விதியை மாற்றும் வேலூர்பாளையம் பிரம்மேஸ்வரர்


விதியை மாற்றும் வேலூர்பாளையம் பிரம்மேஸ்வரர்
x

படைப்புக் காலத்தின் தொடக்கத்தில் சிவபெருமானைப் போல், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன.

ஈசனைப்போல் தானும் ஐந்தொழில்களைச் செய்ய வல்லவன் என்ற தலைக்கணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இச்செருக்கினை அடக்க எண்ணிய ஈசன், பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார். இதனால் பிரம்மன், நான்முகன் ஆனார். அத்துடன் படைக்கும் ஆற்றலையும் நினைவிழக்கச் செய்தார். தலை கொய்யப்பட்டதை எண்ணி அவமானமடைந்த பிரம்மன், படைப்பாற்றலும் பறிபோனதால் துவண்டுபோனார்.

இந்தச் சூழ்நிலையில் தன்னுடைய தந்தை பிரம்மாவைப் பார்த்த நாரதர், பூலோகம் சென்று சிவப் பிரதிஷ்டை செய்யுமாறு யோசனை கூறினார். அதன்படி பூலோகம் வந்த நான்முகன், துங்கபத்திரா, குண்டூர், சென்னை (பெரம்பூர், அயனாவரம், தேனம்பாக்கம்), விழுப்புரம், திருப்பட்டூர், அம்பல், அம்பாசமுத்திரம், ஈரோடு, புனலூர் உள்பட 14-க்கும் மேற்பட்ட தலங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார்.

பல்வேறு தலங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்த பிரம்மா, வேலூர்பாளையம் வந்தபோது, அங்கு நிலவிய மென்மையான சூழலால் ஈர்க்கப்பட்டார். பின் அங்கே தவத்தில் ஆழ்ந்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிரம்மா தவம் புரிந்ததால், அந்த கனல் கயிலையை எட்டியது. நெஞ்சம் நெகிழ்ந்த சிவபெருமான், பிரம்மாவுக்கு தாம் இட்ட சாபத்தைப் போக்க முடிவு செய்தார். உடனே உமையவளுடன் தோன்றி, “எம்மீதுள்ள பக்தியின் மிகுதியால் பூஜித்துவந்த உமது மெய்யன்புக்கு மகிழ்ந்தோம். வேண்டுவது என்ன?” என்று பிரம்மனிடம் வினவினார்.

அதற்கு நான்முகன், “ஐயனே! அடியேன் அறியாது கொண்ட அகந்தையைப் போக்கி, மன்னித்தருள வேண்டும். தங்கள் மீது என்றும் மாறாத நிறைவான பக்தியும், அன்பும் நீடித்து நிலைத்திருக்க அருள வேண்டும்” என்று கேட்டார்.

அதனையேற்று, மீண்டும் படைப்பாற்றலை வழங்கிய எம்பெருமான், “நீவிர் நற்கதியை அடைந்த இத்தலத்தில், எம்மைப் பணிந்தபின், உம்மை நேர் நின்று பணிந்திடுவோருக்கு வினைவிதியை மாற்றி, அவர்கள் வாழ்க்கையில் மேன்மையடைய அருள்புரிவாய். தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக. விதியிருப்பின் விதிகூட்டி அருள்க!” என்று பிரம்மாவுக்கு உரைத்தார்.

அப்போது பார்வதி தேவி, குருவாய் வீற்றிருந்து பிரம்மாவுக்கு உபதேசம் செய்தருளினார். ஈசன்-ஈஸ்வரியின் பேரன்புக்குப் பாத்திரமான பிரம்மாவுக்கு சாபம் நீங்கி, விமோசனம் பிறந்தது. உடனே சத்யலோகத்துக்குச் சென்ற நான்முகன், மறுபடியும் படைப்பாற்றலைப் பெற்று தம்முடைய பணியைத் தொடங்கினார் என்பது தல வரலாறு.

காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு, தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த பல்லவர்கள், பாலாறு, கூவம் நதிக்கரைகளில் சிவாலயங்களை நிர்மாணிக்க விருப்பம் கொண்டனர். அப்போது மூன்றாம் நந்திவர்மப் பல்லவன் அரசவையில் பிரம்மஸ்ரீராஜன் என்ற சிவனடியார் அமைச்சராக இருந்தார். அவர் தம் ஞானத்தின் மூலம், பிரம்மாவின் சாபம் நீங்கிய தலம் வேலூர்பாளையம் என்பதை உணர்ந்து, இவ்விடத்தில் ஆலயம் நிர்மாணிக்குமாறு அரசனிடம் கூறினார்.

அதன்படியே அங்கு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. பிரம்மாவுக்கு சிவபெருமான் அருள் புரிந்ததால், இத்தல இறைவன் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை ஆகும்.

சுமார் 1,166 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாலயம் 27 செப்பேடுகளைக் கொண்டுள்ளது. அதில் ஒரு செப்பேடு, காஞ்சீபுரம் அருகே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகளவில் புகழ்பெற்று விளங்கிய தட்சசீலம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்ததைக் குறிப்பிடுகிறது. அப்போதிருந்த கோட்டை தூர்ந்து, மண்மேடாகிப் போனது.

பொதுவாக, சிவலிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மாவாகவும் (பூமிக்குள் இருக்கும்), நடுப்பகுதி விஷ்ணுவாகவும் (ஆவுடையார்), மேல்பகுதி ருத்ரமாகவும் விளங்கிவருகிறது. இது பிரம்மாவின் சாபம் போக்கிய தலமென்பதால், இங்கு ருத்ரபாகம் மட்டுமே உள்ளது. மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து, அவர்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதுபோல, இந்த சிவலிங்கம் சிறிது சாய்ந்த நிலையிலேயே உள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு அம்சங்களால் சிறப்புற்று விளங்கும் இவ்வாலயத்தில், பிரம்மேஸ்வரரை வழிபடுவோரின் தலையெழுத்து மங்களகரமாக மாற்றப்பட்டு, திருப்பங்கள் விரைவில் ஏற்படும் என்பது ஐதீகம். மேலும், கர்மவினைத் தாக்கங்கள் குறையும், புத்திக்கூர்மை ஏற்படும், மனதில் தெளிவு பிறக்கும், உலக வாழ்வுக்குத் தேவையான பொன், பொருள், செல்வம் என அனைத்துத் தேவைகளையும் பெற வழிவகை உண்டாகிறது என்பது நம்பிக்கை.

இவைதவிர, விரும்பும் வேலை கிடைக்கவும், கால்நடைச் செல்வங்கள் ஆரோக்கியம் பெறவும் வழிபட்டு வருகின்றனர். திருமணத்தடை நீங்க, பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர, தொழில், வணிக விருத்திபெற வழிபட்டுப் பயன் பெறுகிறார்கள்.

இந்த பிரம்ம வித்யாம்பிகை உடனுறை பிரம்மேஸ்வரர் ஆலயம் தினமும் காலை 7 மணிமுதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். விஷேச நாளில் காலை 6மணி முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.

மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம் ஆகியவை இவ்வாலய முக்கிய விழாக்கள் ஆகும்.

அமைவிடம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் கனகம்மாசத்திரம் செல்லும் சாலையிலும், சென்னை- திருத்தணி ரெயில் மார்க்கத்தில் திருவாலங்காடு ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், அரக்கோணம் பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும், வேலூர் பாளையம் உள்ளது.

கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்

Next Story