எண்ணிக்கை வடிவங்களில் விநாயகர்


எண்ணிக்கை வடிவங்களில் விநாயகர்
x
தினத்தந்தி 29 Jan 2019 3:10 PM GMT (Updated: 29 Jan 2019 3:10 PM GMT)

முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான், உலகெங்கும் போற்றி வழிபடும் தெய்வமாகத் திகழ்கிறார்.

இவரை ஒரு விநாயகர் முதல், கோடி விநாயகர் வரை எண்ணிக்கை வடிவங்களில் வழிபடுகிறார்கள். அதுபற்றி சிறு தகவல் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

ஏக தந்தன்

‘ஏகம்’ என்பதற்கு ஒன்று என்று பொருள். ஏகாட்சரன், ஏகதந்தன், ஒற்றைக்கொம்பன், ஒற்றை மழுவன் என ஒன்று எண்ணிக்கையில், விநாயகர் வணங்கப்படுகிறார்.

இரட்டைப் பிள்ளையார்

ஒரு தெய்வத்தை இரண்டாக வைத்து வழிபடும் வழக்கம், பல நூறு ஆண்டுகளாகத் தொடர்கிறது. இப்படி இரண்டு விநாயகர்கள் அருள்வதை ‘இரட்டைப் பிள்ளையார்’ என்கிறார்கள். இந்த அமைப்பு தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இன்றும் காணப்படுகின்றன.

மூன்று விநாயகர்

மா, பலா, வாழை எனும் முக்கனிகளை விரும்பி உண்ணும், மூஷிக வாகனன் என்றும் விநாயகரை அழைக்கின்றனர். முக்கனிகளை இறைவனுக்குப் படைக்க நிவந்தங்கள் ஏற்படுத்திய செய்தியை, தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. முச்சந்தி விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், மும்முக விநாயகர், மும்முடி விநாயகர், முக்குறுணி விநாயகர் (மூன்று குருணி), மூவடுக்கு விநாயகர், முக்கால விநாயகர், மும்மதத்தன் என மூன்று விநாயகருக்குப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் மூன்று விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.

சதுர்முக விநாயகர்

சதுர் என்பது நான்கைக் குறிக்கும். அரிய கோலமான பிரம்ம கணபதியாக காட்சியளிக்கும் இவர், ‘சதுர்முக விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். சதுர்முகி, சதுக்கப் பிள்ளையார் என்ற பெயரிலும் சில தலங்களில் விநாயகர் உள்ளார். சூரிய மண்டலத்தில் வீற்றுள்ள கணபதி, ‘சவுர விநாயகர்’ எனப்படுகிறார்.

பஞ்சபூத விநாயகர்

பஞ்சலிங்கப் பிள்ளையார், பஞ்சபூத விநாயகர், பஞ்சாட்சர விநாயகர், பஞ்சசந்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர், ஐங்கலக்காசு விநாயகர் உள்ளனர். இதில் ஐங்கலக்காசு விநாயகர் திருவாரூரில் மூலட்டநாதர் சன்னிதி அருகேயும், பஞ்சசந்தி விநாயகர் காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலிலும் உள்ளனர்.

சப்தவிடங்க விநாயகர்

திருவாரூர், திருக்காரவாசல், திருக்கோளிலி, திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருமறைக்காடு, திருவாய்மூர் என சிவபெருமானின் சப்தவிடங்கத் தலங்களில் வாழும் விநாயகர், ‘சப்தவிடங்க விநாயகர்’ என அழைக்கப்படுகிறார்.

எண்திசை விநாயகர்

திருவண்ணாமலை, திருக்கடையூர் தலங்களில் மாடவீதிகளின் எட்டுத் திசைகளிலும் எட்டு விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவரே ‘எண்திசை விநாயகர்’ ஆவார். இது தவிர, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என எட்டு இடங்களில் இருந்து வழிகாட்டும் விநாயகர் ‘அஷ்டமூர்த்திகள் விநாயகர்’ என்று வழங்கப்படுகிறார். சிவபெருமானுக்கு அட்டவீரட்டத் தலங்கள் உள்ளது போல, விநாயகப் பெருமானுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் அஷ்ட கணபதி தலங்கள் இருக்கின்றன.

நவசக்தி விநாயகர்

நவரத்தினங்களால் ஆன விநாயகரை, ‘நவரத்தின விநாயகர்’ என்கிறோம். இதே போல, நவக்கிரக விநாயகர், நவசக்தி விநாயகர், நவசந்தி விநாயகர் என ஒன்பது எண்ணிக்கையிலும் விநாயகர் அருள்கிறார். மயிலாப்பூர் லஸ் கார்னரில் புகழ்பெற்ற நவசக்தி விநாயகர் ஆலயம் உள்ளது.

