தீமைக்கு தீமை செய்யாதிருங்கள்


தீமைக்கு தீமை செய்யாதிருங்கள்
x
தினத்தந்தி 11 April 2019 11:00 PM GMT (Updated: 11 April 2019 11:59 AM GMT)

தேவனுடைய கிருபையினாலே ஒவ்வொரு நாளும் ஆசீர்வாதமாய் கர்த்தர் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இம்மட்டும் உங்களை ஆசீர்வதித்த தேவன் தொடர்ந்து வழிநடத்த வல்லவராக இருக்கிறார்.

தீமைக்கு தீமை செய்யாதிருங்கள் என்ற வார்த்தையை தேவன் எனக்கு உணர்த்தி இந்த தலைப்பில் உங்களுக்காக எழுத கிருபை பாராட்டினார். ஜெபத்தோடே வாசித்து ஆவிக்குரிய நல்ல சுபாவங்களிலே முன்னேறுங்கள். தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும்.

இவ்வுலகம் பொல்லாங்கன் (சாத்தான்) கையில் இருக்கிறபடியால் எப்பக்கம் திரும்பினாலும் சத்துருவினுடைய அடிமைத்தனத்தில் சிக்கி பலவிதமான தீமையான எண்ணங்களால் நிரம்பியிருக்கிற மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொலைக்கு கொலை, பழிவாங்குதல், கசப்பு வைராக்கியம், தவறான எண்ணங்கள் இவைகள் அனைத்தும் தீமையில் மறைந்திருக்கிற பிசாசின் ஆயுதங்கள்.

தேவபிள்ளையே, பிறர் உங்களுக்கு தீமை செய்தால் நாமும் அவர்களைப் போலவே தீமைக்கு தீமை செய்தால் தேவனுடைய அன்பு நமக்குள் இல்லை.

‘பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை’. III யோவான் 11

ஆகவே இக்கடைசி நாட்களில் நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து நம் ஆண்டவரின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களை அர்ப்பணியுங்கள்.

தீமை செய்தோரை ஆசீர்வதியுங்கள்

‘நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்’. ஆதி.50:20

தேவனுடைய சுபாவம் பிறரை மன்னிப்பது மாத்திரமல்ல, மற்றவர்கள் செய்த தீமையை மீண்டும் அவர்களுக்கு விரோதமாய் செய்யாமலிருப்பது. சத்துருவின் போராட்டம் நிறைந்த உலகில் அவனுடைய கையிலிருக்கிற சகல ஆசீர்வாதங்களையும் நாம் சுதந்தரித்து அவற்றை அனுபவிப்பது தான் தேவ சித்தம். ஆனால், இது எப்போது நம் வாழ்வில் நிறைவேறுகிறது என்பது தான் முக்கியம்.

பழைய ஏற்பாட்டில் யோசேப்பு, உடன்பிறந்த சகோதரர்களால் பலவிதமான பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தான். தம் சகோதரர்கள் தன்னை பகைத்தாலும் யோசேப்பு அவர்களை பகைக்கவில்லை, அன்பு கூர்ந்தான் என்பதற்கு மேலே நான் குறிப்பிட்டிருக்கிற வசனம் ஆதாரமாயிருக்கிறது. இதே சுபாவம் நமக்குள்ளும் வரும்போது நாமும் யோசேப்பைப் போல ‘எனக்கு தீமை செய்ய நினைத்தார்கள், கர்த்தரோ அதை நன்மையாக முடியப்பண்ணினார்’ என்று கூறுவோம்.

உங்கள் குடும்பத்தில் உறவினர்களால், உடன் வேலையாட்களால், நண்பர்களால் அல்லது உடன் ஊழியர்களால் தீமைகளை நீங்கள் அனுபவித்தால் அவர்களைக் குறித்த கசப்பை உங்கள் இருதயத்திலிருந்து அகற்றுங்கள்.

‘தீமைக்குத் தீமையையும், உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்’. 1 பேதுரு 3:9

மேற்கண்ட வசனம் நம்மை ஆசீர்வாதத்தை சுதந்தரிப்பதற்கு நேராய் வழிநடத்துகிறது. எத்தனை ஆழமான ஆன்மிக அனுபவத்தை பேதுரு நமக்கு உணர்த்துகிறார்.

பிரியமானவர்களே, இப்படிப்பட்ட உன்னதமான சுபாவம் நமக்குள் வர மாம்சத்தின் கிரியைகளை, எண்ணங்களை அழிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பிறரை (நமக்குத் தீமை செய்தோரை) ஆசீர்வதித்து ஜெபிக்க ஆரம்பியுங்கள். மனதார வாழ்த்துங்கள், நீங்கள் வாழ்த்தப்படுவீர்கள். பிறரை போற்றுங்கள், நீங்களும் போற்றப்படுவீர்கள்.

தீமையை விலக்குங்கள்

‘இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்’. உபா. 17:7

அன்பானவர்களே, பொதுவாக ஒன்றை விலக்கினால்தான் வேறொன்றைப் பெற முடியும். இருளை வைத்துக் கொண்டிருந்தால் ஒளியைப் பெற முடியாது. அவிசுவாசத்தை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது விசுவாசத்தை பெற முடியாது. அவநம்பிக்கையை அழித்தால் அற்புதங்களை அடையலாம்.

தீமை செய்தோரை ஆசீர்வதிப்பது ஓர் உன்னத அனுபவம். அதேபோல் நமக்குள் இருக்கும் தீமையை விலக்குவது ஓர் ஒப்பற்ற அனுபவம். இதைத் தான் உபா.17:7 ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம்.

ஒரு காலத்தில் ஆண்டவரையே நம்பி விசுவாச வாழ்க்கை நடத்தி விட்டு தற்பொழுது பணத்திற்கும், புகழுக்கும், உலகத்திற்கும் அடிமையாய் இருந்தால் அதுவும் ஒரு தீமை என எபேசியர் 5:5 ல் பவுல் கூறுகிறார்.

எனக்கன்பான தேவனுடைய பிள்ளையே, நாம் விலக்க வேண்டிய காரியங்களை நாம் தான் விலக்க வேண்டும்.

‘இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக’. உபா.13:5

மேற்கண்ட தேவனுடைய வார்த்தைகளை வாசித்த சகோதரனே! சகோதரியே! நீங்கள் அவரை அறிய வேண்டிய பிரகாரம் அறிந்த பிறகும் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், மேலே நாம் குறிப்பிட்ட தீமைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தால் உங்கள் நடுவிலிருந்து அவைகளை விலக்குங்கள். உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் அளவில்லாமல் ஊற்றப்படும். அல்லேலூயா!

சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.

Next Story