்ள இறைவன் பாவங்களை மன்னிப்பதில் மாபெரும் கருணையாளன். நமது பாவங்களை மன்னித்து அருள்புரியும் கருணைக்கடல் அல்லாஹ்.

பாவங்கள் செய்வது மனித இயல்பு. பாவங்களை எண்ணி மனம் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அது எத்தனை பெரிய பாவமாயிருந்தாலும், இணை வைத்தலைத் தவிர்த்து விபச்சாரம், கொலை போன்ற பாவங்களையும் மன்னிக்கின்றேன் என்கிறான் அல்லாஹ்.

இந்த வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடம் இதுவே.

(தொடரும்)

Next Story