அற்புதம் நிகழ்த்தும் அத்தி வரதர்


அற்புதம் நிகழ்த்தும் அத்தி வரதர்
x
தினத்தந்தி 12 Feb 2019 12:19 PM GMT (Updated: 12 Feb 2019 12:19 PM GMT)

பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில். இது 108 திவ்ய தேசத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

மலை மீதுள்ள ஆலயத்தில் வரதராஜப் பெருமாள் வீற்றிருக்கிறார். கீழ் தளத்தில் பெருந்தேவி தாயார் அருள்பாலிக்கிறார்.

இந்தக் கோவிலுக்கு, ஹொய்சாள மன்னன் வீரபல்லாளன், காளிங்கராயன், பாண்டியன் 5-ம் சடையவர்மன், சோழ மன்னர்கள் கி.பி. (1018-1246), சேர மன்னர் (1291-1342) ஆகியோர் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் (1447- 1642), இத்திருக்கோவிலில், பல புதிய கட்டிடங்கள் தோன்றின. அவற்றுள் முக்கியமானது ஒற்றைக்கல் தூண்களில் அழகிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்ததும், ராமாயணம், மகாபாரதத்தை பிரதிபலிக்கும் சிற்பங்களும் கொண்ட 100 கால் மண்டபம் ஆகும்.

இந்த ஆலயத்தில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சியில் யாகம் செய்தார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டு விட்டு, மற்றவர்களான சாவித்திரி, காயத்திரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தைச் செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து, பாய்ந்தோடி வந்தாள். இதையடுத்து பிரம்ம தேவன், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். பெருமாள், வெள்ளப்பெருக்கு வரும் வழியில் சயனித்து கிடந்தார். இதனால் அவரைத் தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை. இப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் ‘வரதராஜர்’ என்று பெயர் பெற்றார்.

இந்த ஆலயத்தில் பெருமாளை, ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு ‘அத்திகிரி’ என்றும் பெயர் உண்டு. பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு, யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார். பிறகு பிரம்ம தேவன், அத்தி மரத்தில் ஒரு சிலை வடித்து அதனை இங்கே பிரதிஷ்டை செய்தார்.

பிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஒரு ஏழையின் திருமணத்திற்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சன்னிதியில் ‘தங்க மழை’ கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆலயமாக இது திகழ்கிறது.

ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள், கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒரு முறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர், அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சி சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார். இதையடுத்து இவரும் இத்தலம் வந்து வழிபட்டனர். இறைவன் உங்கள் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்று அருளினார். அதன் படி இந்த ஆலயத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்குகிறார்கள்.

வரதராஜப்பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமறை திருக்குளம் ஆகிய 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. மேற்கு ராஜகோபுரத்தில் வடகிழக்கிலும், 100 கால் மண்டபத்திற்கு வடக்கேயும் இருக்கிறது அனந்தசரஸ் திருக்குளம். இந்த குளத்தில் நீராவி மண்டபத்திற்கு தெற்கேயும், விமானத்துடன் கூடிய நான்கு கால் மண்டபத்தில் தான் அத்தி வரதர் அருள்கிறார். இவர் சுமார் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டவர். முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்.

இவர் திருக்குளத்தில் உள்ளே இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியே வருவார். அப்போது கோவில் வளாகத்தில் அவரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஒரு மண்டல காலம் (48 நாட்கள்), அவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும், 18 நாட்கள் நின்ற நிலையில் அருள்வார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு கடந்த 2.7.1979-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்படி இந்த வருடத்தில் தான் மீண்டும் அந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இது பற்றி வரதராஜர் ஆலயத்தில் வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

-எஸ்.முருகவேள்

Next Story