பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம்


பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம்
x
தினத்தந்தி 23 April 2019 10:19 AM GMT (Updated: 23 April 2019 10:19 AM GMT)

உண்மையான வெற்றி என்பது பிறரை அழிப்பதில் அல்ல

ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி, இந்தத் தொடரின் மூலமாக அறிந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ராவணனின் மனைவி மண்டோதரியைப் பற்றிப் பார்க்கலாம்.

“உனக்கும் மரணம் வந்ததோ அன்பே?” கதறியபடி ஓடி வந்தாள் மண்டோதரி.
“இவள்தான் ராவணன் மனைவி.” விபீஷணனின் குரல் துக்கத்துடன் ஒலித்தது.

“தேவதச்சன் மயனின் மகள். உத்தம பத்தினி. கணவன், மகன்கள் மேல் உயிரை வைத்திருப்பவள். தன் கணவன் செய்யக்கூடாத செயல்களைச் செய்தாலும், அவன் மீது வெறுப்பை காட்டாது நேசித்தவள்.” குரல் இடற அவளைப் பற்றி ராமனுக்கு எடுத்துரைத்தான், விபீஷணன்.

“மங்கையருள் மாணிக்கம். உத்தம ஸ்திரீ” ராமன் கருணையுடனும், கனிவுடனும் அவளை நோக்கினான்.

கூந்தல் அவிழ, நெஞ்சில் அடித்தபடி ஓடி வந்த மண்டோதரி, ராவணன் உடல் மீது விழுந்து புலம்பினாள்.

“மேரு மலை போன்ற உன்னையும் ஒரு மானுடன் கொன்றானா?” என்று அரற்றினாள்; அழுது புலம்பினாள்.

“உனக்கென்ன? நீ மேலுலகம் எய்து விட்டாய். நீ இல்லாத உலகில் நாங்கள் இனி எப்படி வாழ்வோம்? சீதை மேல் நீ வைத்த காதலே உன் அழிவுக்குக் காரணம் ஆகிவிட்டதே.” என்று கதறினாள்.

கணவனை மறத்தலும், நினைத்தலும் இன்றி, எந்நேரமும் அவனையே எண்ணி சிந்தித்துக் கொண்டிருக்கும் நெஞ்சம் படைத்தவள், மண்டோதரி. கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாக விளங்கிய அவள், ராவணன் உடல் மீது விழுந்து புலம்பினாள். அவளின் அழுகை கேட்டு மரங்களும், மலைகளும் கலங்கின.

மண்ணில் சரிந்து கிடந்த கணவனின் உடலைப் பார்த்தாள். எத்தனை வலிமை மிகுந்த புஜங்கள். சிவன் வீற்றிருக்கும் மலையையே அசைத்தவன். மார்பில் எள் இருக்க இடமில்லாது அம்பின் வடுக்கள்.

“இத்தனை அம்புகளும் உன் மனச் சிறையில் ஒளித்து வைத்திருக்கும் சீதையைத் தேடுகின்றதோ?” சந்தேகத்துடன் பதிலுக்கு அவன் முகத்தைப் பார்த்தாள். அவளின் மன வலிமை குலைய வாய் விட்டு அழுதாள்.

“எனக்கு ஏன் இந்தக் கொடுமை? கணவன் இறந்தபின் நான் இறப்பதா? தரையில் இறந்து கிடப்பது அரக்கர் தலைவனா? பாவத்தின் விளைவு இதுதானா? ஒரே கணையால் உன் உயிரைப் பறித்த மானுடனின் வலிமைதான் எத்தகையது? ஜானகி என்னும் ஒரு தழல், இந்த இலங்கையை, அதன் தலைவனை அழித்து விட்டதே. எம் தலைவா! பெண்களுக்கு அணி போன்றவள். கற்பின் கனல். அவளே உனக்கு கொள்ளியாகிப் போனாளே?”

“உனக்கு இறப்பே வராது என்று இறுமாந்திருந்தேன். உனக்கு அழிவை உண்டாக்கும் ஒரு மனிதன் வருவான் என்று நான் நினைக்கவே இல்லையே? மூன்றரை கோடி ஆயுள், அறிஞர்களும் அளந்து சொல்ல முடியாத தோள் ஆற்றலுக்கு அழிவே கிடையாது என்று எண்ணியிருந்தேனே. பதினாறு உலகமும் அஞ்சும் வீரரான நீ மேலுலகம் சென்றாயே?” - மண்டோதரியின் புலம்பல் நின்றபாடில்லை.

அவள் உள்ளம் திக் பிரமை பிடித்து இருந்தது. ராவணனுக்கும் அழிவு நேரும் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. எத்தனை அற்புதமான அரக்கன். சிறந்த சிவபக்தன். சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்து எண்ணற்ற வரங்கள் பெற்றவன். ஆயுர்வேதத்தில் சிறந்தவன். மருத்துவன். சிறந்த நிர்வாகி. அவன் அரசாட்சியில் மகளிர் ஆபத்தில்லாமல் நடமாடினார்கள். நகரின் மக்களுக்கு பல வசதிகள் செய்து தந்தவன். தன் நகருக்கு பொன்னால் அரண் அமைத்தவன். அரசியல் நுணுக்கம் தெரிந்தவன்.

அவன் அரண்மனையில் எத்தனையோ காதல் மகளிர், அவனுக்காக காத்துக் கிடக்கையில், மாற்றான் மனைவி மேல் கொண்ட மையல் அவனை அழித்து விட்டதே.

