சாந்தை: பெண்களால் சிறப்படைந்த ராம காவியம்


சாந்தை:  பெண்களால் சிறப்படைந்த ராம காவியம்
x
தினத்தந்தி 8 Jan 2019 9:34 AM GMT (Updated: 8 Jan 2019 9:34 AM GMT)

இந்தத் தொடரின் மூலமாக ராமாயணம் என்னும் புகழ்பெற்ற காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி அறிந்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் தசரதனுக்கு குழந்தைப் பிறப்பதற்காக யாகம் செய்த கலைக்கோட்டு முனிவரையும், அவரது மனைவி சாந்தை குறித்தும் பார்ப்போம்.

பிறருக்காக வாழ்வதிலும், அவர்கள் நலம் வேண்டி
பிரார்த்தனை செய்வதிலும் தான்
வாழ்க்கை பூரணமடைகிறது.
அதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை.

தன் கணவரை பெருமிதத்துடன் கண் கொட்டாமல் பார்த்தாள் சாந்தை.

அவள் பார்வையை புன்னகையோடு ரசித்த கலைக்கோட்டு முனிவர் “சாந்தை” என்று அழைத்தார்.

கணவன் குரல் கேட்டதும் தன்னிலை அடைந்த சாந்தை அவரைப் பார்வையாலேயே ‘என்ன?’ என்று கேள்வி கேட்டாள்.

“என்னை ஏன் அப்படி பார்க்கிறாய் சாந்தை?” தெரிந்தும் கேட்டார்.

“பழைய நினைவுகள் அய்யனே”

சின்ன சிரிப்போடு அதை ஆமோதித்தார் கலைக்கோட்டு முனிவர்.

விபாண்டக முனிவரின் மகன் ரிஷ்யசிருங்கர். இவர் வெளி உலக வாசனையே அறியாமல் வளர்க்கப்பட்டவர். சாஸ்த்திர அறிவிலும், நான்கு வேத அறிவிலும் நான்முகனுக்கு இணையானவர். சிறந்த தவம் செய்தவர். இன்னும் செய்து கொண்டிருப்பவர்.

இறைவா! இவரைத் தன் அங்க நாட்டுக்கு அழைத்து வர எத்தனை பிரயத்தனம் செய்தார்கள்?

அங்க நாட்டு மன்னன் உரோமபாதன், தன் நாட்டில் மழை இல்லாததை நினைத்து வருந்தினான். அவனிடம் சில முனிவர்கள், “ரிஷ்ய சிருங்கர் உன் நாட்டுக்குள் வந்தால் வான் வெடித்து மழை பெய்யும்” என்றனர்.

‘அவரை எப்படி அழைத்து வருவது?’ என்று யோசித்த போது, அங்க நாட்டு ஆடல் மகளிர்கள் “நாங்கள் அவரை எங்கள் ஆடல், பாடல்களால் மயக்கி இந்த நாட்டுக்குள் அழைத்து வருகிறோம்” என்றார்கள்.

அழகும், இளமையும் நிறைந்த அந்தப் பெண்களை வியப்புடன் பார்த்த முனிவர், அவர்களையும் தவசீலீகள் என்று வணங்கினார். விபாண்டக முனிவர் இல்லாத நேரத்தில் அவரைச் சந்தித்து தங்கள் ஆடல், பாடல்களால் அவரை மகிழ்வித்தார்கள்.

ஒருநாள் அவர்களைப் பார்க்க முடியாவிட்டாலும் வேதனையில் தவிக்கும் வகையில் ரிஷ்ய சிருங்கரை மெல்ல மாற்றி தங்களுடன் அங்க நாட்டுக்கு அழைத்து வந்தார்கள். எல்லைக்குள் அவர் காலடி பட்டதுமே மழைத் துளிகள் பூமியை நனைத்தது. மழை வளம் பெருகி, விவசாயம் செழித்தது. வளம் பெருகியது.

