தீமையை நன்மையினால் வெல்வது எப்படி?


தீமையை நன்மையினால் வெல்வது எப்படி?
x
தினத்தந்தி 24 Jan 2019 9:45 PM GMT (Updated: 24 Jan 2019 10:21 AM GMT)

உலக வாழ்க்கையில் நீந்தும் ஒவ்வொரு வருக்குமே தடைகள், இன்னல்கள், இழப்புகள் வருகின்றன. ஒவ்வொன்றில் இருந்தும் நன்மை, தீமைகளை அறிவதோடு, வாழ்க்கையை இறைப்பாதையை நோக்கி திருப்பிக் கொள்வதற்கான அழைப்பாகவும் அந்த சம்பவங்கள் அமைகின்றன.

எந்தவித நன்மை - தீமை என்றாலும் அது இறைவனின் கவனத்துக்கு வராமல் மனிதனை அணுகுவதில்லை என்று வேதம் கூறுகிறது.

மனதை கசக்கிப்பிழியும் ஒவ்வொரு துயர சம்பவங்களில் இருந்தும் புதிய பாடங்களை இறைவன் நமக்குக் கற்றுத் தருகிறார். நமது மன எண்ணங்களில் அதற்கான சிந்தனைகளை இறைவன் ஏற்படுத்துகிறார். ஆனால் அவற்றை பெரும்பாலானோர் பிற்காலங்களில் மறந்துவிடுவதுண்டு. அதை ஆராய்ந்து பின்பற்றுவதில்லை. ஏதோ வினைப்பயனாக அந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டதாக நினைக்கின்றனரே தவிர, அது தந்த படிப்பினைகளின்படி வாழ்க்கையை சீர்படுத்திக்கொள்வதில்லை.

கிறிஸ்தவ பாதையை பின்பற்றிச் செல்வோருக்கு இயேசு அளித்துள்ள கட்டளைகள், பெரும்பாலும் இயல்பு நிலைக்கு ஒத்துப்போவதாக இருப்பதில்லை. ‘அடித்தவனை திருப்பி அடிக்காமல் பொறுத்துக்கொள்; எதையாவது பறித்துக்கொள்ள நினைத்தால் அதை அவனிடமே விட்டுக்கொடுத்துவிடு; துன்புறுத்துவோர் மீது புகார், வழக்கு கொடுக்காதே; துரோகியையும் மன்னித்துவிடு’ என்று இயல்பு வாழ்க்கைக்குப் பொருந்தாத கட்டளைகளை இயேசு பிறப்பித்துள்ளார்.

இதை வாழ்க்கை நடைமுறையில் பின்பற்று வதற்கு மலைப்பாகவே பலருக்கும் தோன்றும். ஆனால் இயேசு நடந்துகாட்டியுள்ள இந்தப் பாதையில் செல்ல ஒருவன் முழுமனதோடு முடிவு செய்துவிட்டான் என்றால், அந்த கட்டளைகளை வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய பலத்தையும் அவரே அளிக்கிறார்.

எனவேதான் மரணத்துக்கு உட்படுத்துபவனையும் உண்மைக் கிறிஸ்தவன் தனது இறுதி நிமிடங்களில்கூட மன்னிக்கிறான். பல்வேறு கொள்கைக்காக சாவுக்கும் அஞ்சாமல், நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்கள் உலகத்தில் பலர் இருக்கலாம். ஆனால் கொலை செய்பவனையும் மன்னிப்பதற்காக நெஞ்சை நிமிர்த்துபவன் உண்மைக் கிறிஸ்தவன் மட்டுமே.

இயேசுவின் கட்டளைகளை இறுதிவரை பின்பற்றுகிறானா என்பதற்கான சோதனைகளை பக்தன் கடந்து செல்ல வேண்டியதுள்ளது. அந்த வகையில் அலறவைக்கக் கூடிய சில சம்பவங்கள், அவனது வாழ்க்கையில் அனுமதிக்கப்படுகின்றன. அதன்படி, உண்மைக் கிறிஸ்தவனுக்கு திடீரென்ற இழப்புகள், சோதனைகள், உபத்திரவங்கள் வந்து சேருவதை தவிர்க்க இயலாது.

அதுபோன்ற உபத்திரவங்கள், உறவினர்களாலோ, நண்பர்களாலோ, உடன் பணியாளர்களாலோ, அருகில் வசிப்பவர்களாலோ நேரிடலாம். அந்த நேரங்களில் பக்தியை காப்பாற்றிக்கொள்வதற்காக எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதை இறைவன் தெளிவுபடுத்தியுள்ளார். அதை ரோமர் 12:19,20,21-ம் வசனங்களில் காணலாம்.

