யோசுவா


யோசுவா
x
தினத்தந்தி 12 Feb 2019 11:21 AM GMT (Updated: 12 Feb 2019 11:21 AM GMT)

மோசேவின் மறைவுக்குப் பிறகு, இஸ்ரயேல் மக்களை யோசுவா தலைமையேற்று வழிநடத்தினார்.

எகிப்திலிருந்து கானானை நோக்கி நாற்பது ஆண்டுகள் மோசே வழிநடத்தினார். கானானுக்குள் நுழையும் முன் மோசே இறைவனால் எடுத்துக் கொள்ளப்பட்டார்.

இப்போது யோசுவா மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அப்போது அவருக்கு வயது 85. மக்கள் மோசேயை மதித்தது போலவே யோசுவாவையும் மதித்தார்கள்.

யோர்தான் ஆற்றைக் கடந்து கானானுக்குள் செல்ல வேண்டும். நதி கரைபுரண்டு ஓடுகிறது. கடவுளின் அருளினால் யோசுவா, யோர்தானை இரண்டாகப் பிரித்து நடுவில் வழி தோன்றச் செய்தார். அதைக் கடந்து மக்கள் கானான் நாட்டுக்குள் சென்றார்கள்.

பைபிளின் மிக முக்கியமான நூலான ‘யோசுவா’ நூலை எழுதியவர் யோசுவா என்பது மரபுச்செய்தி. அவரது மரணமும் அதற்குப் பின்பான நிகழ்வுகளும் மட்டும் பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

முதன்மைக் குரு எலியேசர், அல்லது அவரது மகன் பினகாசு இந்த நூலின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சில ஆய்வாளர்கள், இந்த நூல் யோசுவாவின் காலத்துக்கும், சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது என்கின்றனர்.

யோசுவா, மோசேயோடு இணைந்து பயணித்தவர். எகிப்தின் அடிமை நிலையை வாழ்ந்து அனுபவித்தவர். மோசேயின் இறைநம்பிக்கையையும், கடவுளை மகிமைப்படுத்தும் செயல்களையும் அருகில் இருந்து அறிந்தவர். செங்கடலை, இறைவன் மோசே மூலம் இரண்டாய் பிளந்ததை நேரில் பார்த்தவர். மோசேயின் நம்பிக்கைக்கும், பிரியத்துக்கும் உரிய நபராக இருந்தவர். அதனால் தான் மோசேக்குப் பின் யோசுவா தலைவர் என்பதை மக்கள் சட்டென ஒத்துக்கொண்டனர்.

‘நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான யுத்தம்’ என சுருக்கமாக இந்த நூலைப் பற்றிச் சொல்லி விடலாம். கடவுள் தன்னைவிட்டு விலகிச்சென்று, வேறு தெய்வங்களை வழிபட்ட மக்களை அழிக்கிறார். தன்னை நம்பியிருப்போரைக் காக்கிறார் எனும் செய்திகள் இதில் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையும் பாக்கியத்தை, ஆபிரகாமோ, மோசேயோ பெறவில்லை. ஆனால் அது யோசுவாவுக்குக் கிடைக்கிறது. யோசுவா இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய வாழ்நாளில் இஸ்ரயேல் மக்கள் பல்வேறு வெற்றி களைப் பெற்றனர்.

யோசுவா மக்களை 25 ஆண்டுகள் வழிநடத்தி தனது 110-வது வயதில் இறைவனை அடைந்தார்.

யோசுவா நூலுக்கு, ‘வெற்றிகளின் நூல்’ என்றொரு பெயர் உண்டு. இயேசுவின் பெயருக்கு இணையான பெயர் இந்த யோசுவா என்பது.

மொத்தம் 24 அதிகாரங்கள் கொண்ட இந்த நூலில் 658 வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

“நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24:15) எனும் வசனம் மிகப்பிரபலமான வசனம்.

யோசுவாவிடம் காணும் இறைநம்பிக்கையும், அசைக்க முடியாத விசுவாசமும் வியக்க வைக்கிறது. மாபெரும் எரிகோ கோட்டையை ஆர்ப்பரித்தே வீழ்த்தி விடலாம் என இறைவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் யோசுவா. ஆறு ஏக்கர் அளவுக்கு விரிந்து பரந்திருந்த கோட்டை இடிந்து விழுந்தது. இந்த நிகழ்வு பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

இந்த நூலில் யோசுவா 31 அரசர்களோடு போரிட்டு அவர்களை இறைவனின் அருளால் வென்ற நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. கடவுள், அழிக்கும் தேவன் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், அவர் வாக்கு மாறாதவர், பாவங்களை வெறுப்பவர் என்பதே புரிந்துகொள்ள வேண்டிய பாடமாகும்.

எகிப்தில் அடிமைகளாய் இருந்த மக்கள் இப்போது கானானிலுள்ள மக்களை வென்று அந்த இடத்தை தங்களுடைய இடமாக மாற்றிக்கொள்கின்றனர்.

ஒரு யுத்தத்தின் போது சூரியன் மறையாமல் முழுநாளும் ஒளிகொடுத்துக் கொண்டிருந்த அதிசய நிகழ்வும் யோசுவாவின் நூலில் காணப்படுகிறது. யோசுவா நிகழ்த்திய பல்வேறு யுத்தங்களும் அதன் காலங்களும் பின்னர் வரலாற்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று, கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக்கொண்டதும் நம்பிக்கையினால்தான்” என் புதிய ஏற்பாடு குறிப்பிடும் இராகாப் யோசுவாவின் காலத்தைய பெண்மணி. இஸ்ரயேலருக்கு உதவி செய்தவர். அவருடைய இறை நம்பிக்கை இன்றளவும் வியப்புடன் பார்க்கப்படுகிறது.

கடவுளால் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டுக்குள் நுழைவதும், அங்கே போரிட்டு நாட்டை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதும், நாட்டைப் பகிர்ந்து அளிப்பதும், மக்களுக்கு யோசுவா போதனைகள் வழங்குவதும், பின்னர் அவர் விடைபெறுவதும் என நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன.

Related Tags :
Next Story