நல்ல சுவடுகளை விட்டுச்செல்லுங்கள்


நல்ல சுவடுகளை விட்டுச்செல்லுங்கள்
x
தினத்தந்தி 29 March 2019 10:26 AM GMT (Updated: 29 March 2019 10:26 AM GMT)

ஒருவர் மரணமடைந்து விட்டால் உலகத்துடனான அவருடைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விடும் என்பது உண்மை. ஆயினும் அவர் விட்டுச்செல்லும் சுவடுகள், அவருடைய மறைவுக்குப் பின்னரும் உலகில் இருந்துகொண்டே இருக்கும். அவை நல்ல சுவடுகளாக இருக்கலாம், அல்லது தீயவையாக இருக்கலாம்.

வாழும் காலத்திலேயே நல்ல அடையாளங்களை விட்டுச்செல்லும் வண்ணம் வாழ்வை அமைத்துக்கொள்ளல் வேண்டும்.

அனைத்துச்செயல்களையும் இறைவன் பதிவு செய்துகொண்டே இருக்கின்றான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆயினும் நாம் விட்டுச்செல்லும் சுவடுகளைக்கூட இம்மி பிசகாமல் பதிவு செய்கிறான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறைவன் கூறுகின்றான்: “திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக்கொண்டே இருக்கின்றோம். அவர்கள் விட்டுச்சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்”. (திருக்குர்ஆன் 36:12)

இறைவனின் மன்னிப்பையும், மறுமை வெற்றியையும் பெறுவதற்கு சிலபோது நாம் விட்டுச்செல்லும் நல்ல சுவடுகள்கூட நமக்கு துணை நிற்கலாம்.

ஆம், நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர் நமது தர்மத்தை உண்டவர் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் விட்டுச்செல்லும் சுவடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர், நமது வார்த்தைகளால் ஆறுதல் அடைந்தவர் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். ‘நம்மை போன்று ஆறுதல் வார்த்தைகள் கூற யாரும் இல்லையே’ என்று அவர் ஆதங்கப்பட வேண்டும்.

நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர், நம்மால் நல்வழி பெற்றவர் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர், நமது நல்ல நடத்தையால் கவரப்பட்டவர்கள் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும்.

நாம் விட்டுச்செல்லும் சுவடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த சுவடுகள்தான் நமது இறைவனை, மன்னிக்கும் இறைவனாக நமக்குப் பெற்றுத்தரும்.

ஆயினும், நம்மில் பெரும்பாலானோர் விட்டுச்செல்லும் அடையாளங்கள் எப்படி இருக்கின்றன?

அரண்மனை போன்ற வீடு, வசதிமிக்க வாகனம், பேர் சொல்லும் பிள்ளை, குடும்பத்தினர் சிரமம் இன்றி உண்டு கழித்து மகிழ்ந்திருக்க திரண்ட செல்வம்.

இதைத்தானே அனேகமானவர்கள் விட்டுச்செல்கின்றார்கள்.

இந்த அடையாளங்களும், சுவடுகளும் நமக்கான மறுமை வெற்றியைப் பெற்றுத்தருமா?

ஒருபோதும் இல்லை. மாறாக மறுமை வெற்றியை சிலபோது இவை கேள்விக்குறியாக மாற்றிவிடக்கூடும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “மனிதன் மரணித்துவிட்டால் மூன்றே மூன்று விஷயங்களைத் தவிர அவனது அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டுவிடும். அவை: நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, அவனுக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை”. (முஸ்லிம், திர்மிதி)

இவைதான் உண்மையான சுவடுகள். இதுபோன்ற சுவடுகள்தான் மன்னிக்கும் இறைவனை மறுமையில் பெற்றுத்தரும்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் பார்வையற்ற மூதாட்டி ஒருவரைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். அபூபக்கர் (ரலி) அவர்கள் மரணித்த பிற்பாடு, அந்த மூதாட்டியைப் பராமரிக்கும் பொறுப்பை உமர் (ரலி) ஏற்றுக்கொண்டார். ஒருநாள் அந்த மூதாட்டியைச் சந்திக்கச் செல்கின்றார் உமர் (ரலி) அவர்கள்.

