விதியை நம்புவது, விதியின் வினையை ஏற்பது...
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான விதியை நம்புவது மற்றும் விதியின் வினையை ஏற்பது குறித்த தகவல்களை காண்போம்.
இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
உலகில் நடக்கும் அனைத்தும் இறைவன் விதித்த விதிப்படியும், அளவுப்படியுமே நடக்கிறது என்று நம்பிக்கை கொள்வதுதான், ‘விதியை நம்புவது’ ஆகும்.
நன்மை-தீமை, லாபம்-நஷ்டம், செல்வம்-வறுமை, இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு... இவை அனைத்தும் இறைவனால் உண்டாக்கப்பட்டவை. இவை அனைத்தும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நடக்கிறது.
மனிதன் செய்யும் நன்மையான காரியங்களுக்கு நற் கூலியையும், தீமையான காரியங்களுக்கு தண்டனையையும் இறைவன் வழங்குவான்.
நன்மையும், தீமையும் இறைவன் நாட்டப்படி அரங்கேறினாலும், அவன் நன்மையை பொருந்திக்கொள்வான். தீமையைப் பொருந்தமாட்டான் என்றும் நம்பவேண்டும்.
‘அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக்கொள்வான்’. (திருக்குர்ஆன் 39:7)
‘நன்மை-தீமை இரண்டும் இறைவன் நாட்டமில்லாமல் நடக்காது’ என்று கூறும் பொழுது, நன்மை புரிந்தவருக்கு நல்ல பிரதி பலனும், தீமை செய்தவருக்கு தண்டனையும் கொடுப்பது நியாயமா? என்ற ஒரு நியாயமான கேள்வி எழுகிறது அல்லவா?.
ஆம், பின்னாளில் நடக்க இருக்கிற காரியங்களை அவன் இன்னதென நமக்கு தெரிவிக்கவில்லையே. அவன் நமக்கு வெளிப்படையாக அறிவித்ததெல்லாம் ஏவல்களும், விலக்கல்களும் தான். எனவே, அறிவித்தபடி ஏவலை ஏற்றும், விலக்கியதை விட்டும் தவிர்ந்து நடந்திட வேண்டும். இது ஒரு சாத்தியமான நடவடிக்கையே. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடு கிறது:
‘உள்ளத்தின் மீதும், அதை வடிவமைத்தவன் மீதும் சத்தியமாக, அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்’. (திருக்குர்ஆன் 91:7-10).
விதி ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வாறு கூறியதிலிருந்து நன்மை-தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து செயல்களில் ஈடுபடுவதற்குரிய தகுதியை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
விதி அடிப்படையில் எதுவும் நடக்கும் என்று எப்படியும் இருந்து விடக்கூடாது. நடந்ததை விதியின் மீது சுமத்தி, நடக்க இருப்பதை முழுமுயற்சியால் அடைய முற்பட வேண்டும்.
“ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்?, நரகவாசிகள் யார்? என்று (முன்பே இறைவனுக்குத்) தெரியுமா?’ என முகம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
‘ஆம்! தெரியும்’ என்றார்கள் நபிகளார்.
‘அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?’ என்று அந்த நபர் கேட்டார்.
அதற்கு நபியவர்கள், ‘ஒவ்வொருவரும் எதை அடைவதற்காகப் படைக்கப்பட்டார்களோ அல்லது எதை அடைவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ அதற்காகச் செயல் படுகிறார்கள்’ என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூஸைன் (ரலி), புகாரி)
ஒவ்வொருவரின் விதியும் அவர் படைக்கப்படுவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.
‘இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது இறைவனுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்)’. (திருக்குர்ஆன் 57: 22,23)
‘ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்’. (திருக்குர்ஆன் 54:49)
‘அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தான்; அதைத் திட்டமிட்டு அமைத்தான்’. (திருக்குர்ஆன் 25:2)
‘அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது’. (திருக்குர்ஆன் 33:38)
‘இறைவன் வானங்களையும், பூமியையும் அமைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து படைப்பினங் களின் விதிகளையும் தீர்க்கமாக எழுதிவிட்டான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), முஸ்லிம்)
எது நடந்தாலும், அது விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது. நடந்துவிட்ட ஒன்றுக்கு யாரும் யாரையும் குறைகூறக்கூடாது. நடந்துவிட்டதை நினைத்து வாழ்க்கையே முடங்கிவிட்டது என்று ஊனமாகி விடவும் கூடாது. வாழ்வின் அடுத்தகட்ட நகர்வுக்கு நம்மை தயார்படுத்திட வேண்டும்.
