சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருத்தல்


சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2019 11:27 AM GMT (Updated: 12 Feb 2019 11:27 AM GMT)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருத்தல்.

அடுத்தவருடைய அனைத்துக் குறைகளையும் பூதக்கண்ணாடி வைத்து உற்று நோக்கத் தொடங்கினால் அவ்வளவுதான்... காரியம் கெட்டுவிடும். பின்னர் நாமும் நிம்மதியுடன் இருக்க மாட்டோம், அடுத்தவரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டோம்.

அதிலும் குறிப்பாக, யாருடைய அன்பு நமக்கு வேண்டுமோ, யாரிடமிருந்து அதிக நன்மைகளை நாம் எதிர்பார்க்கின்றோமோ, அவரிடமிருந்து நிகழும் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். இதுவும் நபிவழியே. ஆயினும் நம்மில் அனேகமானவர்கள் மறந்துவிட்ட நபிவழி.

சிலர் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளைக் காணும்போதெல்லாம் அவற்றைச் சகித்துக்கொள்ள முடியாமல் நமது நெஞ்சம் பெருமூச்சு விடும். அல்லது கோபத்தால் மூக்கு விடைத்து நெஞ்சாங்கூடு ஏறி இறங்கும். இந்த உலகிலேயே ஒரு தவறும் செய்யாதவர் நாம் மட்டுமே என்பது போன்று எண்ணத் தோன்றும்.

“ஆதத்தின் மக்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. ஆயினும் தவறிழைப்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்புக் கேட்பவர்களே” என்ற நபிமொழி ஏனோ அந்த வேளையில் மறந்து போய்விடும்.

மார்க்கத் தீர்ப்பு கேட்பதற்காக ஹாதம் என்ற அறிஞரிடம் ஒருவர் வந்தார். வந்தவர் தனது பிரச்சினையைக் கூறிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக அவரது உடலில் இருந்து காற்று வெளியேறியது. வந்தவருக்கோ பெரும் சங்கடமாகப் போய்விட்டது.

உடனே அறிஞர் ஹாதம், “உமது பிரச்சினையை சப்தமாகக் கூறும். எனக்கு எதுவுமே கேட்கவில்லை” என்று கூறி தமக்கு செவிப்புலன் சற்று குறைவு என்பது போன்று காதுகளுக்கு அருகே கை வைத்து கூறினார். வந்தவர் பெரும் நிம்மதி அடைந்தார். பின்னர் மகிழ்ச்சியுடன் தாம் வந்த விஷயத்தைக் கூறினார். (மதாரிஜுஸ் ஸாலிகீன்)

இந்தப் பண்பு கணவன்- மனைவிக்கு இடையேதான் அதிகம் இருக்கவேண்டும். அன்பைத் தேடும் இணை, தமது துணையிடமிருந்து வெளிப்படும் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருக்கும்போதுதான் முழுமையான அன்பு கிடைக்கும்.

அபுத்தர்தா (ரலி) தமது மனைவியிடம் கூறுகின்றார்: “கண்ணே, நான் கோபமுற்று இருப்பதாக நீ கண்டால் உடனே என்னை பொருந்திக்கொள். நீ கோபம் கொண்டிருப்பதாக கண்டால் நானும் உன்னைப்பொருந்திக்கொள்வேன். இல்லையென்றால், நமக்கிடையே அன்பு நிலைபெறாது”.

அடுத்தவர் மீது கொண்ட கெட்ட எண்ணத்தின் காரணத்தால் சிலரை நாம் வெறுக்கின்றோம். அதனால் நமது சந்திப்புகளும் குறைந்துவிட்டன. சிறுசிறு குறைகளை பூதகரமாக மாற்றிய காரணத்தால் நமது ரத்த பந்த உறவுகளைக்கூட நாம் துண்டித்துவிட்டோம்.

வாழ்வு தெளிந்த நீரோடை போன்று செல்ல வேண்டுமென்றால், கண்ணால் காணும் அனைத்துக்கும் விளக்கம் தேடமுனையக் கூடாது. காதால் கேட்கும் அனைத்தையும் தீர விசாரிக்க முற்படக் கூடாது. எதிர்படும் அனைத்துக்கும் விடை காண முயலக் கூடாது.

அனைத்தையும் காதால் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆயினும் ஒரு புன்முறுவலுடன் தேவையற்றதைக் கடந்துவிட வேண்டும். பின்னர் மறந்துவிடவேண்டும். அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமல்ல.

