அழகு நிறைந்த சூரிய உதயமும், அஸ்தமனமும்...


அழகு நிறைந்த சூரிய உதயமும், அஸ்தமனமும்...
x
தினத்தந்தி 28 March 2019 10:45 PM GMT (Updated: 28 March 2019 1:00 PM GMT)

காலையில் சூரியன் மேலே எழும்பி வருவது சூரிய உதயம் என்றும், மாலையில் அது மேற்கே மறைவது சூரிய அஸ்தமனம் என்றும் அழைக்கப்படுகிறது.

சூரிய உதயம்

ஆஸ்திரேலியாவின் சூரிய அஸ்தமன தேசிய பூங்காவில், சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் இயற்கை பாறை வளைவு சூரிய அஸ்தமன காட்சி.

அழகிய சூரிய அஸ்தமனம்

வெயில் கடுமையாக கொளுத்துகிறது. உச்சி வெயிலை உடல் தாங்கிக் கொள்வதில்லை. ஆனால் காலையிலும், மாலையிலும் சூாிய வெயில் மென்மையாக இருக்கிறது. வெயிலில் உலவி காற்றுவாங்கி ஆரோக்கியம் பெற்றுக்கொள்கிறோம். காலையில் சூரியன் உதிப்பதையும், மாலையில் சூரியன் மறைவதையும் ரசிக்கும் நாம், அவை பற்றிய பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்...

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்பதை அறிவீர்கள். காலையில் சூரியன் மேலே எழும்பி வருவது சூரிய உதயம் என்றும், மாலையில் அது மேற்கே மறைவது சூரிய அஸ்தமனம் என்றும் அழைக்கப்படுகிறது. உண்மையில் சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. பூமி சுற்றுவதால் நாம் அப்படி உணர்கிறோம். விண்வெளியில் இருந்தால் பலமுறை சூரிய உதயத்தைப் பார்க்கலாம். குறிப்பிட்ட உயரம் தாண்டிச் சென்றால் எப்போதும் சூரியனை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

பூமியில் சூரிய உதயம் எப்படி நிகழ்கிறது தெரியுமா? உருண்டை வடிவமுள்ள பூமி, தனது அச்சில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுழல்கிறது. அதனால் சூரியன் கிழக்கில் தோன்றுவதுபோலவும், மேற்கில் மறைவதாகவும் தோற்றமளிக்கிறது. ஆனால் சூரியன் அதே இடத்தில் இருந்தபடிதான் சுழல்கிறது. பூமிதான், தன் அச்சில் மேற்கு கிழக்காக சுழல்வதுடன், சூரியனையும் வலம் வருகிறது.

சூரிய அஸ்தமனத்தை மற்ற காலங்களைவிட கோடை காலத்தில் நன்றாக ரசிக்க முடியும். பூமியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம், சூரிய ஒளியை சிதறடிப்பதால் சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் அழகாக ரசிக்க முடிகிறது.

சூரிய அஸ்தமனத்தின்போது, தொடுவானத்தில் சூரியனின் நிறம் இளஞ்சிவப்பாகத் தெரியுமல்லவா? அது ஏன் தெரியுமா? அஸ்தமன தூரத்தில் குறுகிய அலைநீளமுள்ள நிறங்கள் ஒவ்வொன்றாக ஒளிச்சிதறலில் இருந்து நம் கண்களுக்குப் புலப்படாமல் மறையத் தொடங்கும். முதலில் நீலமும், பின்னர் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு இப்படி ஒவ்வொன்றாக மறையும்போது, அதிக அலைநீளமுள்ள சிவப்புதான் நம் கண்களுக்குப் புலப்படும். அதனால்தான் மாலைச்சூரியன் நமக்கு சிவப்பு வண்ணத்தில் அழகாக காட்சியளிக்கிறது. இது சில நேரங்களில் பந்து தீப்பற்றிக்கொண்டது போன்ற தோற்றத்தைத் தரும்.

நாம் சூரிய அஸ்தமனத்தை காணும்போது, சூரியனின் எதிரொளிப்பு காட்சியையே காண்கிறோம். உண்மையான சூரிய மறைந்து போயிருக்கும் என்பதே நிஜம். ஏனெனில் வளிமண்டலம் மற்றும் பூமியின் வளைவு ஆகியவை சூரியனின் ஒளியை அப்படி வளைத்து சிதறடிப்பதால் நாம், சூரியன் இருக்கும் இடத்திற்கு சற்று மேலாக சூரியனின் மாயத்தோற்றத்தையே சூரிய அஸ்தமனமாக காண்கிறோம்.