உரோமபாத மன்னன், ரிஷ்ய சிருங்கருக்குத் தன் மகள் சாந்தையை மணமுடித்து, தன் நாட்டிலேயே வைத்துக் கொண்டான்.

அன்பான, அனுசரணையான, அறிவும், ஆற்றலும், தவச் சிறப்பும் மிக்க கணவன் என்று பூரித்தது சாந்தையின் மனம். மனைவிக்கு மதிப்பு அளித்து அவள் தன்னில் பாதி என்று நடத்துபவர். அவள் கருத்து கேட்டு, அது ஏற்புடையதாக இருந்தால் அதன் படி நடக்கிறவர்.

உன்னால்தான் எனக்கு இத்தனை பெருமைகள். உன் அதிர்ஷ்டம் என்று மனைவியைக் கொண்டாடுகிறார். தனக்குச் சமமாக அவளையும் அமர வைத்துப் பேசுகிறார். இதோ தசரத மன்னன் தனக்கு பிள்ளை வரம் வேண்டி யாகம் செய்வதற்காக அவரை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். அப்போது மனைவியை “நீயும் வா” என்கிறார் கலைக்கோட்டு முனிவர்.

“சாந்தை! நீ என்னில் பாதி. நான் எண்ணம்; நீ காரியம். ஒரு எண்ணமே காரியத்திற்குக் காரணம் ஆகிறது. உன் அன்பும், எனக்குப் பணிவுடன் நீ செய்யும் சேவைகளுமே என்னை மகிழ்வித்து நல்ல எண்ணங்களை எனக்குள் உருவாக்கு கிறது. உனக்கு சந்தோஷத்தை தர வேண்டும் என்று எண்ணுகிறேன். எது உனக்கு மகிழ்ச்சியைத் தரும். உன் கணவரை ஒருவர் புகழ்ந்தால். எப்போது புகழ்வார்கள்? என்னால் நல்லது நடந்தால். இடைவிடாமல் நான் இறை சக்தியை வேண்டியபடி இருக்கிறேன். மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டும். எதிரிகள் தொல்லை இன்றி இருக்க வேண்டும். மன்னனும், மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என்று.”

“ஆம் அய்யனே! எல்லோரும் என்னிடம் சொல்கிறார்கள். உன் கணவரின் தவமும், இறை சக்தியும்தான் நம் நாடு இன்று வளமாக இருக்கக் காரணம் என்று” மகிழ்வுடன் கூறினாள் சாந்தை.

“உன் மகிழ்வும், பூரிப்பும் உன் செயல்களில் தெரிகிறது பெண்ணே. என்னை அன்புடனும், பிரியத்துடன் கவனிக்கிறாய், நேசத்துடன் அரவணைக்கிறாய். என்னை மேலும் மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படு கிறாய். அதற்குப் பரிசாக உன்னை இன்னும் பூரிப் படைய வைக்க முயல் கிறேன்.”

ஆனால் இதையெல்லாம் ஒரு கொடுப்பினை என்று நினைத்தாள் சாந்தை. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் இப்படி மாற்றி, மாற்றி பெருமிதமும், பூரிப்பும் அடைய வைக்க முயல்வதும், இணை பிரியாமல் வாழ்வது எல்லோருக்கும் கிடைத்து விடுமா?

“பிரியமானவளே! இது உன் பூர்வ ஜென்ம புண்ணியம். நான் ஏகபத்தினி விரதன். இதே போல் பரம்பொருளும் ஏகபத்தினி விரதனாக வாழப் போகிறது. ஆனால் மனைவியைப் பிரிந்து, அவள் பொருட்டு, கடலில் பாலம் அமைத்து, அரக்கர்களை அழித்து வெற்றி பெற்றாலும், மனைவியைப் பிரிந்து உலகாயுதத் துன்பங்களில் வாடும் சராசரி மனிதனாக வாழப் போகிறது” வேதனையுடன் பேசினார் முனிவர்.