அவனின் அத்தனை நல்ல இயல்புகளையும், சீதை என்ற ஒரு நெருப்பு புறந்தள்ளி இன்று அவனை விண்ணுலகம் அனுப்பி விட்டது. உலகின் இயல்பை யாரால் அனுமானிக்க முடியும்?

சீதையை அசோகவனத்தில் ராவணன் சிறை வைத்திருக்கிறான் என்ற போதே, மண்டோதரியின் உள்ளுணர்வுக்கு தெரிந்து விட்டது. ராவணனைத் தேடி காலன் வந்து விட்டான் என்று. ஒரு துரும்பாக அவனை எண்ணி சீதை பேசியபோது, கற்புடைய மகளீராக அவள் உள்ளம் சீதையைக் கண்டு வியந்தது.

மண்டோதரி, சீதையை தெய்வப் பெண்ணாக நினைத்தாள். ஆனால் கணவனை எதிர்த்து அவளால் பேச முடியவில்லை. ராவணன் மேல் அளவற்ற பிரியம் வைத்திருந்த அவளால், அவன் மனம் நோகப் பேச முடியாமல் போனது.

வாழ்வின் மிக கஷ்டமான விஷயம் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது. ஆனால் சுலபமான விஷயம் ஒவ்வொருவருடனும் மகிழ்ச்சியாக இருப்பது. ராவணனுக்குப் பல மனைவிகள். ஆனால் அவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றாலும், தன்னுடன் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை அவன் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினாள் மண்டோதரி.

எனவேதான் ராவணனுக்கு அறிவுரைகள் கூறி அவன் மனதை காயப்படுத்த விரும்பவில்லை அவள். தன் கணவன் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும் என்று நம்பியவளுக்கு முதல் அடி சீதை. மாற்றான் மனைவி மேல் ஆசைப்பட்டு அவளைக் கடத்தி வந்து சிறை வைத்ததன் மூலம், தன் தலைக்கு தானே கொள்ளி வைத்துக்கொண்டான் என்று புரிந்து கொண்டாள்.

சரியான தீர்மானங்கள் தன்னம்பிக்கையை அதி கரிக்கும். மோசமான தீர்மானங்கள் அனுபவத்தை கொடுக்கும். ஆனால் ராவணனுக்கு இது எதுவும் இல்லை. “நான்” என்ற ஆணவமே அவனைச் செலுத்தியது. யாருடைய அறிவுரையும் அவன் விரும்ப மாட்டான் என்று தெரியும்.

கலாமண்டபத்தில் நாட்டிய நிகழ்ச்சிகளை ரசிக்கும் போது, ஒரு அம்பு பறந்து வந்து ராவணனின் தலை மகுடம், மண்டோதரியின் காது குண்டலம், கழுத்து முத்துமாலையை அறுத்து எறிந்தது. விபீஷணனுக்கு தன் வில் ஆற்றலை நிரூபிக்க ராமன் விட்ட அம்பு அது.

ராவணன் செய்வது அறியாது கலங்கி அமர்ந்தான். யார், யார் என்று சபா மண்டபம் பதறித் தேடியது. ஒற்றர்கள், ராமன் கடலில் பாலம் அமைத்து இலங்கைக்குள் நுழைந்து விட்டான் என்ற செய்தியைச் சொன்னதும் “என்னது, கடலில் பாலம் கட்டி வந்து விட்டானா ராமன்?” என்று திக் பிரமை பிடித்து அமர்ந்து விட்டான்.

ஒவ்வொரு நாளும் போர் முடிந்து இறந்து போனவர்களைப் பற்றிய தகவல் வரும்போதெல்லாம், உள்ளம் நடுங்கும் அவளுக்கு. வந்திருப்பது சாதாரண மானிடன் இல்லை. பரம்பொருளே மானிட உருவம் எடுத்து வந்திருக்கிறது என்று திடமாக நம்பினாள். எவராலும் வெல்ல முடியாத இந்திரஜித் வதம் அதை நிரூபித்தது.

போர்க்களத்தில் அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற ராவணனை “இன்று போய் நாளை வா” என்று ராமன் சொன்னபோதே, அவன் உயிர் இற்று விட்டது. நான் என்ற ஆணவம், இறுமாப்பு, தன் பராக்கிரமம் பற்றிய கர்வம் எல்லாம் இழந்து வெறும் கூடாக வந்தவனை நோக்கி கேட்டாள்.

“இப்போதாவது சீதையை அனுப்பி விடலாமே?” “அனுப்பினாலும் நடந்த எது மாறப் போகிறது பெண்ணே. சீதையை அனுப்புவதை விட கடைசி வரை போரிட்டு ராமன் கையால் மடிவதை நான் பெருமையாக நினைக்கிறேன்.” - கம்பீரத்துடன் கூறினான்.

“இறுதி வரை உன் பிடிவாதத்தை விடாமல் போய்விட்டாயே எம்தலைவா. நான் இனி எப்படி வாழ்வேன்” - நெஞ்சம் உருக அவனின் உடலை தன் கரங்களால் தடவிக் கொடுத்த மண்டோதரி, அவன்மேல் விழுந்து அப்படியே தன் உயிரை விட்டாள்.

கணவனை நேசித்து, அவனின் தவறுகளுக்காக மனம் வருந்தினாலும், அவன் போனபிறகு உயிர்வாழ விரும்பாத மண்டோதரி பஞ்சகன்னியரில் ஒருத்தியாக வணங்கப்படுகிறாள்.


Next Story