ஏகாதச விநாயகர்

‘ஏகாதசம்’ என்பது பதினொன்றைக் குறிக்கும் சொல். சிவபெருமானிடம் தோன்றிய ருத்திரர்களை, ஏகாத ருத்திரர்கள் என்பது வழக்கம். இதேபோல, விநாயகரையும் பதினோரு வடிவங்களில் அமைத்து வழிபடுவது ‘ருத்ரகணபதி’ ஆகும்.

திருவள்ளூர் மாவட்டம், திருப்பாசூர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலத்தில் ஒரே இடத்தில் பதினோரு பிள்ளையார்கள் விற்றிருக்கின்றனர். அந்த இடத்திற்கு ‘விநாயகர் சபை’ என்று பெயர்.

பன்னிரு திருநாம விநாயகர்

பன்னிரு சூரியர்கள், விநாயகரை வணங்கும் போது, அவர்களுக்கு பன்னிரண்டு வடிவங்களாக விநாயகர் காட்சியளித்தார் என்று விநாயகர் புராணம் சொல்கிறது. இந்தப் பன்னிரு விநாயகரைப் பாடித் துதித்ததால், ஆயிரம் பெயர்களைச் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

32 கணபதி

விநாயகர் தன் பக்தர்களைக் காத்தருள பல்வேறு வடிவங்களைக் காட்டியருளினார். இருப்பினும் அவற்றில் 32 வடிவங்கள் மட்டுமே பெருமைக்குரியதாக போற்றப்படுகிறது.

51 விநாயகர்

லலிதா பரமேஸ்வரி வழிபாட்டில் 51 விநாயகர் பெயர்களும், அவருக்கான தேவியரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

57 விநாயகர்

காசி மாநகரில் ஏழு ஆவரணங்களில் தலா எட்டு பேர் வீதம் ஐம்பத்து ஆறும், நடுவில் ஆதி மூர்த்தியாக துண்டி விநாய கரும் சேர்ந்து, 57 விநாயகர் அமைந்துள்ளனர்.

108 விநாயகர்

சமய வழிபாட்டில் 108-க்கு தனிச்சிறப்பு உள்ளது. 108 சிவலிங்கங்கள், 108 சக்தி பீடங்கள், 108 திவ்ய தேசங்கள் போன்றவை இதனை உறுதி செய்கின்றன.

திருவள்ளூர் மாவட்டம், சின்னக்காவனம் தலத்தில் அகத்தியர் உருவாக்கிய விநாயகர், 108 சிவலிங்கத்தின் ஒருங்கிணைப்பு என தலபுராணம் கூறுகிறது. இதேபோல, திண்டுக்கல் நகரில் நன்மை தரும் விநாயகர் கோவிலில் 108 விநாயகர் இருக்கிறார்.

ஐநூற்றுவர்

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் தலத்தில் உள்ள விநாயகருக்கு ‘ஐநூற்றுவர்’ என்ற திருப்பெயர் வழங்கப்படுகிறது.

கரும்பாயிரம் விநாயகர்

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் கரும்பாயிரம் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்து விநாயகர், பக்தரின் வேண்டுதலை நிறைவேற்றி, ஆயிரம் கரும்புகளைக் காணிக்கையாக ஏற்றதால், விநாயகருக்கு இப்பெயர் வழங்கலானது.

மழை தந்த பிள்ளையார்

திருவாலவாய் உடையார் திருவிளையாடல் புராணம் எழுதிய பெரும்பற்றப்புலியூர் நம்பி தோன்றிய ஊர் வேம்பத்தூர். இங்குள்ள விநாயகர் ‘2008 விநாயகர்’ என அழைக்கப்படுகிறார். மழை வேண்டி 2008 விநாயகரை வைத்து வேள்வி செய்ததால் மழை பெய்தது. அதற்கு நன்றிக்கடனாக 2008 பேருக்கு வீடு, நிலம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

நாலாயிரம் பிள்ளையார்

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அடுத்த கோசக்குடியில் உள்ள விநாயகர் ‘நாலாயிரம் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார். நான்காயிரம் அந்தணர்களை ஆதரித்து உருவான விநாயகர் என்பதால், இப்பெயர் வழங்கலானது.

பொள்ளாப் பிள்ளையார்

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் உள்ள பொள்ளாப் பிள்ளையாருக்கு, ‘நாற்பத்தெட்டாயிரம் பிள்ளையார்’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இந்தப் பகுதியில் வாழ்ந்த வேளாளர்கள், தங்கள் பாதுகாப்புக்காக உருவாக்கிய சேனையின் எண்ணிக்கையே, விநாயகருக்கும் வந்துவிட்டது. இதனை இங்குள்ள கல்வெட்டு உறுதிசெய்கிறது.

கோடி விநாயகர்

சுவாமிமலை அருகே உள்ள கொட்டையூர் சிவபெருமான், கோடி வடிவம் கொண்டு காட்சி தந்ததால், ‘கோடீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். அதுபோல அத்தலத்து விநாயகரும் ‘கோடி விநாயகர்’, முருகன் ‘கோடி முருகன்’ என்று வழங்கப்படுகிறார்கள்.

- பனையபுரம் அதியமான்

Next Story