வெண்பனி போல் உள்ளம் தூய்மையாக இருப்பது குறையல்ல. சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பது மடமையல்ல. அடுத்தவரை மன்னிப்பது பலவீனமல்ல. மவுனமாக இருப்பது கோழைத்தனம் அல்ல. மாறாக இவை அனைத்தும் நற்பயிற்சியே.

உணவில் உப்பு குறைந்துவிட்டதா.. தேநீரில் சர்க்கரை குறைந்துவிட்டதா.. வருவதாகச் சொன்னவர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையா.. மனைவி குடிதண்ணீர் கொண்டுவர நேரமாகிவிட்டதா.. வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுவிட்டதா.. பரவாயில்லை, விட்டுப்பிடிக்கலாம். இவையெல்லாம் கொலைக் குற்றம் ஒன்றும் இல்லையே.

சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்தியதால் பிரிந்த நட்பு வட்டங்கள்தான் எத்தனை. விவாகரத்துப் பெற்ற தம்பதிகள் தான் எத்தனை. தொடர்பு அறுந்த குடும்பங்கள்தான் எத்தனை. நசிந்துபோன வியாபாரங்கள், நலிவடைந்த நல்ல உறவுகள் தான் எத்தனை, எத்தனை. யோசித்துப் பார்த்தால் பின்னணியில் சின்ன சின்னக் குறைகளே இருந்திருக்கும்.

ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு பேச) உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு, ‘அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டகமொன்றைக் கொடுங்கள்’ என்றார்கள்.

நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதையே கொடுங்கள்; அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள். (புகாரி)

ஆஹ்.. யாரிடம் வந்து என்ன பேசுகிறாய்..? இருக்கும் இடம் தெரியாமல் தொலைத்து விடுவேன்.. என்றெல்லாம் வானுக்கும் பூமிக்கும் நபி (ஸல்) அவர்கள் குதிக்கவில்லை.

ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் யாரும் யாரைக் குறித்த புகாரையும் என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், தெளிவான வெள்ளை உள்ளத்துடனேயே உங்களில் இருந்து ஒவ்வொருவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன்”.

ஈஸா (அலை) அவர்கள் ஒருமுறை தமது தோழர்களிடம் கேட்டார்கள்:

“உங்கள் சகோதரர் தூங்கிக்கொண்டிருக்கும்போது காற்றடித்து ஆடை விலகிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”.

அவர்கள் கூறினார்கள்: “அவருடைய ஆடையை நாங்கள் சரிசெய்வோம்”.

ஈஸா (அலை) கூறினார்கள்: “அவ்வாறு நீங்கள் செய்வதில்லையே. மாறாக நீங்கள் மேலும் அவருடைய ஆடையைத் திறக்கும் முயற்சியில் அல்லவா ஈடுபடுகின்றீர்கள்”.

தோழர்கள்: “யார்தான் அப்படிச் செய்வார்?”

ஈஸா (அலை) கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தமது சகோதரனிடமிருந்து ஏதேனும் ஒரு வார்த்தையை செவிமடுக்கின்றார். பின்னர் அதில் சில வார்த்தைகளைக் கூடுதலாகச் சேர்த்து மக்களிடையே பரப்புகின்றார். ஆடையை விலக்குவதைவிட மோசமான செயல் அல்லவா இது”.

தளபதி சலாஹுத்தீ அய்யூபி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இன்ன சபையில் இன்ன மனிதர் உங்களை ஏசுகின்றார்” என்று கூறினார். அதற்கு தளபதி கூறினார்: “அந்த சகோதரர் என் மீது அம்பு எய்தார். அது என் மீது படவில்லை. ஆனால் நீர் அதனைச் சுமந்து வந்து என் இதயத்தில் குத்திவிட்டீரே”.

நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விவகாரங்கள் அனைத்தையும் கண்கொத்திப் பாம்பாக எப்போதும் கவனிக்கத் தொடங்கினால் நிம்மதியின்மையே பரிசாகக் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பவரையே, சுற்றி இருப்பவர்கள் நேசிப்பார்கள். அவருடனேயே எப்போதும் இருக்க விரும்புவார்கள். அவர்களால் அவர் நேசிக்கப்படுவார். அதனால் அவரும் நிம்மதியடைந்து சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்வார். இந்தக் கொஞ்சநாள் வாழ்வில் இதுதானே நமக்குத் தேவை.

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story