உமர் (ரலி) அவர்களிடம் அந்த மூதாட்டி கேட்டார்: “உமது நண்பர் மரணித்துவிட்டாரா?”

உமர் (ரலி) சற்று நேரம் திகைத்துவிட்டார். காரணம் அபூபக்கர் (ரலி) அவர்கள் மரணித்த செய்தி அந்த மூதாட்டிக்குத் தெரிய வாய்ப்பு குறைவு. அந்த மூதாட்டியிடம் கேட்டார்கள், “உங்களுக்கு எப்படி அது தெரியும்?”

மூதாட்டி: “உமது நண்பர், பேரீத்தம் பழங்களை எனக்கு உண்ணத் தரும்போது அதன் விதைகளை அகற்றிவிட்டுத்தான் எனக்குத் தருவார். ஆனால் நீர் விதைகளுடன் தருகின்றீரே”.

உமர் (ரலி) அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

அலி (ரலி) அவர்களின் பேரர் ஜஅபர் (ரலி) அவர்கள், கோதுமையையும் உணவுகளையும் கோணிப்பையில் அடைத்து, மதீனாவில் வசிக்கும் ஏழைகளின் வீட்டுவாசல்களில் அதிகாலைப் புலர்வதற்கும் முன்னரே ஒவ்வொரு நாளும் வைப்பார்கள். யார் இந்த உணவை வைக்கின்றார்கள் என்று எவ்வளவுதான் முயன்றும் எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருநாள் ஜஅபர் (ரலி) மரணமடைகின்றார். அன்றைய தினத்தின் அதிகாலையில் ஏழைகளின் வீட்டு வாசல்களில் உணவுப் பொட்டலங்கள் எதுவும் வைக்கப்படவில்லை.

அவரது உடலைக் குளிப்பாட்டும்போது இடது தோளில் ஒரு வடு இருப்பதை மக்கள் கவனிக்கின்றார்கள். ஆம்... நாளெல்லாம் ஏழைகளுக்காக உணவுகளை சுமந்த வடுதான் அது.

இக்கட்டான சந்தர்ப்பங்களில் உதவியவர்களை மனிதர்கள் ஒருபோதும் மறப்பதில்லை.

பொதுப்போக்குவரத்து வாகனங்களில் வயது முதிர்ந்தவர்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுப்பது, சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் தாம் போகும் பாதையில் இருப்பவர்களை ஏற்றிச்சென்று உதவுவது, பாரமான பொருட்களை வாகனங்களில் ஏற்றவும், இறக்கவும் உதவுவது, அவசரத் தேவைகளின்போது கை கொடுத்து உதவுவது.. போன்றவைதான் நல்ல சுவடுகள்.

ஆம், அடுத்தவர்களை மகிழ்விப்பதற்கும், அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பெரும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்பதல்ல.

மாறாக, நமது சின்னச்சின்ன செயல்பாடுகள்கூட தூய்மையாக அமைந்துவிட்டால், மரணத்தைத் தாண்டியும் நாம் அடையாளப்படுத்தப்படுவோம். மரணத்திற்குப் பின்னரும் அவை நம்மைக் காப்பாற்றக்கூடும்.

இவ்வுலகில் சிலர் விட்டுச்செல்லும் அடையாளங்கள், காற்றில் கரைந்து காற்றோடு காற்றாக மறைந்துவிடுகிறது. இன்னும் சிலர் விட்டுச்செல்லும் அடையாளங்களோ பசுமரத்தாணி போன்று மனித மனங்களில் அப்படியே பதிந்துவிடுகிறது. எனவே நாம் விட்டுச்செல்லும் சுவடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டிய நேரம் இதுதான்.

நூஹ் மஹ்ளரி, குளச்சல்

Next Story