தோஷங்களை அகற்றும் ராகு-கேது வழிபாடு


தோஷங்களை அகற்றும் ராகு-கேது வழிபாடு
x
தினத்தந்தி 12 Feb 2019 12:24 PM GMT (Updated: 12 Feb 2019 12:24 PM GMT)

நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்ரனும், சுக்ரனை விட சந்திரனும், சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.

13-2-2019 ராகு-கேது பெயர்ச்சி

சந்திரனையும், சூரியனையும் பலம் இழக்கும்படியாகவும், ஒளி குன்றும்படியாகவும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு மற்றும் கேதுவிற்கு உண்டு. ராகுவிற்கு எந்த வீடும் சொந்தமில்லை. அதாவது எந்த ராசியும் ராகுவிற்கு சொந்தமாக இல்லை. ராகு எந்த ராசியில் இருக்கின்றாரோ, எந்த கிரகத்தினால் பார்க்கப்படுகின்றாரோ, எந்த இடத்தில் சேர்க்கை பெற்றுள்ளாரோ அந்த இடத்தின் பலன்களை முழுமையாக தருவார்.

ஒருவரது ஜாதகத்தில் அனுகூலம் தரும் நல்ல இடத்தில் ராகு இருந்து விட்டால், அந்த நபருக்கு நல்ல மனைவி, நல்ல வேலைக்காரர், ஆட்சி மற்றும் செல்வாக்கு ஆகியவை அமையும். பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவே காரணமாகிறார். மருந்து, வேதியியல், நூதன தொழில் நுட்பக்கருவிகள் ஆகியவற்றுக்கும், அவ்வப்போது மாறி வரும் நவ நாகரிகத்திற்கும் ராகுவுடன் இணைந்த சுக்கரன் காரணமாக அமைகிறார். அரசியல் செல்வாக்கு, ஆட்சியுரிமை போன்றவற்றுக்கும் ராகுவின் அனுக்கிரகம் ஒருவருக்கு நிச்சயம் தேவை.

அனுகூல ராகு, கீழான ஒருவரை சக்கரவர்த்தியாக மாற்றும் வலிமை படைத்தவர். மந்திரஜாலம், கண்கட்டி வித்தை போன்றவைகளும் ராகுவின் அனுக்கிரகத்தால் தான் கைவரப் பெறும். ராகு ஒருவரை குபேரபுரிக்கு அழைத்துச் செல்வார். அதே நேரத்தில் ராகு தோஷம் ஒருவருக்கு அமைந்தால், அந்த நபர் மிகவும் கடுமையான பலன்களையும் அனுபவிப்பார்.

ஒருவரது ஜாதகத்தில் 7-வது இடத்தில் ராகு இருப்பதால் திருமணம் தாமதமாகிறது. இல்லற வாழ்க்கை சிறப்பதற்கும் ராகுவின் அனுக்கிரகம் தேவை. 5-ம் இடத்தில் இருக்கும் ராகுவால் புத்திர தோஷம் ஏற்படுகின்றது. ஆகவே களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்குவதற்கு ராகுவை வழிபடுதல் வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநாகேஸ்வரம். இங்கு நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த சிறப்பு மிக்க தலம் இது. ஆதலால் தான் இந்த தலத்தை ‘திருநாகேஸ்வரம்’ என்று அழைக்கிறார்கள். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில், நாகநாத சுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்தக் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். புராண வரலாற்றின் படி இந்த தலத்தில் ராகுபகவான் நாகநாதசுவாமியை வழிபட்டார். எனவே இங்கு வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, சகல நன்மைகளையும் அளிக்கும் வரத்தை ராகு பகவான் பெற்றுள்ளார்.

சுசீல முனிவரின் பிள்ளையை, அரவாகிய ராகு தீண்டியது. இதனால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற, நான்கு தலங்களை வழிபட்டு முடிவில் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட வேண்டும். அதன்படியே ராகு பகவான், நாகநாத சுவாமியை வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.

அதோடு இத்தல சிவபெருமான், ராகுவுக்கு ஒரு வரத்தையும் அளித்தார். “இத்தலத்திற்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள், உன்னையும் வணங்கினால், உன்னால் ஏற்படக் கூடிய கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்கும்” என்று அருளினார்.

