மந்தரை


மந்தரை
x
தினத்தந்தி 31 Jan 2019 3:30 PM GMT (Updated: 31 Jan 2019 3:30 PM GMT)

இந்தத் தொடரின் மூலமாக ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி அறிந்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் ராமன், வனவாசம் செல்வதற்கு தூண்டுதலாக இருந்த மந்தரைப் பற்றி பார்ப்போம்.

அதிகமாகப் பேசுவதும், நினைத்ததும்
பார்க்க நினைப்பதும், நாம் உண்மையாக
நேசிப்பவர்களை மட்டுமே. செய்யும் காரியங்கள்
பிறருக்குத் தவறாகத் தெரிந்தாலும், நேசிப்பவரின்
நலன் மட்டுமே அதில் நிறைந்திருக்கும்.

மந்தரை மிகவும் உற்சாகமாக உணர்ந்தாள்.

வீதி முழுதும் நீர் விட்டு அலம்பி மாக்கோலம் போட்டிருந்தது. பூ மழை, மஞ்சள் நீர், வாழை மரங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்த வீதிகளில் தீபங்கள் ஒளிர்ந்தன.

மக்கள் முகங்களில் மலர்ச்சி, பேச்சில் உற்சாகம். பெண்கள் ஆரவாரத்துடன் பாடியபடி வீடுகளை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் மனதிலும் இல்லத்திலும் மகிழ்ச்சிப் பொறி பறந்தது.

நாளை ராமனுக்குப் பட்டாபிஷேகம்.

பூமாரிப் பொழிந்தது போல் இருந்தது மந்தரைக்கு. என் ராமனுக்குப் பட்டாபிஷேகம். மனசும், உடலும் பூரிக்க கைகேயியின் அரண்மனை நோக்கி ஓடினாள்.

அவள் பார்த்து வளர்ந்தவன் ராமன். கைகேயிக்கு தன் மகன் பரதனை விட, ராமனே இனியவன். இந்த செய்தியைக் கேட்டால் அவள் மனமும், முகமும் பூரிப்பில் எப்படி மலரும் என்று நினைக்க ஆனந்தமாய் இருந்தது. தன் கூன் முதுகைச் சுமந்தபடி ஓடினாள் மந்தரை.

மங்கலக் கருவிகள் முழங்கியன. தெருவெங்கும் விழாக் கோலம். அதைப் பார்த்தபடி நடந்தாள்.

சிறு வயதில் தன் கூன் போக ராமன் மண் உருண்டையால் தன்னை அடித்த சம்பவம் அவள் மறக்கவில்லை. ஆனால் அதன் பின் வளர வளர ராமன், அனைத்து மக்களிடமும் காட்டிய அன்பும், பரிவும், அவளிடத்திலும் காட்டிய இனிமையும் அந்தக் கசப்பை மறக்கடித்து விட்டது. குழந்தையில் தெரியாமல் செய்த தவறுகள் மன்னிக்கப்படக் கூடியதே.

மந்தரை நிர்மலமான மனதுடன் தான் இருந்தாள்.

ஆனால் காலம் தன் காரியத்தைச் செயல்படுத்த, அவளை ஒரு கருவியாக படைத்திருந்தது. ராமாவதாரத்தின் நோக்கம் பூர்த்தியாக அவள் மூலம் ஒரு நாடகத்தை நடத்த உத்தேசித்திருந்தது.

தேவர்கள் கவலையுடன் கலைவாணியை அணுகினார்கள்.

“தேவி! மந்தரை உற்சாகத்துடன் கைகேயியை சந்திக்கச் செல்கிறாள். நாளை தசரதன் எண்ணப்படி ராமனுக்கு பட்டாபிஷேகம் முடிந்து விட்டால், ராவண சம்ஹாரம் எப்படி? சீதையை ராமன் கடத்திச் செல்ல அவர்கள் இருவரும் காட்டிற்குச் சென்றால்தானே முடியும்?” - அவர்கள் குரலில் இருந்த கவலை கலைவாணிக்குப் புரிந்தது.