அந்த வசனங்களில், “யாரையும் பழிவாங்கக்கூடாது. உன்னை எதிரியாக கருதுபவன் பசி, தாகத்தில் இருந்தால் அவனுக்கு தேவையான போஜனம், பானங்களைக் கொடு. அப்படிப்பட்ட நன்மைகளைச் செய்தால், தீமையினால் வெல்லப்படாமல், தீமையை வென்றுவிடலாம்” என்ற கருத்துகளை வகுத்தளித்துள்ளார்.

இந்த வசனங்கள் பல கேள்விகளை உருவாக்கும் (ரோமர் 10:17). யாராவது நமக்கு ஏதாவது தீமையைச் செய்துவிட்டால், அவனை பதிலுக்கு எதிர்த்தால்தானே மீண்டும் அவனால் ஏற்படும் இழப்புகள், தீமைக்குள் சிக்காமல் இருக்கலாம் என்ற எண்ணங்கள் தோன்றும்.

உலக இயல்பு வாழ்க்கையில் நடப்போருக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுவதும், தீமைக்குத் தீமை செய்வது இயல்பானதுதான்.

அதன்படி, தீமை செய்தவர்கள் மீது அவர்கள் புகார் அளிக்கலாம்; வழக்கு தாக்கல் செய்யலாம்; மற்றவர்களை அழைத்து நியாயம் பேசலாம்.

இயல்பு வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவர்களின் மனச்சாட்சிப்படி அந்த நடவடிக்கைகள் தவறல்ல. உலகமும் அதற்கேற்ற நடைமுறைகளை வகுத்தளித்துள்ளது. (குற்ற ரீதியான நடவடிக்கைகள் தான் தவறு)

ஆனால் இறைப்பாதையில் இருப்பவர்களுக்கான நடைமுறை அதுவல்ல. தீமை செய்தவருக்கு எதிராக, உலக ரீதியிலான (புகார், வழக்கு போன்ற) நடவடிக்கைகளை மேற்கொண்டாலே அது தீமையாக ஆகிவிடும். பிறர் செய்த தீமையால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டத்தான் புகார், வழக்கு தாக்கல் செய்கிறேன் என்று அதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கிவிட்டால், ஒரு கட்டத்தில் பொய், பகை, பழிவாங்குதல் போன்ற நிலைக்கு பக்தனை அவை இழுத்துச் சென்றுவிடும்.

அப்படி சென்றுவிட்டால், “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில் செய்வேன்” என்ற இறைவார்த்தையில் இருந்து விலக வேண்டியதாகிவிடும். அது பக்தனுக்கு எதிரான பாவமாக அமைவதோடு, அவன் மேலும் பல பிரச்சினை களுக்குள் மீளமுடியாமல் சிக்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். அவற்றில் இறைவனின் உதவி கிடைக்காது. அந்த நிலையைத்தான், ‘பக்தனை தீமை வென்றுவிடும்’ என்று வேதம் குறிப்பிடுகிறது.

தீமை செய்தவனுக்கு நன்மையையும் தீமையையும் செய்யும் வாய்ப்புகளை இறைவன் உருவாக்கித் தருகிறார். இவற்றில் நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பது, அவர் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் அளவைக்காட்டும். இதுபோன்ற சம்பவங்களின் மூலமாகத்தான், “வசனத்தினால் கேள்வி எழும், கேள்வியினால் விசுவாசம் வரும்’’ என்ற வசனத்தின் ஆழ, அகலத்தை உணரமுடியும்.

தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வது என்பது, இயல்பு வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இயலாத காரியம். ஆனால் இறைபக்தர்களுக்கோ, ‘தீமை செய்தவருக்கும் நன்மை செய் என்ற இறைக்கட்டளையை பின்பற்ற முழுமனதோடு விரும்புகிறேன்’ என்று முன்வந்தால், நன்மைகளை செய்ய ஆவியில் பலம் அளிக்கப்படுகிறது. அந்த பலத்துடன் அவன் நன்மையை மட்டுமே செய்கிறான். அந்த வகையில், தீமை மேற்கொண்டுவிடாதபடி அதை நன்மை செய்வதன் மூலம் பக்தன் வெல்கிறான்.

இப்படி தீமை செய்தோருக்கும் நன்மை செய்வது மற்றொரு வகையான பிரதிபலனை தருகிறது. அதாவது, பக்தனுக்கு செய்யப்பட்ட இழப்பு நீக்கப்பட்டு ஒரு காலகட்டத்தில் அதே நன்மைகளோ அல்லது கூடுதல் நன்மைகளோ வந்து கிடைத்துவிடுகிறது. எனவே யாராவது தீமை செய்துவிட்டால், மிகப் பொறுமையாக நடந்துகொண்டு, பதிலுக்கு தீமை செய்யாமல், நன்மையைச் செய்யும் முடிவோடு காத்திருந்தால், மற்றொரு கட்டத்தில் மிகப்பல நன்மை களுக்கு பக்தன் சொந்தக்காரன் ஆகலாம்.

-ஜெனட், சென்னை.

Next Story