சகல நன்மைகளும் அருளும் தை அமாவாசை


சகல நன்மைகளும் அருளும் தை அமாவாசை
x
தினத்தந்தி 29 Jan 2019 3:25 PM GMT (Updated: 29 Jan 2019 3:25 PM GMT)

4-2-2019 தை அமாவாசை

ஒரு வருடத்தில் ஆடி மாதம் முதல் மார்கழி முடிய உள்ள ஆறு மாத காலமான தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். அந்த நேரத்தில் ஒருவரது முன்னோர்கள் அவரை காப்பாற்ற பித்ருலோகத்தில் இருந்து வருவார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் அளிக்கப்படுகிறது. தர்ப்பணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் முன்னோர்கள், புரட்டாசி மாத மகாளய அமாவாசையன்று பூமிக்கு வருவதால், புரட்டாசி மாதமும் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பின்னர் தை மாதம் மறுபடியும் தங்களுடைய லோகத்துக்குத் திரும்பும் அவர்களுக்கு நன்றி சொல்லி வழியனுப்பும் விதமாக தை அமாவாசை தர்ப்பணமும் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த கலியுகத்தில் பிதுர்கள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும், சூட்சும வடிவில் நம்மை பார்த்து ஆசியளிப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒருவரது பிள்ளை என்ற முழு தகுதியையும் ஒருவர் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரை கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாக செய்திருக்க வேண்டும். “பித்ருக்களுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நினைப்பவன் புத்தியில்லாத மூடன்” என்று கடோபநிஷதத்தில் நசிகேதன் என்ற சிறுவனுக்கு எமதர்மன் கூறுகிறார்.

உத்தராயண காலம் தை மாதத்தில் தொடங்குவதால் தை அமாவாசையும், தட்சணாயன காலம் ஆடி மாதத்தில் தொடங்குவதால் ஆடி மாத அமாவாசையும் பிதுர் வழிபாட்டிற்கு ஏற்றவை என்றும் சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

தந்தைக்கு பித்ரு கர்மாக்களை செய்பவர்கள் அமாவாசை தினத்திலும், அன்னைக்கு பித்ரு கர்மாக்களை செய்பவர்கள் பவுர்ணமி தினத்திலும் மேற்கொள்வது புராதன காலம் முதல் இருந்து வரும் வழக்கமாகும். தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களுக்கான கடனை சரியாக நிறைவேற்றுவதால் பல நன்மைகள் உண்டாகும்.

பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறியதன் அடிப்படையில் ராமர், தசரதருக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார். பின்னர், சிவபெருமான் ராமரின் முன் தோன்றி, தர்ப்பணம் செய்ததால் அனைத்து பாவங்களும் நீங்கி நன்மைகள் தேடி வரும் என்று சொன்னதாக புராணங்கள் உரைக்கின்றன.

தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மன் அனுமதி தரும் நிலையில் எம தூதர்கள் பித்ருக்களை சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்கள் அவர்களது சந்ததியினர்களான பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும் வருவதாக ஐதீகம். அதனால், தை அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது. அதனால் பித்ருக்கள் மனம் குளிர்ந்து அளிக்கும் அவர்களது ஆசிகளால் குடும்பத்தின் துயரங்கள் யாவும் அகலும். பித்ரு சாபத்திற்கு ஆளாகியவர்களை தெய்வத்தால்கூட கருணை காட்டி உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.

மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து மேற்கண்ட நாட்களில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன் செய்வது என்று அர்த்தம். இயலாத பட்சத்தில், பக்தியுடன் மனதார பித்ருக்களை வழிபட்டு அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை ஏழைகளுக்கு தானம் செய்யலாம். பிறகு முன்னோர்களின் பிரதிநிதிகளாகவும், உயிரினங்களில் கூடி வாழ்ந்து, சேர்ந்து உண்ணும் வழக்கமும் கொண்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசியைப் பெற முடியும்.

‘முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர்’ என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம். அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம்.

சூரியனின் கல்யாண விழா

இந்தியாவில் இரண்டே இரண்டு இடங்களில்தான் சூரியனுக்கு கோவில் உள்ளது. ஒன்று வடக்கே ஒடிசாவிலும் மற்றொன்று தெற்கே கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது. அங்கே சூரியபகவான் சாயா மற்றும் உஷா தேவியருடன் சிவசூரியன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். சூரியனைச் சுற்றி மற்ற கிரகங்கள் அமைந்துள்ளன. சூரியனார் கோவில் எனும் இத்தலம் நவகிரகங்களுக்கென தனிப்பட்ட முறையில் அமைந்து இருப்பதால் தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வருகிறார்கள். தை அமாவாசை தொடங்கி பத்து நாட்கள் சூரிய பகவானின் திருக்கல்யாண விழா இங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கூடும் தலங்கள்

ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவார்கள்.

புனித நீராடல்

ராமேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரின் திருவுருவச்சிலைகள், தை அமாவாசையன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். இதே நாளில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். அப்போது ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பிடித்த உணவு படையல்

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் மாதம் தோறும் அமாவாசை தினத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பக்தர்கள் வருவார்கள். மகாளய, தை அமாவாசையில் பக்தர்கள் கூட்டமாக திதி பூஜைகளை மேற்கொள்வார்கள். தை அமாவாசை தினத்தில் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, இரவு கோவிலில் தங்கி அடுத்த நாள் அதிகாலை கோவில் குளத்தின் கரையில் வாழை இலை போட்டு முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டு, பிண்டங்களை குளத்தில் கரைத்து வழிபாடுகளை பூர்த்தி செய்வார்கள்.

லட்ச தீபம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவில் முழுவதும் ஒளிச்சுடர்களாக இருக்கும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசை தினத்தன்று சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

மோட்ச தீபம்

பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள பிதுர் கட்டத்திலும், அங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடி விட்டு, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பதாக ஐதீகம். விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் துன்புறுவோருக்காகவும் அங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

தர்ப்பணத்திற்கு ஏற்ற தலங்கள்

அக்னி தீர்த்த கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்ச நதிக்கரை ஆகியவை பித்ரு பூஜைகளுக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவை தவிரவும் நமது பகுதிகளில் உள்ள பல்வேறு தலங்களிலும் பித்ரு கர்மாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

- ஸ்ரீஜானகிராம்

Next Story