சாமுவேல் - முதல் நூல்


சாமுவேல் - முதல் நூல்
x
தினத்தந்தி 5 March 2019 10:05 AM GMT (Updated: 5 March 2019 10:05 AM GMT)

தொடக்கத்தில் ஒரே நூலாக எபிரேய மொழியில் இருந்த நூல் ‘சாமுவேல்’. பின்னர் கிரேக்க மொழியில் இதை மொழிபெயர்த்த போது சுருள்களின் இடப்பற்றாக்குறை காரணமாக இரண்டு பிரிவுகளாக அதைப் பிரித்தனர். முதல் மன்னனின் மரணம் வரை ஒரு நூலாகவும், தாவீது மன்னனின் வரலாறு இரண்டாம் நூலாகவும் அமைந்து விட்டது. தொடக்கத்தில் ‘முதல் அரசாங்கம்’ என அழைக்கப்பட்ட நூல் பின்னர் ‘சாமுவேல்’ என பெயர் மாற்றம் பெற்றது.

விவிலிய நூல்களின் வரலாற்றில் இந்த நூலுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. இதற்கு முன்பு வரை நீதித்தலைவர்களால் ஆளப்பட்டு வந்த இஸ்ரயேல் மக்கள், தங்களுக்கென ஒரு அரசனை உருவாக்கும் காலம் இது. அந்த முதல் அரசனை பதவியேற்க வைப்பவராக இறைவாக்கினர் சாமுவேல் இருக்கிறார்.

இந்த நூலைச் சுருக்கமாகப் பார்த்தால், குரு ஏலியிடமிருந்து சாமுவேலுக்கு வருகின்ற நீதித்தலைவர் பணி, சாமுவேலிடமிருந்து சவுலுக்குச் செல்கின்ற அரசர் பதவி, சவுலிடமிருந்து தாவீதுக்குச் செல்கின்ற அரசர் பதவி என பிரிக்கலாம். இவரே இஸ்ரயேலின் கடைசி நீதித்தலைவர், முதல் இறைவாக்கினர்.

நீதித்தலைவர்களே போதும், இறைவனே தலைவராய் இருக்கிறார் எதற்கு உங்களுக்கு ஒரு அரசர்? அரசர் வந்தால் என்னென்ன பிரச்சினை வரும் தெரியுமா? என்றெல்லாம் சாமுவேல் மக்களை எச்சரிக்கிறார். ஆனாலும் மக்கள் கேட்கவில்லை.

எனவே இஸ்ரயேலின் முதல் அரசராக சவுல் என்பவரை சாமுவேல் திருப்பொழிவு செய்கிறார். இஸ்ரயேலின் முதல் இரண்டு அரசர்களான சவுல், தாவீது இவர்களை திருப்பொழிவு செய்த பெருமை இவருக்குரியது. இவரது காலம் கி.மு. 1105 முதல் 1015 வரை.

நீதித்தலைவர்களின் வரிசையில் கடைசியாக வரும் சாமுவேல், அரசுரிமையில் முதலாவதாக வரும் சவுல் இருவரையும் இணைக்கும் புள்ளியாக இந்த முதலாம் சாமுவேல் நூல் இருக்கிறது. இந்த நூலில் 31 அதிகாரங்களும், 810 வசனங்களும், 25,601 வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த நூலை எழுதியவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. யூத மரபுப்படி இதன் மூலம் சாமுவேல் இறைவாக்கினரால் எழுதப்பட்டது. அதில் காத், நாத்தான் ஆகிய இறைவாக்கினர்கள் பின்னர் தகவல்களை இணைத்தனர்.

ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பதில் குழப்பம் நீடிக்கிறது. எது எப்படியெனினும், அந்த ஆசிரியர் சாமுவேல், சவுல், தாவீது எனும் நபர்களைப் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் படித்திருக்கிறார் என்பது மட்டும் சர்வ நிச்சயம். அரசவையில் உள்ள குறிப்புகளைக் கூட படிக்கக் கூடிய வாய்ப்பு பெற்ற ஒருவரே இந்த நூலை எழுதியிருக்க வேண்டும்.

