துன்பங்களை தீர்க்கும் பிரார்த்தனை...


துன்பங்களை தீர்க்கும் பிரார்த்தனை...
x
தினத்தந்தி 26 April 2019 7:58 AM GMT (Updated: 26 April 2019 7:58 AM GMT)

மனிதன் தன்னைத்தானே நொந்து கொண்டு இறைவனை நிந்திக்கத் தலைப்படுகிறான்.

எந்த ஒரு மனிதனை கேட்டாலும் ‘முழுமையான நிம்மதியோடு நான் வாழ்கிறேன்’ என்று சொல்வது மிக அரிதிலும் அரிது. நல்ல வேலை கிடைக்கவில்லை, எதிர்பார்த்த வருமானம் இல்லை, வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரவில்லை, நோயின் தாக்கம் தள்ளாட வைக்கிறது, குடும்ப சூழ்நிலை சரியில்லை... என்று எத்தனையோ காரணங்களைச் சொல்வார்கள். அதேநேரத்தில், எத்தனையோ துன்பங் களுக்கு மத்தியில் அல்லாஹ் அருளிய மற்ற அருட்கொடைகளை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்தி திருப்திப்படுபவர்கள் மிகச்சிலரே.

வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் வரும்போது அதை பொறுமையாக ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து மீளும் வழியை இறைவனிடம் தேடவேண்டும். மாறாக மனிதன் தன்னைத்தானே நொந்து கொண்டு இறைவனை நிந்திக்கத் தலைப்படுகிறான். எத்தனை சோதனைகள் வந்தாலும் இறைவன் வகுத்த வழியில் இருந்து மனிதன் விலகக்கூடாது என்பதற்காகவே இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் களுக்கும் சோதனைகள் ஏற்பட்டது. அதுபோன்ற சோதனையான, வேதனையான நேரங்களில் அவர்கள் தங்களின் உறுதியான இறையச்சத்தின் மூலம், பிரார்த்தனையின் மூலம் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் என்பதையும் நாம் திருக்குர்ஆன் மூலம் அறியலாம்.

இப்ராகிம் நபிகள், ‘அல்லாஹ்தான் உண்மை இறைவன்’ என்பதை அறிந்து கொண்ட பிறகு தன்னைச்சுற்றி வாழ்ந்தவர்களிடம் ‘அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்ற பெரிய பாவத்தை செய்யாதீர்கள், சிலை வணக்கத்தை கை விடுங்கள்’ என்று போதனை செய்தார். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை, மாறாக இப்ராகிம் நபிகளை நெருப்புக்குண்டத்தில் தூக்கி எறிந்தார்கள்.

இப்ராகிம் நபி சிறிதும் கவலைப்படவில்லை. இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்தார்கள். இறைவன் அருளால் எரிக்கும் தன்மையை விட்டு குளிர்ந்த பூஞ்சோலையாக நெருப்பு மாறியது. இது குறித்து திருக்குர்ஆன் (21: 69,70) இவ்வாறு குறிப்பிடுகிறது:

“அவர்கள் இப்ராகிமை நெருப்பு கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி, ‘நெருப்பே நீ இப்ராகிமிற்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு’ என்று நாம் கூறினோம். அவர்கள் இப்ராகிமிற்கு தீங்கிழைக்க கருதினார்கள். எனினும் நாம் அவர்களையே நஷ்டமடையச் செய்து விட்டோம்”. அயூப் நபியின் வாழ்க்கையும் சோதனை நிறைந்ததாகவே இருந்தது. கொடூர நோய் தாக்கி உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இருப்பினும் அவர் இறைப்பணியை மறக்கவில்லை.

“இறைவா, என் உடம்பெல்லாம் புழுக்கள் அரித்தாலும் என் நாவை மட்டும் காப்பாற்றி தந்துவிடு. நீ எனக்கு தந்த மற்ற அருட்கொடைகளுக்காக உன்னை புகழ்ந்து துதி செய்ய எனக்கு அருள் தா” என்று பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திருக்குர்ஆன் (21:84) இவ்வாறு குறிப்பிடுகிறது:

“நாம் அயூப் நபியின் பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்தோம். நம் அருளால் மேலும் அதைப்போன்ற தொகையினரையும் அவருக்கு குடும்பமாக கொடுத்தோம். இது எனக்கு பயந்து என்னை வணங்குபவர் களுக்கும் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும் நல்லுணர்ச்சி ஊட்டக் கூடியதாக இருக்கிறது”.