“ஆணவத்தால் உலகை அச்சுறுத்தும் அரக்கர்களை அழித்து, அறத்தை நிலை நிறுத்தப் போகிறார். அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பியவர். மனதையும், சித்தங்களையும் அடக்கியவர். தர்மத்தைப் பூரணமாக அறிந்தவர். உயரிய பண்புகளின் இருப்பிடமானவர். அவரின் மனைவி சீதையாக அன்னை மகாலட்சுமி பிறக்கப் போகிறார்.”

“நல்ல விஷயம் தானே. இதற்கு ஏன் வேதனை?” சாந்தை பரிவுடன் கேட்டாள்.

“சாந்தை! மகா புருஷன் சாதாரண மனிதனைப் போல் உலகியல் விஷயங்களில் சிக்கி அல்லலுற நான் காரணமாக வேண்டுமா? இந்த புத்திர காமேஷ்டி யாகத்துக்கு நான் செல்லத்தான் வேண்டுமா?”

“இதில் நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லையே அய்யனே. தனக்கு யார் தாய்- தந்தையர் என்று பகவான் முடிவு எடுத்து விட்டார். எத்தனையோ மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாரும் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்ய உங்களை அணுகவில்லை. இவர், இன்னாரிடத்தில் வந்து இதைச் செய்யச் சொல்லி கேட்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதை நானோ, நீங்களோ மாற்ற முடியாது.”- சாந்தை நிதானமாகப் பேசினாள்.

“நீங்கள் உத்தமர். மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவர். சிறந்த தவத்தைச் செய்பவர். உங்களைத் தவிர தகுதி வாய்ந்தவர் வேறு யாருமில்லை. இதுவும் ஒரு குறியீடு தான்.”

“குறியீடு என்றால்?”

“இந்தச் சம்பவம் ஒரு விஷயத்தை உலகுக்கு உணர்த்துகிறது. நல்ல எண்ணங்களும், குணங்களும், பண்புகளும் கொண்டவர் களிடம் மதிப்பும், மரியாதையும், பெருமையும் தானே வந்து சேரும் என்பது பிரபஞ்ச உண்மை.”

“ஆம், உண்மைதான். இதை நான் தேடித் போகவில்லை. தசரதர் தான் என்னைத் தேடி வந்தார்.”

“அதனால்தான் சொல்கிறேன். நடப்பது எதுவும் நன்மைக்கே. பகவான் மனிதனாகப் பிறந்து உலகச் சிக்கலில் சிக்கி அவதியுறப் போகிறார் என்றாலும், அதுவும் ஒரு நாடகமே. மனிதன் இப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக பகவானைத் தவிர வேறு யாரை உதாரணம் காட்டுவது. பரம்பொருள் சொல்லித் தராமல், வாழ்ந்து காட்ட வருகிறது. அது நாம் செய்த புண்ணியம். பேரதிர்ஷ்டம்.”- பரவசத்துடன் பேசினாள் சாந்தை.

மனைவியின் உற்சாகம் இப்போது முனிவரையும் தொற்றிக் கொண்டது. பரம புருஷனாம் ராமரின் ஜனனத்துக்கு காரணமான புத்திர காமேஷ்டி யாகம் செய்ய மனைவியுடன் அயோத்திக்கு கிளம்புகிறார் கலைக்கோட்டு முனிவர்.

யாகத்தின் முடிவில் தேவ புருஷன் பாயசக் கிண்ணத்துடன் வந்ததும், அதை தசரதர் தன் மூன்று மனைவிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து, அவர்களின் திரு வயிற்றில், தன் அம்சங்களுடன் அவதாரம் செய்கிறார் மகாவிஷ்ணு.

தனக்குக் கிடைத்த பாக்கியத்தை நினைத்து, உள்ளம் உருக நெகிழ்ந்து போகிறார் கலைக்கோட்டு முனிவர். அவரின் உற்சாகத்தில் மகிழ்ந்து போகிறார் சாந்தை. கருத்தும், செயலுமாய் நின்ற கணவன்- மனைவிக்கு உதாரணம் அவர்கள் இருவரும்.

-தொடரும்.


Next Story