“தேவர்களே, நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இது இறைவனின் காலக் கணக்கு. இந்த நேரத்தில் இது நடக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருப்பார். அதைச் சரியான சமயத்தில், சரியான நபர் மூலம் அவர் நிறைவேற்றுவார்”

“அந்தச் சரியான நபர் நீங்கள்தான் தேவி”

“நானா?”

“ஆம் தேவி, மக்களுக்குச் சரியான ஞானம், திறமை, அறிவு, விவேகம் என்று அனைத்து உணர்வுகளையும் ஊட்டுபவர் தாங்கள் தானே. ஒருவனை சிந்திக்கவும், அதன்படி பேசவும் தூண்டுபவரும் தாங்களே. மனிதனின் நாக்கில் அமர்ந்து ஆட்சி செலுத்துபவர் நீங்கள். எனவே மந்தரையின் சிந்தனையில் அமர்ந்து, அவள் மனப் போக்கை மாற்றி அவதாரத்தின் இலக்கை அடையவும் நீங்கள்தான் உதவ வேண்டும்.”

தேவர்கள் இருகை கூப்பி, மன ஒருமையுடன் கலைவாணியைப் போற்றித் துதித்தார்கள்.

தன்னால் மந்தரையின் மனப்போக்கை மாற்ற இயலும் என்று தேவர்கள் நம்புவதை கலைவாணி ரசித்தாள். புன்னகையோடு ஆமோதித்தாள்.

வேகமாக நடந்த மந்தரை சட்டென்று நின்றாள்.

அவளுக்குள் ஏதோ ஒரு மின்னல் பாய்ந்தது போல் உணர்ந்தாள்.

“என்ன ஆயிற்று எனக்கு?”- நின்று யோசித்தாள்.

மனதில் ஒரு குழப்பம்; வேதனை. ‘எதுவோ சரியில்லை’ என்றது புத்தி.

கைகேயி தசரதனைத் திருமணம் செய்து அயோத்தி வரும்போது அவளுடன் வந்தவள், மந்தரை. கைகேயியின் வளர்ப்புத் தாய் என்று கூட சொல்லலாம். அரண்மனையில் மற்ற அரசியருடன் கைகேயி ஒற்றுமையுடன் வாழ்வதைப் பார்த்துப் பூரித்தவள். அவளுக்குப் பரதன் பிறந்தாலும், ராமனையே அவள் தன் உயிராக நினைத்தாள்.

இன்று அந்த ராமனுக்கு பட்டாபிஷேகம் என்றால் பூரித்து, மகிழ்ந்து செய்தி சொன்ன தன்னை கொண்டாடுவாள் என்று நினைக்கும்போதே, ‘இது நடக்காது... நடக்கக் கூடாது’ என்று மனம் கூறியது.

‘என்ன இது. என் சிந்தனை சரியில்லையே’ - கவலை அடைந்தாள், மந்தரை.

‘ஏன்.. என் எண்ணம் விபரீத திசையில் செல்கிறது?. இது ஏன்?. ஒரு எண்ணம் உருவாவதும், சொற்கள் பிறப்பதும், வார்த்தைகள் அர்த்தமுள்ளதாக மாறுவதும் இறைவன் சித்தத்தால். இப்போது என் மனதில் தோன்றும் சிந்தனைகளும் எதோ ஒன்றுக்காகத்தான். என்ன அது?’

மந்தரை தன் எண்ணங்களை உற்று நோக்கினாள். அருகில் இருந்த ஒரு கோவில் வாசலில் அமர்ந்து தன் எண்ணங்கள் செல்லும் திசையைக் கவனித்தாள்.

கலைவாணி அவள் மனதில் புகுந்தாள். நேர் வழியில் சென்ற எண்ணங்களை திசை மாற்றினாள். கோபம், பழி வாங்குதல் என்ற உணர்வுகளைப் புகுத்தி அவளைத் திசை திருப்பினாள்.