யூனுஸ் நபிகளுக்கு ஏற்பட்ட சோதனைப் பற்றியும் அல்லாஹ் அருள்மறையிலே விவரிக்கின்றான். தனது ஊரார்கள் தன்னுடைய போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கோபமுற்று யூனுஸ் நபிகள் அந்த ஊரை விட்டு செல்வதற்காக கடற்கரைக்கு வந்தார்கள். அங்கு தயாராக நின்றிருந்த கப்பலில் ஏறி பயணம் செய்தார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் தன்னிச்சையாக அந்த ஊரை விட்டுச்செல்ல முயன்ற யூனுஸ் நபியின் செய்கை அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லை. எனவே, அந்த கப்பலிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டு திமிங்கலம் போன்ற மீன் விழுங்கும்படி செய்தான் அல்லாஹ். அது மட்டுமல்ல திமிங்கலத்திற்கு இரையாகாமல் அதன் வயிற்றிலேயே உயிர் வாழச் செய்தான்.

யூனுஸ் நபிகள் மீன் வயிற்றிலிருந்தபடியே இறைவனை பிரார்த்தனை செய்தவர்களாக இருந்தார்கள். இதை இறைவன் ஏற்றுக்கொண்டு மீண்டும் அவரை மீன் வயிற்றில் இருந்து உயிருடன் தரைக்கு அனுப்பி வைத்தான். இதுகுறித்து திருக்குர்ஆன் (21:87) இவ்வாறு குறிப்பிடுகிறது:

“யூனுஸ் நபியையும் நாம் தூதராக ஆக்கினோம். அவர் கோபமாக சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். ஆதலால் அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின் இருள்களிலிருந்த அவர், நம்மை நோக்கி ‘உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, நீ பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். என்னை மன்னித்து அருள்புரிவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்”.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கைச் சரிதத்தை திருப்பிப்பார்த்தால் அங்கு வறுமை, கஷ்டத்தைத் தவிர வேறு எதையும் நம்மால் கண்டுகொள்ள முடியாது. சிறு வயதிலேயே அனாதையாகி பல நாட்கள் பட்டினி கிடக்க கூடிய அளவிற்கு வறுமையை அனுபவித்தார்கள்.

அவர்களின் முன் பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டிருந்தாலும், இரவு முழுவதும் கால் வீங்கும் அளவிற்கு நின்று இறைவனை வணங்கினார்கள். மனித இனம் மேம்பட இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களே இத்தனை சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இறையச்சத்தில் மிக பலவீனமானவர்களான நாம் எம்மாத்திரம். ஒன்றை மட்டும் நினைவில்கொள்ள வேண்டும். துஆ என்ற பிரார்த்தனை மட்டுமே நம் விதியைக் கூட மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தது.

மனிதன் தன்னிடம் பிரார்த்தனை செய்தால் அதை ஏற்று அவன் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித் திருக்கின்றான். சோதனைகள் வந்த போது மனம் தளர்ந்து விடாமல் பொறுமையைக் கொண்டும், மன உறுதியைக் கொண்டும், பிரார்த் தனையைக் கொண்டும் அதை எதிர் கொள்ளவேண்டும்.

தஹ்ஜ்ஜத், பஜ்ர் போன்ற நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தொழுகையின் போது, அல்லாஹ் கீழ்வானம் வரை வந்து, ‘என்னிடம் யாராவது பிரார்த்திப்பவர்கள் இருக்கிறார்களா? அதனை நான் தர காத்திருக்கிறேன். இந்த நேரங்களில் எனக்கும் என் அடியானுக்கும் இடையே எந்த திரையும் இருக்காது’ என்று கூறுகிறான்.

இந்த நல்ல நேரங்களை பயன்படுத்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அல்லல்கள் அனைத்தும் நீங்கி, அக மகிழ்ந்து அகிலத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.

- மு.முகமது யூசுப், உடன்குடி.

Next Story