சுமித்திரை : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம்


சுமித்திரை : பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம்
x
தினத்தந்தி 5 Feb 2019 8:43 AM GMT (Updated: 5 Feb 2019 8:43 AM GMT)

இந்தத் தொடரின் மூலமாக ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் லட்சுமணன் மற்றும் சத்ருக்ணனின் தாயாரான சுமித்திரையைப்பற்றி பார்ப்போம்.

சுமித்திரை என்றால் பரிசுத்தமான,
வேறுபாடு கருதாத நட்பு உள்ளம்
கொண்டவள் என்று அர்த்தம். நல்ல தாய்.
தெய்வத்திற்கு ஈடான நற்குணங்கள் நிறைந்தவள்.

“உன்னைப் பெற்றதன் பெருமையை இன்றுதான் அடைந்தேன்.” மகனை மகிழ்ச்சியுடன் பார்த்து பூரிப்புடன் பேசினாள் சுமித்திரை. பெற்ற வயிறு குளிர லட்சுமணனை பெருமையுடன் நோக்கினாள்.

ராமனுடன் கானகம் செல்ல, தன் உத்தரவு நோக்கி நிற்கும் மகனைப் பார்க்கையில் மனம் குளிர்ந்தது. சுமித்திரையின் சொற்களும், கோபத்தின் உச்சமாய் நிற்கும் தம்பியையும் பார்க்கையில் ராமனின் மனம் கனிந்தது.

பரிசுத்தமான உள்ளம் படைத்தவள். வேற்றுமை பாராட்டாத நட்பு உள்ளம் கொண்டவள். நற்குணங்கள் நிறைந்த தாய். தனக்கு தொண்டு செய்ய ஒரு மகனையும், பரம பாகவதனாம் பரதனின் அடியாருக்கு அடியாராய் சத்ருக்ணனையும் தந்தவள்.

சிங்கம் போன்ற மகனைப் பெற்ற சுமத்திரையும் ‘சிங்கம்’ என்றே புகழப் படுபவள்.

ராமனுக்கு முடிசூட்டல் என்ற செய்தி கேள்விப்பட்ட கோசலை, அதை முதலில் சுமத்திரைக்குத் தான் கூறினாள். அவளை அழைத்துக் கொண்டு குலதெய்வமான நாராயண மூர்த்தி கோவிலுக்குச் சென்றாள்; வழிபட்டாள்.

ஆனால் விதி வேறு விதமாக சுழன்று விட்டது. ஆசைகளை குதறி, பிய்த்துப் போட்டு விட்டது.

மந்தரையின் சூழ்ச்சியால் ராமனின் முடிசூட்டு நிகழ்ச்சி நின்று விட்டது. “பரதனே இந்த நிலவுலகம் முழுவதும் ஆளட்டும். ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டாம்” என்று வேண்ட, கோசலை கைகேயின் அரண்மனையில் தசரதனைச் சந்திக்கச் சென்றிருக்கிறாள்.

‘கோசலையின் நிழல் போன்றவள் சுமித்திரை. கோசலைக்கு அன்பான ஆறுதலும், அமைதியும் சொல்லத் தக்கவள் இவளே’ என்று இங்கு வந்தான் ராமன். வந்த இடத்தில் லட்சுமணனோ சினத்துடன் வில் எடுத்து நாண் ஒலி செய்ததைத் தடுத்து சுமத்திரையிடம் அழைத்து வந்தான். ஆனால் சுமத்திரை துயரக் கடலில் துவண்டு விழுந்து அழுது புலம்பினாள்.

துயரக் கடலில் வீழ்ந்த அன்னையை தேற்றினான் ராமன்.

“தாயே, என்னைத் தான் கானகம் செல்ல ஆணையிட்டார் தந்தை. அவர் சொல் பொய்யாகக் கூடாது. கானகம் கொடிதல்ல. அங்கு தங்கும் காலமும் அதிகம் இல்லை. காட்டை அடைந்தாலும், கடலில் புகுந்தாலும், விண்ணுலகம் நுழைந்தாலும் அவை யாவும் எனக்கு அயோத்தி தான். எனவே தாங்கள் உடல் வற்றி, உயிர் தளர்ந்து, உணர்விழந்து வருந்த வேண்டாம். இந்தப் பதினான்கு வருடம் நொடியில் கடந்து விடும்.”

ஆறுதல் கூறிய ராமனை ஏக்கத்துடன் பார்த்தாள் சுமித்திரை. இந்த அன்பான சொற்களையும், கனிவு ததும்பும் முகத்தையும் இனி எப்போது காண்போம்?

தாயின் துயரம் தெரிந்து அன்புடன் பேசினான் ராமன்.

“தாயே,. நீங்கள் கூர்ந்த அறிவாளி. சொல் மாண்பு உடையவர். நீங்களே பேதலிக்கலாமா? எந்த ஒரு துன்பமும், துயரமும் நிரந்தரமல்ல என்று நீங்கள் அறியாததா? நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள். இந்தப் பதினான்கு ஆண்டுகள், என் அறிவையும், அனுபவத்தையும் மெருகேறப் பயன்படப் போகிறது. காட்டில் பயணப்படுவதால் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கலாம். நாட்டின் விஸ்தீரணம் எவ்வளவு என்று அறியலாம். ஒரு அரசன் அரண்மனைக்கு உள்ளேயே அடங்கி விடக்கூடாது”

மென்மையாகப் பேசினான் ராமன்.