தனக்கு ஒரு குழந்தை வேண்டுமே என மனம் கசிந்து அழுகின்ற ஒரு தாயின் நிகழ்விலிருந்து இந்த நூல் தொடங்குகிறது. அப்படி ஒரு குழந்தை பிறந்தால் அதை ஆண்டவரின் ஆலயத்துக்கே அர்ப்பணிப்பேன் என்கிறாள் அன்னை. குழந்தை பிறக்கிறது, சாமுவேல் என பெயரிடப்படுகிறான்.

சின்ன வயதிலேயே அவனை இறைவன் நேரடியாக அழைக்கிறார். அவனை இறைவாக்கினராக உருமாற்றுகிறார். மக்களுக்கான நீதித்தலைவராக உயர்கிறார் என கதை பயணிக்கிறது. சற்றும் பிழையற்ற, கறையற்ற இறைவனின் நேரடித் தொடர்பில் இருந்த இறைவாக்கினராக சாமுவேல் வாழ்கிறார்.

மக்கள் இறைவனை விட்டு விலகிச் செல்லும் போதெல்லாம் அவர்களை எச்சரித்து மீண்டும் இறைவனின் அருகில் கொண்டு வர அவர் முயல்கிறார்.

மோசேயைப் போல மதிக்கத்தக்க தலைவராக சாமுவேல் இருக்கிறார். மோசேயைப் போல யுத்தம் எதுவும் செய்யவில்லை, ஆனால் மக்களை வழிநடத்துவதிலும், நெறிப்படுத்துவதிலும் அவர் மும்முரமாய் இருந்தார்.

சவுல் முதல் மன்னராகிறார். அழகும், கம்பீரமும் நிறைந்த அவர் பலவீனங்களாலும் நிரம்பியிருந்தார். பிடிவாதக்குணம் கொண்டவராய் இருந்தார், துணிச்சல் குறைந்தவராகவும் இருந்தார். பின்னாட்களில் அவர் பொறாமையும் சுயநலமும் கொண்டவராக மாறிப்போகிறார். பிறருடைய நல்ல விஷயங்களைப் பார்ப்பதை விட அவர்களுடைய குறைகள் அவருக்குப் பெரிதாகத் தெரியத் தொடங்குகின்றன.

மன்னரும், மக்களும் இறைவனையே சார்ந்திருக்க வேண்டுமென சாமுவேல் தொடர்ந்து வலியுறுத்துகிறார்.

தாவீதின் கதையில் குறைந்தபட்சம் கோலியாத்துடன் சண்டை போடும் கதையாவது அனைவரும் அறிந்ததே. இந்த நூல் அந்த நிகழ்வையும், யோனத்தான் தாவீது இருவருக்கும் இடையே இருந்த அற்புதமான நட்பையும் அழகாய் படம் பிடிக்கிறது. சவுலின் மகளை தாவீது மணக்கும் நிகழ்வும், பின்னர் தாவீதின் மேல் சவுல் கொள்ளும் பொறாமையும் வெறுப்பும் கொலை துரத்தல்களும் என பரபரப்பாக பயணிக்கிறது நூல்.

தாவீதைக் கொல்ல சவுல் துரத்துகிறார், தாவீதோ சவுலைக் கொல்ல கிடைக்கும் வாய்ப்புகளையும் விட்டு விடுகிறார். கடவுள் திருப்பொழிவு செய்தவரைக் கொல்ல மாட்டேன் என்கிறார். தாவீதின் குணாதிசயம் இதன் மூலம் வெளிப்படுகிறது.

மிக அற்புதமான கட்டமைக்கும், எளிமையான நடையும், இலக்கியச் சுவையும், ஆன்மிக ஆழமும் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளது.

Next Story