கண் திருஷ்டியும்.. பரிகாரமும்..


கண் திருஷ்டியும்.. பரிகாரமும்..
x
தினத்தந்தி 11 Jan 2019 10:09 AM GMT (Updated: 11 Jan 2019 10:09 AM GMT)

கண் பார்வையால் ஏற்படும் தோஷத்தை ‘திருஷ்டி’ என்பார்கள். ‘திருஷ்டி’ என்பதற்கு ‘பார்வை’ என்று பொருள். “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி.

பார்வையை, சுப பார்வை, அசுப பார்வை என வகைப்படுத்தலாம். சித்தர்கள், ஞானிகள், ஆன்மிகவாதிகளின் பார்வை பலம் நிறைந்தது. அவர்களின் பார்வை படுபவர்களுக்கு சுப பலன் கிடைக்கும். சிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது. அதனால் எற்படும் பாதிப்பு, சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும்.

கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும்?, யாரை தாக்காது? என்பதை ஜோதிட ரீதியான காரணங்களைக் கொண்டு பார்க்கலாம்.

* ஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமையாக இருந்தால், அவரை கண் திருஷ்டி எளிதில் பாதிக்காது.

* லக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால், அந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்கும்.

* லக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தால், அவர்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். சிலருக்கு செய்வினையாக மாறவும் வாய்ப்புண்டு.

* லக்னாதிபதி 8-ல் மறைந்தவர்களுக்கு கண் திருஷ்டியால் விபத்து, அல்லது உயிர் பயம் இருந்து கொண்டே இருக்கும்.

* லக்னத்திற்கு 2, 12-ல் மாந்தி, சனி, ராகு-கேதுக்கள் இருப்பின், அவர்களின் கண் பார்வைக்கு கெட்ட சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம்.

திருஷ்டி தோஷ விளைவுகள்

கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு இருந்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சினை தீருவதற்குள், அடுத்த பிரச்சினை கதவைத் தட்டும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன் -மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருக்கும். சுப நிகழ்வுகளில் தடை, மருத்துவச் செலவு, உணவை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் போன்றவை உண்டாகும்.

தோஷ நிவர்த்தி

கண் திருஷ்டி நீங்குவதற்கு, ஒற்றைப் படை எண்ணிக்கையில் கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.

தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிதறுகாய் உடைக்கலாம்.

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

திருமணம், கிரகப்பிரவேசம், பிறந்த குழந்தையயும், தாயையும் வீட்டிற்கு அழைத்தல் போன்ற வைபவங்களில் கண் திருஷ்டியை குறைக்க ஆரத்தி எடுத்து திலகம் இட வேண்டும்.

சுப நிகழ்வுகளின் போது குலை தள்ளிய வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். அது திருஷ்டி தோஷம் வாழை மரத்தால் ஈர்த்துக் கொள்ளப்படும் என்பதால் தான். சுப நிகழ்வு முடிந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நிற்க வைத்து பூசணிக்காய் சுற்றி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத இடத்தில் உடைப்பதும் நல்ல பரிகாரம் தான். திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகா கணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை, திருஷ்டி தோஷத்தால் உடல் நலக்குறை இருந்து கொண்டே இருக்கும். கண்ணத்தில் திருஷ்டி பொட்டு வைப்பதுடன், கருப்பு கயிற்றில் நவக்கிரக ஸ்லோகம் ஜெபித்து 9 முடித்து போட்டு வலது காலில் கட்டிவிடுங்கள். அதோடு கணபதி ஹோம மையை நெற்றியில் வைக்க நோய் தாக்கமே இருக்காது.

வீடு- அலுவலக பரிகாரங்கள்

வீடு, அலுவலகத்தின் மீது திருஷ்டி படாமல் இருக்க, பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி, கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிவப்பு மீன்களை வளர்க்கலாம்.

காலை, மாலை நேரங்களில் வீடு, அலுவலகத்தில் விஷ்ணு சகஸ்ஹர நாமம், காயத்திரி மந்திரம், சாந்தி மந்திரம், திருக்கோளாற்று பதிக பாராயணம் ஒலிக்க செய்யலாம்.

வீட்டு வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.

போட்டி, பொறாமையால் வியாபாரத்தில் தொய்வு, கடன் தொல்லை இருந்தால் செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்யுங்கள். மேலும் குலதெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றி, மல்லிகை பூவினால் அர்ச்சனை செய்ய வியாபாரம் விருத்தியாகும்.

வியாபாரம், தொழில் நிறுவனங்களில் திருஷ்டி நீங்க வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை வெட்டி, ஒரு பகுதியில் குங்குமத்தையும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியையும் தடவி வைக்கலாம்.

வளர்பிறை செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற் கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஜவ்வாது ஆகியவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை, பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ தெளிக்க தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.

பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி.

Next Story