அதன்படி ராகு பகவானும் இந்த ஆலயத்தில் மங்கள ராகுவாக, நாககன்னி மற்றும் நாகவள்ளி ஆகிய இரு தேவியருடன் நிருதி மூலையில் அமர்ந்து, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தோஷங்களை நீக்கி அருள்பாலிக்கிறார்.

பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல சூரிய புஷ்கரணியில் நீராடி, நாகநாத சுவாமியை வழிபட்டு, பின்னர் ராகுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள ராகு பகவானுக்கு, பாலாபிஷேகம் செய்யும்போது, அந்த பாலானது நீல நிறமாக மாறும் அதிசயம் நிகழ்கிறது.

இந்த ஆலயத்தில் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டால் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கும். இந்த வருட ராகு-கேது பெயர்ச்சி 13-2-2019 (புதன்கிழமை) நடக்கிறது. இதையடுத்து திருநாகேஸ்வரம் ஆலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு லட்சார்ச்சனை, யாக சாலை பூஜை போன்றவை நடைபெறுகின்றன.

-கு.அண்ணாத்துரை

ராகுவைப் பற்றி...

உடல் - மனித தலை, பாம்பு உடல்

கிழமை - சனிக்கிழமை

நட்சத்திரம்- திருவாதிரை, சுவாதி, சதயம்

நட்பு கிரகம் - புதன், சுக்ரன், சனி

மலர் - மந்தாரை

சமித்து- அருகு

ரத்தினம்- கோமேதகம்

அதிதேவதை - பத்திரகாளி, துர்க்கை

உச்ச வீடு- விருச்சிகம்

நீச்ச வீடு- ரிஷபம்

காரக அம்சம் - யோகம்

தான்யம்- உளுந்து

உலோகம்- கருங்கல்

வாகனம்- ஆடு

மனைவி- கிம்ஹிசை

உரிய திசை- தென்மேற்கு

சுவை- புளிப்பு

காலம்- ராகு காலம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட ராகு பகவான், 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் தங்குவார். 12 ராசிகளையும் சுற்றிவர பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன.

கேதுவைப் பற்றி...

உடல்- பாம்பு தலை, மனித உடல்

கிழமை- சனிக்கிழமை

நட்சத்திரம்- அசுவதி, மகம், மூலம்

நட்பு கிரகம் - புதன், சுக்ரன், சனி

மலர்- செவ்வரளி

சமித்து - தர்ப்பை

தான்யம்- கொள்ளு

ரத்தினம்- வைடூரியம்

அதிதேவதை- விநாயகர், சரஸ்வதி, பிரம்மா, சித்ரகுப்தர்

உச்ச வீடு- விருச்சிகம்

நீச்ச வீடு - ரிஷபம்

காரக அம்சம்- ஞானகாரகன்

உலோகம்- துருக்கல்

வாகனம்- சிம்மம்

மனைவி- சித்திரலேகா

சுவை- புளிப்பு

காலம்- எமகண்டம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட கேது, ராகு பகவானுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும்.

நாகம் வழிபட்ட தலம்

‘பாம்பு கிரகங்கள்’ என்று வர்ணிக்கப்படுபவர்கள் ராகுவும், கேதுவும் ஆவார்கள். இந்த இரண்டு கிரகங்களுக்கும் தனித் தனியே திருத்தலங்கள் இருக்கின்றன. அதுபோல ராகுவும், கேதுவும் ஒரே சரீரமாக இணைந்து இறைவனை தரிசித்த தலம் தான் ‘திருப்பாம்புரம்.’ திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் கொல்லுமாங்குடிக்கு அருகில் இந்த ஊர் இருக்கிறது. புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்தும் அருகாமையில் தான் உள்ளது. இங்குள்ள சுவாமி ‘பாம்புரநாதர்’ என்றும், அம்பாள் ‘வண்டார்குழலி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். ராகு- கேது பெயர்ச்சியால் நற் பலன் பெறுவோர், மேலும் நற்பலன் பெறவும், துர்பலன் பெறுவோர் அதன் கடுமையை தணித்து, கெடுதல்கள் நீங்கப்பெறவும் இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபடலாம். கால சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், பதினெட்டு வருட ராகு திசை நடப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்தவர்கள் ஆகியோர் திருப்பாம்புரம் சென்று பரிகார பூஜை செய்து வரலாம். திருப்பாம்புரம் சென்றால் திருப்பங்கள் உருவாகும்.

தொகுப்பு:- சிவல்புரி சிங்காரம்

Next Story