“பல இடங்களுக்கு பயணம் செய்யும் போது, மனிதர்களின் துன்பங்கள், துயரங்கள் என்ன என்று அறிந்து அவற்றை நீக்க வழி காணலாம். முக்கியமாக கானகத்தின் அமைதி புத்தியில் படிந்து, சிந்தனையை சுலபமாக்கும்; சிந்தையை வலுப்படுத்தும். தாயே, நீங்களே அறிவீர்கள். விசுவாமித்திர முனிவருடன் நான் சென்ற போது அடைந்த வித்தைகளும், பாக்கியங்களும் அளவிடற்கரியது. அதே போல் இப்போதும் கானகத்தில் மற்ற முனிவர்களுக்கும் பணிவிடை செய்து, வித்தைகள் கற்று வர வழி இது என்று நான் உளம் பூரிக்கிறேன்.

மேலும் இத்தனை வருடங்களாக நான் அரண்மனையில் தங்கி, உங்கள் அன்பில் திளைத்து, வெளி உலகம் அறியாமல் வாழ்ந்து விட்டேன். இனி கானகத்தில் பயணப்பட்டு, முனிவர்கள், மகரிஷிகள், பல்வேறுபட்ட மனிதர்கள், சூழ்நிலைகள் என்று அறிந்து என் பார்வையை விசாலப்படுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகும்.”

காட்டுக்குள் செல்வதால் தனக்கு துன்பத்தை விடவும், பயன் அதிகம் என்பதாக சுமித்திரையை ஆறுதல் படுத்தினான் ராமன்.

“ராமா! இது உன் பெருந்தன்மையைக் காட்டுகிறது. உன்னால் யாரையும் குறை சொல்லவோ, குற்றம் பார்க்கவோ, எந்தச் சூழ்நிலையையும் தவறாக நினைக்கவோ முடியாது என்று நான் அறிவேன். தந்தை சொல் மீறாதவன் நீ என்பதை யாவரும் அறிவோம்.”

சுமித்திரை பேசும்போதே கைகேயியின் பணிப்பெண், அவள் அளித்த மரவுரிகளை எடுத்து வந்தாள். லட்சுமணன் அதைத் தன் கையில் வாங்கிக் கொண்டான்.

“தாயே, இதோ இந்த மரவுரியைத் தரித்து நானும் அண்ணனுடன் கானகம் செல்ல உங்கள் உத்தரவு வேண்டும்.” - தாயைப் பணிந்தான் லட்சுமணன்.

“மகனே, உன்னை ஈன்ற பொழுதை விட இப்போதுதான் பெருமையாக உணர்கிறேன்.” உடல் சிலிர்க்கப் பேசினாள் சுமத்திரை.

ராமன் திடுக்கிட்டான். “தம்பி, நீ என்னுடன் கானகம் வருவது சரியல்ல. நம் அன்னையர், தசரத சக்ரவர்த்தி ஆகியோர் கொடும் துன்பத்தில் மூழ்கி இருக்கின்றனர். எனவே நீ இங்கு தங்கி அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும்.”

லட்சுமணன் கண்ணில் நீர் வழிய நின்றான்.

“அண்ணலே, நான் உங்களுக்குச் செய்த தீங்கு தான் என்ன? குளத்தில் நீர் இருந்தால் தான் அதில் உள்ள மீன்கள் உயிர் வாழும். உலகம் இருந்தால் தான் உயிரினங்கள் இருக்கும். அதுபோல் தான் நீங்கள் இருந்தால்தான் நாங்கள் இருப்போம். உலக அரசு உரிமையும், இன்பங்களையும் கை உதறிச் செல்வதைப் போல் எங்களையும் உதறிச் செல்ல எண்ணுகிறாயா?”

அன்பில் நெகிழ்ந்த ராமன் தன் தாமரை போன்ற கண்களில் நீர் பெருக, அருமைத் தம்பியைப் பார்த்தபடி நின்றான். எதுவும் பேச முடியாமல் தம்பியின் அன்பில் கரைந்து நின்றான்.

மகனின் பதிலில் மகிழ்ந்து போன சுமத்திரை “லட்சுமணா! உனக்கு என்று எதுவும் இல்லை. மரத்துக்கு வேர் போல், உனக்கு ராமனே அடித்தளம். அவனின் நிழல் போன்றவன் நீ. கானகத்திற்கு ராமனுடன் செல்லும் நீ, அவனை கண் இமைபோல் காக்க வேண்டும். இமை மூடாமல், உறக்கம் என்பதை மறந்து அல்லும், பகலும் உயிரைக் காப்பது போல் காக்க வேண்டும். ராமன் இருக்கும் இடம்தான் உனக்கு அயோத்தி.”

அன்னையின் பதிலில் அகமகிழ்ந்து போனான் லட்சுமணன்.

“உத்தரவு அன்னையே”

“ராமன் செல்லும் அந்தக் கானகம் தான் உனக்கு அயோத்தி. ராமனே இனி உன் தந்தை, தசரத சக்ரவர்த்தி. சீதையே உன் தாயார் ஆவாள். இனி நீ இங்கு ஒரு நிமிடம் நிற்பது கூட குற்றமாகும். ராமனைப் பின் தொடர்ந்து செல். அவன் தம்பியாக இல்லை. அடிமையாகச் சென்று பணிவிடை செய். ராமன் அயோத்திக்குத் திரும்பி வந்தால், நீயும் திரும்பி வா. இல்லை என்றால் அதற்கு முன் நீ இறந்து போ”.

உத்தரவாக கண்ணில் நீர் பெருகப் பேசினாள் சுமத்திரை.

“அப்படியே ஆகட்டும் தாயே”- பணிந்து வணங்கி விடை பெற்றான் லட்சுமணன்.

லட்சுமணனுக்கு அவள் சொன்னது, அவளின் குணத்தை, அறத்தை, உயர்ந்த பண்பை, சிறந்த அன்பை வெளிப்படுத்தியது.

அறத்தின் வழி நின்ற அன்னை சுமித்திரை.

-தொடரும்.


Next Story