மந்தரை நல்ல உணர்வுகளுக்கும், தீய குணத்துக்கும் நடுவே அல்லாடினாள். ராமனுக்கு கெடுதல் செய்ய அவள் மனம் மறுத்தது.

“ராமா! உன் நாமமே எனக்கு இனிக்கிறது. இம்மைக்கும், மறுமைக்கும் நல்வழி காட்டுபவன் நீ. உனக்குக் கெடுதல் செய்யும் உணர்வை, ஏன் எனக்குள் ஏற்படுத்துகிறாய்? என் உடல், ஆத்மா, சொல், செயல் என்று எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவன் நீயல்லவோ? ராமா என்று கூறி மகிழும் பாக்கியத்தைத் தா. தயவு செய்து என் புத்தியில் தோன்றும் கெட்ட எண்ணங்களை மாற்று” - இறைஞ்சினாள், மந்தரை.

“என்ன குழப்பம் மந்தரை?” - கலைவாணி மூதாட்டியாக அவள் எதிரில் தோன்றினாள். அவளைப் பார்த்ததும் தன்னை அறியாமல் மனம் கசிய மனக் குழப்பத்தைக் கூறினாள் மந்தரை.

“மந்தரை! இது இறைவனின் திருவிளையாடல். ராமாவதாரம் ஒரு உலக நன்மைக்காக ஏற்பட்டது. அது தடை இல்லாமல் நடைபெற சிலரை படைத்திருக்கிறார் இறைவன். அதில் நீயும் ஒன்று. உன்னால்தான் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும். உன் போதனையால் கைகேயி மனம் மாறினால்தான், அவளால் தசரதனிடம் வரம் கேட்க முடியும். ஏனென்றால் அவளைத் தவிர மற்றவர்களுக்கு எந்த வாக்குறுதியும் தரவில்லை மன்னர். இவன் மூலம் இது நடக்க வேண்டும் என்பது காலத்தின் கணக்கு”

“தேவி, இதன் மூலம் ராமனின் வெறுப்பை நான் அடைந்து விடுவேனா?”

“ராமச்சந்திர பிரபுவால், எவரையும் வெறுக்க முடியும் என்று நினைக்கிறாயா மந்தரை? இது அவர் நிகழ்த்தும் நாடகம் அல்லவா?”

“பிற்கால உலகம் என்னை வெறுக்கும் அல்லவா?’

“நல்லதும், கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை மந்தரை. நம் செய்கைகள் மூலம் யாரையும் நாம் திருப்திப்படுத்த முடியாது. மனிதர்களைக் குறித்த அபிப்பிராயம் ஆளுக்கு ஆள் வேறுபடும். நல்லது நடக்க வேண்டும். அது மட்டுமே குறிக்கோளாக இருக்கட்டும்.”

மந்தரை தெளிந்தாள். மனதில் மாயை சூழ்ந்தது. அவள் சிந்தனையில் கைகேயி பேச வேண்டியதை எடுத்துக் கொடுத்தாள் மந்தரை.

கலைவாணி கூறியதுபோல் உலகம் அவளை பழித்துரைத்தாலும் அவள் மூலம் இது நடக்க வேண்டும் என்பது நடந்து விட்டது.

மந்தரை ராமாயணக் கதையை மாற்றியவள் அல்ல. ராமனின் விதிக்குத் துணை போனவள். ராவண வதம் நிகழ செயல் புரிந்தவள். ராமாயண காவியம் எப்படி உருவாக வேண்டும் என்று முன்பாகவே ஏற்படுத்தப்பட்டிருந்த பாதைகளில், தனக்கானதைத் தேர்ந்தெடுத்து நடந்தவள், அவ்வளவே.

அவள் ராமனுக்கு தீங்கு இழைத்தவள் அல்ல. ராமன் அவதார நோக்கம் நிறைவேற உதவியவள்.

-தொடரும்.

Next Story