காலங்களை மாற்றும் தேவன்


காலங்களை மாற்றும் தேவன்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:38 AM GMT (Updated: 15 Feb 2019 10:38 AM GMT)

இப்பூவுலகில் வாழ்கின்ற மாந்தர் கூட்டம் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு விதமான சூழ்நிலைகளை கடந்து செல்ல நேரிடுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் துக்கத்தின் நாட்களும் உண்டு, சந்தோஷத்தின் நாட்களும் உண்டு, கண்ணீரின் நாட்களும் உண்டு, களிப்பின் நாட்களும் உண்டு, வியாதிபட்ட நாட்களும் உண்டு, சுகமான நாட்களும் உண்டு. கடன் வாங்கும் நாட்களும் உண்டு, கடன் கொடுக்கும் நாட்களும் உண்டு. இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே இப்படிப்பட்ட சூழல்களை ஒவ்வொரு மனிதனும் சந்திக்க நேரிடுகிறது. இதைத்தான் திருமறை கூறுகிறது, ‘ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு, நட ஒரு காலமுண்டு, நட்டதை பிடுங்க ஒரு காலமுண்டு. இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு. புலம்ப ஒரு காலமுண்டு, நடனமாடி மகிழ ஒரு காலமுண்டு’.

ஆம், நம் வாழ்க்கை பயணத்தில் இவைகள் நியமிக்கப்பட்டவைகள். ஆக ஒரு மனிதன் இருளின் காலம், வெளிச்சத்தின் காலம் இந்த இரண்டையும் சந்திக்க நேரிடுகிறது.

இருளின் காலத்தை உண்டு பண்ணி நம் வாழ்க்கையில் வியாதி, வறுமை, கடன், இழப்பு, வேதனை, உபத்திரவம், தனிமை, சோர்வு, பயம் இப்படிப்பட்ட காரியங்களை கொண்டு வருகிறவன் சாத்தான் அல்லது பிசாசு.

வெளிச்சத்தின் காலத்தை உண்டு பண்ணி செழிப்பு, சமாதானம், ஆரோக்கியம், ஜெயம், சந்தோஷம், ஐஸ்வர்யம் இவற்றைக் கொடுக்கிறவர் தேவன். அந்த தேவன் மனுக்குலத்தில் சுக வாழ்விற்காக இயேசு கிறிஸ்துவாக பெத்லேகேமில் பிறந்து கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தார். சிலுவையிலே சாத்தானுடைய தலையை நசுக்கினார்.

சாத்தானின் வல்லமையை சிலுவையிலே அழித்து அவன் அதிகாரத்தை ஒழித்தார். அவரை நம்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் புதிய வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தார். புது நம்பிக்கையை உருவாக்கினார். சமாதானமற்று கிடக்கும் மனுகுலத்திற்கு சமாதானம் கொடுக்கும் சமாதானப் பிரபு அவர். அவரை நோக்கி வேண்டிக்கொள்ளும் மானிடனின் நோயை போக்கும் பரிகாரி அவர். அவரை நோக்கி பார்க்கும் முகம் பிரகாசமடைகின்றன. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற மெய்யான ஒளி அவர் (யோவான் 1:9).

இன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்ட காலத்தில் ஜீவிக்கிறீர்கள். கண்ணீரோடும், துக்கத்தோடும், வேதனையோடும் காணப்படுகிறீர்களா? கவலைப்படாதிருங்கள். உங்களுக்கு உதவி செய்ய அருள்நாதர் இயேசு இருக்கிறார். ‘வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று இயேசு திருவுள்ளம் பற்றியிருக்கிறார். (மத்தேயு 11:28).

ஆம், உங்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும், நம்பிக்கை உண்டாகும். சோர்ந்து போகாதிருங்கள். உங்களுக்கு நன்மை செய்யும் தெய்வம் உண்டு, அவர்தான் இயேசு.

யவீரு என்னும் மனிதன் தன் மகளின் மரணப்படுக்கை மாற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார். அவனுடைய மகள் பூரண சுகம் பெற்றாள். (என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள். (மத்தேயு 9:18)

அன்னாள் என்பவள் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். ஒரு அழகான ஆண் குழந்தையை கடவுள் ஈவாகக் கொடுத்தார். (மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வார், 1 சாமுவேல் 1:17)

பேதுரு என்னும் பக்தன் கடலில் மூழ்கும் வேளையில் தன் ஆபத்து நேரத்தில் கடவுளை நோக்கி கதறிக்கூப்பிட்டான். அவன் ஆபத்திலிருந்து தேவன் அவரை கை தூக்கி விட்டார்.

(அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார் மத்தேயு 14:29)

உங்களையும் கை தூக்கிவிட உங்கள் தேவைகளை சந்திக்க, குறைகளை நிறைவாக்க, உங்களை நேசிக்கிற அன்பு தெய்வம் அருள்நாதர் இயேசு உண்டு. அவர் நிச்சயமாகவே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கட்டளையிடுவார். ஆம், கர்த்தரை நம்புங்கள் அப்பொழுது சித்தி பெறுவீர்கள்.

“உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். (மார்க் 11:24)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

சகோ சி. சதீஷ், வால்பாறை.

Next Story