சூரிய அஸ்தமனம் மிக மிக அழகாகத் தோன்றுமானால், நிஜத்தில் வளிமண்டலத்தில் மாசு மிகுந்திருக்கிறது என்று பொருளாகும். உண்மையில் புகைத் துகள்தான் இளஞ்சிவப்பு, சிவப்பு, ஆரஞ்சு வண்ணத்தை துல்லியமாக தெளிவாக எதிரொளிக்க காரணமாக அமைகிறது. எனவே மாசு நிறைந்த பகுதியில் அழகான சூரிய அஸ்தமன காட்சியை தெளிவாக காணலாம். பனிபடர்ந்த மற்றும் இருண்ட வானில் தோன்றும் சூரிய அஸ்தமனம் பலரும் பாராட்டும்படி அழகாகத் தோன்றுவதில்லை.

இரவில் வானம் பிரகாசமாகவும், காலையில் சிவப்பு வண்ணத்திலும் வானம் தோன்றுவது நல்லதாகும். அதிக அழுத்தமுள்ள காற்று சீரடைந்து அழுத்தம் குறைந்த தூய காற்று கிழக்கில் நிரம்பியிருப்பதையே சிவந்தவானம் காட்டுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் சூரிய உதயத்தை முதலில் காணும் நகரம் அருணாசலபிரதேசமாகும். குஜராத் நகரம் சூரிய உதயத்தை கடைசியாகக் காண்கிறது.

தமிழகத்தில் சூரிய உதயத்தை நன்கு ரசிக்க முடிந்த நகரமாக கன்னியாகுமரி திகழ்கிறது. சூரிய உதயத்தை சென்னையில் எழும்பூர் நகரம் முதலில் காண்கிறது. அதனால்தான் அந்த நகரத்திற்கு எழும்பூர் (எழும்+ ஊர்) என்ற பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சூரியன் உதயமாவது மற்றும் மறைவதைப் பொறுத்துத்தான் நேரமும், பொழுதுகளும் கணக்கிடப்படுகிறது. காலை, மாலை, இரவு என்பது நாம் அதிகமாகப் பயன்படுத்தும் பொழுதுகளாகும். ஆனால் சூரிய உதயத்தைப் பொறுத்து சில அந்திப் பொழுதுகள் அளவிடப்படுகின்றன. அவை சில பயன்பாட்டிற்கு அவசியமானதாகும்.

அந்தி என்பது சூரியன் உதயமாவதற்கு முன் கிழக்கு திசையில் அந்திவானத்தில் (தொடுவானம்) உள்ள மங்கலான வெளிச்சம் மற்றும் சூரியன் மறைந்தபிறகு மேற்கு திசையில் அந்திவானத்தில் உள்ள மங்கலான வெளிச்சத்தை குறிக்கும் சொல் ஆகும்.

வானியல் அந்தி என்பது அந்திவானத்தில் இருந்து சூரியன் 18 டிகிரி கீழே இருப்பதை குறிக்கும். இது 12 டிகிரி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் சூரியனின் ஒளியின் தாக்கம் வானில் முற்றிலும் இருக்காது. பூமியில் புலப்படாத இது வானியல் அந்தி எனப்படுகிறது.

கடல் சார் அந்தி என்பது அந்திவானத்தில் இருந்து சூரியன் 12 டிகிரி கீழே இருப்பதை குறிக்கும். இது 6 டிகிரி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் உள்ள வெளிச்சம், கடல் போக்குவரத்திற்கு போதுமானதாக கருதப்படும். எனவே இது கடல்சார் அந்தி எனப்படுகிறது.

சமூக அந்தி : அந்திவானத்தில் இருந்து சூரியன் 6 டிகிரி கீழே இருப்பதை குறிக்கும். இது சூரியன் உதயமாகும் வரை நீடிக்கும். அரசாங்கங்கள் - காலையில் தெரு விளக்கை அணைக்க / மாலையில் தெரு விளக்கை செயலாக்க, சாலை போக்குவரத்தின் போது வாகனங்களின் முகப்பு விளக்கு குறித்த விதிமுறைகள் போன்றவைகளுக்கு, இந்த நேரத்தை பயன்படுத்துகிறார்கள்.

Next Story