‘(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதமிடம் மூஸா (அலை) அவர்கள், ‘ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்களின் பாவத்தின் காரணமாக) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்’ என்றார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘மூஸாவே! இறைவன் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் வேதத்தை) வரைந்தான். இப்படிப்பட்ட நீங்கள், இறைவன் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்து விட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?’ என்று கேட்டார்கள்.
(இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டதாக மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)
தாயின் கருவறையில் கருவாக உருவானதிலிருந்து கல்லறை வரைக்கும் நடக்கும் ஒவ்வொரு செயலும் இறைவன் விதித்த விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது என்பதை நபிகள் நாயகம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) தெரிவிப்பதாவது:
‘உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு, அதைப் போன்றே (40 நாட்கள்) அந்த கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப் பிடித்துத்தொங்கும்) ஒரு கட்டியாக மாறுகிறது. பிறகு, அதைப்போன்ற (மேலும் 40 நாட்கள்) மெல்லப்பட்ட சக்கை போன்ற ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது’.
‘பிறகு (அதனிடம்) இறைவன் ஒரு வானவரை அனுப்பு கிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப் படுகிறார். 1) அந்த மனிதனின் வாழ்வாதாரம், 2) வாழ்நாள் (செயல்பாடு), 3) அவன் துர்பாக்கியசாலியா? 4) அல்லது நற்பாக்கியசாலியா? (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்’.
“இதனால்தான் இறைவன் மேல் ஆணை, ‘உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு, அல்லது ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்ய, அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்து விடுவார். இதைப் போன்றே ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும், சொர்க்கத்திற்கும் இடையே ஒரு முழம் அல்லது இரண்டு முழங்கள் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள அவர் நரகவாசி களின் செயலைச்செய்து, அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்து விடுவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (புகாரி)
‘இயலாமை, மற்றும் புத்துணர்ச்சி உட்பட யாவும் விதியின் பிரகாரமே நடக்கிறது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), முஸ்லிம்)
விதியை நம்பவேண்டும். அதிலே தர்க்கம் செய்யக் கூடாது. விதி குறித்து விவாதம் செய்ய ஆரம்பித்தால் அது எல்லை தாண்டி போய்விடும். அதனால் இறைநம்பிக்கையும் பாழாகிவிடும்.
ஷைத்தான் தான் விதியைப் பற்றி தர்க்கம் செய்பவன். அவன் இறைவனிடம் ‘உன்னுடைய விதியில் நான் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரசை தாழ்த்துவேன் என்றிருந்தால், அவ்வாறு நான் செய்யாமல் போனதற்கு எனக்கு சக்தி இருக்குமோ?’ என விவாதம் செய்தான். இதனால் இறைவனின் நிரந்தரமான சாபத்திற்கு அவன் ஆளாகி விட்டான்.
கூபா நகரப் பள்ளிவாசலில் ஒருவர் விதியைப் பற்றி மக் களுக்கு உரை நிகழ்த்தினார். அதனைக் கேள்விப்பட்ட அலி (ரலி) அவர்கள் அவரை அழைத்து, ‘இனிமேல் நமது இறைஇல்லங்களில் விதி குறித்து பேசக்கூடாது’ என எச்சரிக்கை செய்தார்கள்.
விதியைப் பற்றி வீணாக விவாதித்து, வழிகெட்டுப் போனவர்கள் ஜப்ரிய்யா, கத்ரிய்யா கூட்டத்தினர் ஆவர். அவர்களைப் போன்று நாமும் வழிகெட்டு போய்விடக்கூடாது.
நடந்து போனதை எல்லாம் ‘அவன் செயல்’ என்று கூறி, விதி என நம்பி கடந்து போக வேண்டும். கடக்க வேண்டியதை கதி என்று நினைத்து முயற்சி செய்து முன்னேற வேண்டும். விதியை நம்புவதிலும் நன்மைகள் பல இருக்கத்தான் செய்கிறது.
Related Tags :
Next Story