மகப்பேறு வரம் அருளும் மஞ்சக்கொல்லை குமரன்


வள்ளி-தெய்வானை சமேத முருகன்
x
வள்ளி-தெய்வானை சமேத முருகன்
தினத்தந்தி 22 Jan 2019 6:59 AM GMT (Updated: 22 Jan 2019 6:59 AM GMT)

நாகப்பட்டினம் அருகே உள்ளது மஞ்சக்கொல்லை குமரன் கோவில். இந்த ஆலயம் கந்த சஷ்டி விழாவிற்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது.

சூரசம்ஹாரத்திற்காக அன்னை பார்வதி யிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்வு சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும். அந்த நிகழ்வின் போது, முருகப் பெருமானின் முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்றுவது, சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆச்சரியம் என்பது உலகம் அறிந்த உண்மை. சிக்கலுக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள மஞ்சக்கொல்லை குமரன்கோவில் தலத்திலும், இதே அதிசயம் நிகழ்வது பலரும் அறிந்திராத செய்தியாகும்.

தலவரலாறு

தேவலோகத்தில் ஒரு சமயம் பேரழகியான திலோத்தமையின் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அவளின் நடனத்தைக் கண்டு ரசித்த பிரம்மனுக்கு, அவள் மீது மோகம் ஏற்பட்டது. அதை அவளிடம் கூறினார். அதற்குத் திலோத்தமை `படைப்புத் தொழிலைச் செய்யும் தாங்கள் எனக்கு தந்தை போன்றவர். நான் உங்கள் மகள் போன்றவள்' என்று கூறி, பிரம்மனின் விருப்பத்தை மறுத்தாள். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், ‘நீ பூமியில் தாசியாக பிறப்பாய்’ என சாபமிட்டார். தன் மீது தவறேதும் இல்லாத நிலையில் சாபமிட்ட பிரம்மன் மீது கோபங்கொண்டாள், திலோத்தமை.

‘உன்னுடைய தவறை சற்றும் உணராமல் சாபமிட்ட உனக்கு, பூமியில் தனியே ஆலயம் இல்லாது போகட்டும்’ என்று திலோத்தமையும் பதில் சாபமிட்டாள். இருவரின் சாபமும் பலித்தது.

திலோத்தமை காஞ்சீபுரத்தில் தாசி குலத்தில் தோன்றினாள். பருவமடைந்த அவள், விதிப்பயனால் அந்தணன் ஒருவனின் சாபத்துக்கு ஆளாகி தன் அழகை இழந்தாள். சாப விமோசனம் வேண்டி பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபட்டாள். நிறைவாக ‘குங்குமாரண்யம்’ என்று அழைக்கப்படும் மஞ்சக்கொல்லை தலம் வந்தாள். அங்கே அவள் வந்த நாள், கார்த்திகை மாதம், ஞாயிற்றுக்கிழமை. பின்னர் அங்குள்ள ஞானத் தீர்த்தத்தில் நீராடி, ஞானலிங்கப் பெருமானைத் தரிசித்ததும் அவளின் சாபம் நீங்கியது. தன் இயல்பான அழகிய உருவம் பெற்றாள். அப்போது வானில் புஷ்பக விமானம் தோன்றியது. தேவலோகம் அவளை இருகரம் கொண்டு வரவேற்றது. திலோத்தமை தன் சாபம் நீங்கி இயல்பான நிலையில் வாழத் தொடங்கினாள். ஆனால் பிரம்மனுக்கு இவள் கூறிய சாபம் நிலைத்துவிட்டது.

இந்த சாப விமோசன தலத்தில் இருக்கும் சிவகுமாரனும், தனிச்சிறப்பு பெற்றவராகத் திகழ்கின்றார். சூரசம்ஹாரத்தின் போது சிக்கல் சிங்காரவேலனுக்கு வியர்வைத் துளிகள் தோன்றுவது போல, இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானுக்கும் வியர்வைத் துளிகள் தோன்றுவதை பார்க்கலாம். இந்த வியர்வைத் துளிகள் குழந்தைப்பேறு வேண்டுவோருக்கும், கர்ப்பிணி களுக்கும் அருமருந்தாகப் போற்றப்படுகிறது.

சிவபெருமானின் திருமுகத்தில் தோன்றிய தீப்பொறிகளின் ஒன்றிணைப்பே முருகப்பெருமானின் அவதாரம் என்கின்றது புராணங்கள். இத்திருவிளையாடலின் போது பார்வதி அச்சமடைந்து ஓடியதால், அன்னையின் சிலம்பில் இருந்து நவமணிகள் சிதறி நவசக்திகளாக உருவம் கொண்டன. அந்த நவசக்தியே, வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசுவரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என நவ வீரர்களாகத் தோன்றின. இவர்களே சூரசம்ஹாரத்தில் முருகப் பெருமானுக்கு துணை நின்றவர்கள் ஆவர்.

இந்த ஐதீகத்தையே இத்தலத்தில் பின்பற்று கிறார்கள். இங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு முருகன் கோவிலுக்கு, ‘சஷ்டி சூரசம்காரம்’ என்ற விருத்திப் பாடலைப் பாடியபடி காலை, மாலை என இரு வேளைகளிலும் வருவது வழக்கம். சூரசம்ஹாரத்தன்று ஊர்ப் பெரியவர் ஒருவர், வேல் வகுப்பு பாடியபிறகு, வேல் வாங்குவார். அப்போது உற்சவரான விஜய வேலாயுதசுவாமிக்கு முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்றுவதைக் காணலாம்.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. ஆலயத்தில் மயில்மேடை, பலிபீடம், நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், திரு முறைக்கோவில், சுதை துவாரபாலகர்கள், கிழக்கு முகமாய் மூலவர் ஞானலிங்கேஸ்வரர், எதிரே நந்திதேவர், தெற்கு முகமாய் அன்னை ஞானவல்லி, வள்ளி-தெய்வானையுடன் வெற்றி வேலாயுத சுவாமி, தட்சிணாமூர்த்தி, சமயக்குரவர், சந்தானக்குரவர் என ஒருங்கே அமைந்துள்ளனர். மூலகணபதி, பொய்யாமொழி விநாயகர், ஜமதக்கினி முனிவர், மகாலட்சுமி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சுமத்திரசண்டர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் உள்ளிட்ட சிலா வடிவங்களும் ஒருங்கே அமைந்துள்ளன.

இவ்வாலயத்தில் உற்சவராக விஜய வேலாயுத சுவாமி வள்ளி-தெய்வானையோடு காட்சி தருகிறார். இவரே வீதியுலா வந்து சூரசம்ஹாரத்திலும் காட்சிதருவார். வியர்வைத் துளிகள் இவரிடம் இருந்தே தோன்றும். இதுதவிர, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர், தியாகராஜர், கமலாம்பாள், சோமாஸ்கந்தர் என உற்சவத் திருமேனிகளும் எழிலாக அமைந்துள்ளன. இத்தலத்தின் தலமரமாக வில்வ மரமும், தலத் தீர்த்தமாக ஞானத் தீர்த்தமும் உள்ளன.

இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

நாகப்பட்டினம் நகரில் இருந்து, சிக்கல் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில், மஞ்சக்கொல்லை திருத்தலம் அமைந்துள்ளது. ஆட்டோ, பஸ் வசதிகள் உள்ளன. ஞானலிங்கேஸ்வரர் மூலவராக இருந்தாலும், இந்த ஆலயத்தை குமரன்கோவில் என்றே அழைக்கின்றனர்.

Next Story