மஞ்சள் காப்பு சூடும் செல்லாண்டியம்மன்


மஞ்சள் காப்பு சூடும் செல்லாண்டியம்மன்
x
தினத்தந்தி 8 Jan 2019 8:04 AM GMT (Updated: 8 Jan 2019 8:04 AM GMT)

மேட்டு மருதூர் என்ற கிராமத்தில் உள்ளது செல்லாண்டியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் அழகிய முகப்பைக் கடந்ததும் விலாசமான மகா மண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வலதுபுறம் பிள்ளையார், மூஞ்சுறு, நாகர் திருமேனிகள் காணப்படுகின்றன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

கருவறையில் சப்த மாதர்களான பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, மகேஸ்வரி, சாமுண்டி ஆகியோரின் திருமேனிகள் ஒரே வரிசையில் வீற்றிருக்கின்றன. இந்த திருமேனிகளின் அமைப்பு, கண்களைக் கவரும் வனப்புடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சப்த மாதர்களின் வரிசையில் நடுவில் இருப்பது வைஷ்ணவி. இந்த வைஷ்ணவி தேவியையே, ‘செல்லாண்டியம்மன்’ என்ற பெயரில் பிரதான அம்மனாக பாவித்து வழிபாடு செய்கிறார்கள். ஆலயமும் செல்லாண்டியம்மன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

கருவறையில் சப்த மாதர்களுடன் விநாயகரும், அய்யனாரும் அருள் பாலிக்கின்றனர். சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்திற்கு கடந்த 12.06.11 அன்று குடமுழுக்கு திருவிழா நடந்துள்ளது. அந்த நாளையே ஆண்டு விழா நாளாக இங்கு கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் அன்னையருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன், ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

சித்ரா பவுணர்மி அன்று காவிரி நதியில் இருந்து சுமார் 500 பேர் பால் குடம், பால் காவடி, அலகு காவடி, தீச்சட்டி சுமந்து அன்னையின் ஆலயம் வருவர். சுற்றிலும் உள்ள கிராம மக்கள் இந்த நாளை ஆலய திருவிழா நாளாக கொண்டாடி மகிழ்வர். சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர்களை உடைய இந்த ஆலயத்தின் உள்ளே ஒரு பெரிய நாகமும் வசித்து வருகிறது. இந்த நாகம் அவ்வப்போது செல்லாண்டி அம்மனை தரிசிக்க கருவறை வரை வருவதுண்டாம். இந்த நாகம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை. மனித அரவம் கேட்டால் இந்த நாகம் தானாக வெளியேறி தன் புற்றுக்கு சென்றுவிடும்.

நடுநசியில் மெல்லிய கொலுசு சப்தத்தை இந்த கிராம மக்கள் கேட்டிருக்கிறார்கள். தற்போதும் கேட்டுக் கொண்டிருப்பதும் நிஜம். செல்லாண்டியம்மனே இரவு நேரத்தில் உலா வந்து ஊரை காப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இந்த ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த செல்லாண்டியம்மன் குலதெய்வமாக விளங்குகிறாள். குலமக்கள் அடிக்கடி ஆலயம் வந்து பொங்கல் வைத்து படைத்து, அன்னையருக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மகிழ்வது அடிக்கடி காணும் காட்சியாகும். கிடாவெட்டி படையல் போடுபவர்கள் ஆலயத்திற்கு வெளியில் இருந்தபடியே தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 7 மணி வரையும், மாலை 3 முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

மூலவராய் இருக்கும் வராகிக்கு மஞ்சள் காப்பிட்டு பிரார்த்தனை செய்தால் தடை பட்ட திருமணம் நடக்கும். கன்னியருக்கு விரைந்து திருமண பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் கூறுகிறார்கள்.

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மருதூரில் இறங்கி 1 கி.மீ. தொலைவு நடந்தால் மேட்டு மருதூர் வரும்.

Next Story