புராண கதாபாத்திரங்கள்


புராண கதாபாத்திரங்கள்
x
தினத்தந்தி 23 April 2019 10:59 AM GMT (Updated: 23 April 2019 10:59 AM GMT)

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களும், சில அற்புதப் படைப்புகளும்

ராஜசூய யாகம்

மாபெரும் மன்னர்களால் நடத்தப்படும் ஒரு வகையான வேள்விக்கு ‘ராஜசூய யாகம்’ அல்லது ‘ராஜசூய வேள்வி’ என்று பெயர். தான் ஒரு மாபெரும் மன்னன் என்று, மற்ற மன்னர்களுக்கு தெரிவிப்பதற்காகவும், புதியதாக நாட்டிற்கு பதவி ஏற்றுக்கொள்ளும் போதும், போரில் வெற்றி பெற்றபின் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த வேள்வியை அரசர்கள் செய்திருக்கிறார்கள். குருசேத்திரப் போரில் வெற்றி பெற்ற பின் பாண்டவர்களால் ராஜசூய யாகம் நடத்தப்பட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



சப்த ரிஷிகள்

வேதங்களையும், சாஸ்திரங்களையும் நன்கு அறிந்து வைத்திருப்பவர்களே சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ‘மன்வந்திரத்திற்கும்’ சப்த ரிஷிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். தற்போது நடைபெறும் வைவஸ்தவ மன்வந்திரத்தின்படி, அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், காசியபர், ஜமதக்னி, பரத்வாஜர், கவுதமர் ஆகிய 7 பேரும் சப்த ரிஷிகளாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பிரம்மதேவரின் பிள்ளைகள் என்றும், பிறப்பு இறப்புகளைக் கடந்தவர்கள் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன.



சத்யபாமா

கிருஷ்ணரின் மனைவிகளுள் ஒருவர் சத்யபாமா. ஒருமுறை நாரதர், தேவலோகத்தில் இருந்து தான் கொண்டு வந்திருந்த கற்பக விருட்சத்தின் மலர்களை கிருஷ்ணரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட கிருஷ்ணர், அந்த மலர்களை சத்யபாமாவைத் தவிர தன்னுடைய மற்ற மனைவியர்களுக்கு எல்லாம் கொடுத்தார். இதனால் சத்யபாமா வருத்தம் கொண்டாள். தன் தவறை உணர்ந்த கிருஷ்ணர், உடனடியாக சத்யபாமாவை அழைத்துக் கொண்டு தேவலோகத்திற்குச் சென்றார். அங்கு தேவேந்திரனைச் சந்தித்து, கற்பக விருட்ச மலர்களைத் தரும்படி கேட்டார். ஆனால் மலர்களைத் தருவதற்கு இந்திரன் மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கிருஷ்ணரின் வாகனமான கருடன், கற்பக விருட்சத்தை வேருடன் பிடுங்கி எறியத் தயாரானது. இந்திரனும் இடியை உருவாக்கி அதனுடன் சண்டையிட்டான். அந்த சண்டையில் இந்திரன் தோற்கடிக்கப்பட்டான். கற்பக விருட்சம் துவாரகைக்கு கொண்டு வரப்பட்டு, சத்யபாமாவின் அரண்மனைக்கு முன்பாக இருந்த நந்தவனத்தில் நட்டுவைக்கப்பட்டது.



சாளக்கிராமம்

விஷ்ணுவின் அடையாளமாக கருதப்படுவது சாளக்கிராமம். இது விஷ்ணுவின் சிலைகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒருவகையான கல். 19 வகையான சாளக்கிராமங்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்தால் சிறப்பாகும்.


Next Story