நம்பியவர்களை காத்தருளும் நம்பு நாயகி


நம்பியவர்களை காத்தருளும் நம்பு நாயகி
x
தினத்தந்தி 30 April 2019 4:54 AM GMT (Updated: 30 April 2019 4:54 AM GMT)

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவில் புனித தலங்களில் ஒன்றாக திகழ்கிறது

ராமபிரான் வழிபட்ட தலம் என்பதால் இந்தச் சிறப்பு. இதே ராமேஸ்வரத்தில் மற்றொரு ஆலயமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அது ராமேஸ்வரம் நம்பு நாயகி திருக்கோவில். இவள் ராமநாத சுவாமி ஆலயத்தில் பரம்பரை அர்ச்சகர்களாக இருக்கும் மராட்டிய அந்தணர் களுக்கு குலதெய்வமாக விளங்குபவள். அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.

தலவரலாறு

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் தீவில் உள்ள இந்தப் பகுதி, தாழை மரங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. ஒரு சமயம், விறகு வெட்டுபவர் இங்குள்ள தாழை மரங்களை வெட்டும் போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அவர் பயந்து போய் ஊர்மக்களை அழைத்து வந்தார்.

அப்போது ஒருவருக்கு அருள் வந்தது. அவர் “இந்தப் பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியில் எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள்” என்றார்.

அதன்படியே அப்பகுதி மக்கள், அன்னையைப் பூமியில் இருந்து தோண்டி எடுத்தனர். ரத்தம் பீறிட்ட இடத்தில் விரலிமஞ்சளை வைத்து பூசினர். ரத்தம் நின்றது. இதன்பின் அன்னைக்குச் சிறுகூரையில் கோவில் அமைத்து வழிபாடு செய்தனர். அது முதல் அப்பகுதி மக்கள் எவ்வித குறையுமின்றி வாழ்ந்து வந்தனர்.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய ஆலயம், சுற்றிலும் மணல் திட்டுகள், மரங்கள் என இயற்கை எழிலாக அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்கே விநாயகர், நாக நாதர் மற்றும் பனைமரத்து காளியம்மன் பீடம், சங்கிலிக் கருப்பன் பீடம், ரெட்டைத்தாழை முனீஸ்வரர் பீடம், தலமரமான வேப்பமரம் அமைந்துள்ளன. வடக்கே தலத் தீர்த்தம், கருப்பண்ணசுவாமி, ஐயனார், ராக்காயியம்மன், பேச்சியம்மன், கருப்பாயியம்மன், இருளாயியம்மன், ஆலமரத்தின் கீழ் தர்ம முனீஸ்வரர் அருள்புரிகிறார்கள். தெற்கே இருளப்ப சுவாமி பீடம், மாடசுவாமி பீடம் ஆகியன அமைந்துள்ளன.

ஆலயத்திற்குள் நுழைந்ததும், முன்மண்டபம் அதன் உள்ளே கருவறை முன்மண்டபம், விநாயகர் மற்றும் செண்பகப் பெருமாள் சன்னிதிகளும், கருவறைக் காவலர்களாக ஆண் பூதமும் மற்றும் பெண் பூதமும் காவல்புரிகின்றன.

கருவறைக்குள் இரண்டு அம்மன்கள் காட்சி தருகின்றனர். பழமையான தாழைவன ஈஸ்வரியும், நடுநாயகமாகச் சுதைவடிவில் அலங்கார அம்மனும் இருக்கின்றனர். இதன் அடியில், பழைய சுதையம்மன் மறைந்துள்ளது.

இத்தல அம்மன், ‘தாழைவன ஈஸ்வரி’ என்று அழைக்கப்பட்டாலும், ‘நம்பு நாயகி’ என்றே அனைவராலும் போற்றப்படுகின்றாள். தன்னை நாடி வருவோருக்கும் குழந்தைப்பேறு வழங்குவதில் கண்கண்ட தெய்வமாக இவள் விளங்குகின்றாள்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், தஞ்சையை ஆண்ட மன்னனின் மகனுக்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றி வாட்டியது. மன்னன் தஞ்சை பிரகதீஸ்வரரிடம் மனமுருகி வேண்டினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “ராமேஸ்வரம் தீவில் உள்ள தட்சிண காளியிடம் சென்று வந்தால் குணம் பெறலாம்” என்றது.

அதன்படி இங்கு வந்து, அம்மன் முன்பு மகனைக் கிடத்தி, மனமுருகி வேண்டி நின்றான் மன்னன். கருணை தெய்வமான தட்சிணகாளி அங்கு தோன்றினாள். தன் சூலாயுதத்தை பூமியில் வீச அங்கு ஒரு தடாகம் தோன்றியது. அதில் குளித்த மன்னனின் மகன் நலம்பெற்றான்.

இக்கோவிலை ராமநாதபுரம் வெள்ளாளர் மரபினர், ஏழாவது தலைமுறையாகப் பூஜை செய்து வருகின்றனர். கி.பி. 1830-ல் இந்தக் கோவிலின் நிர்வாகத்தை ராமநாதபுரம் சமஸ்தானத்திடம் ஒப்ப டைத்து விட்டு, பூஜைகளை மட்டும் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் தற்போது இந்து சமய அற நிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

அமைவிடம்

ராமேஸ்வரம் தீவில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில், புதுரோடு பகுதி யில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.


Next Story