பைபிள் கூறும் வரலாறு


பைபிள் கூறும் வரலாறு
x
தினத்தந்தி 30 April 2019 5:05 AM GMT (Updated: 30 April 2019 5:05 AM GMT)

விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு

திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு.

இது கற்பனைக்கதையல்ல. காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகிறார். எசேக்கியேல் இறைவாக்கினர் தனது நூலில் மூன்று நீதிமான் களைப் பற்றி குறிப்பிடும்போது நோவா, தானியேல் மற்றும் யோபு என குறிப்பிடு கிறார். புதிய ஏற்பாட்டிலும் யோபுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கற்பனை என சொல்பவர்கள் மனதில் நினைக்கும் காரணம் யோபுவின் வாழ்க்கையில் நடக்கின்ற அழிவுகள். தொடர்ச்சியாக அவரது கால்நடைகள், சொத்துகள், பிள்ளைகள் எல்லாரும் அழிகின்றனர்.

எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார் போல் ஒரே ஒரு நபர் மட்டும் தப்பிப் பிழைக்கிறார். அதே போல கதாபாத்திரங்கள் எல்லாமே கவிதை நடையிலேயே பேசுகின்றன.

இரண்டையும் கலந்து பார்த்தால் யோபு என்பவர் நிஜ மனிதர். ரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர். அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒருவர் கற்பனை கலந்து கவிதை நூலாக வடித்திருக்கிறார் என ஒரு முடிவுக்கு வரலாம்.

எபிரேயக் கவிதையான இந்த நூலில் கவித்துவம், நாடகத் தன்மை, வழக்காடுதல் என பல தன்மைகள் மிக அழகாக கோர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலின் அழகை மார்ட்டின் லூதர் உட்பட பல்வேறு வரலாற்றுத் தலைவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.

இந்த நூல் கவித்துவ அழகு மட்டுமல்லாமல் பல்வேறு தத்துவச் சிந்தனைகளையும் விதைக்கிறது. நாம் ஏன் இந்த பூமியில் பிறந்திருக்கிறோம்? ஏன் நமக்கு துன்பம் வருகிறது? துன்பத்தை அனுமதிப்பது யார்? வாழ்க்கை என்றால் என்ன? நமது வாழ்க்கையில் சாத்தானின் பங்கும், கடவுளின் பங்கும் என்ன? நல்லவர்கள் ஏன் துன்பத்தைச் சந்திக்கின்றனர்? போன்ற பல கேள்விகளை எழுப்பி விடை காண முயல்கிறது இந்த நூல்.

கடவுள் இருக்கிறார், அவர் அன்பும் வலிமையும் உடையவர், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், தனது படைப்புகளோடு தொடர்பு கொண்டிருப்பவர் போன்ற பல சிந்தனைகளை நமக்கு இந்த நூல் தருகிறது. தொடக்கத்தில் உரைநடை, முடிவிலும் உரைநடை, இடையில் கவிதை என இந்த நூல் ஒரு அழகான கட்டமைப்பில் அமைந்துள்ளது.

இதை ‘ஞான இலக்கியம்’ என்றும் சொல்வார்கள். அறிவார்ந்த சிந்தனைகளும், உரையாடல்களும் இந்த நூலில் நிறைந்துள்ளன. அவை எல்லா நேரங்களிலும் சரியாய் இருக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யூதர்களின் காலத்தில் நன்மைக்கான பயனும், தீமைக்கான பயனும் இந்த காலத்திலேயே கிடைத்து விடும் என நம்பினார்கள். கிறிஸ்தவ விசுவாசத்தில் இவ்வுலக வாழ்க்கையின் பயனானது அடுத்த வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் என நம்பு கிறோம். யோபு நூல் யூத சிந்தனைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

‘யோபு நேர்மையாளர்’ என கடவுள் சொல்ல, அவருக்கு வசதிகள் இருப்பதால் தான் அவர் இப்படி இருக்கிறார் என சாத்தான் வாதிடுகிறான். கடவுள் யோபுவின் செல்வங்களை, குழந்தைகளை அழிக்க சாத்தானுக்கு அனுமதி கொடுக்கிறார். பின்னர் யோபுவின் உடலில் நோய்களைக் கொடுக்கிறார்.

கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தை யோபுவுக்குத் தெரியாது. அவர் விசுவாசத்தில் நிலைத்திருந்தாரா? மனைவியும், நண்பர்களும் அவரை அவமானப்படுத்துகின்றனர். குற்றவாளியாக்குகின்றனர். பாவி என்கின்றனர். எல்லாவற்றையும் தாண்டியும் யோபு நீதிமானாகவே இருக்கிறார்.

பிரமிப்பூட்டும் யோபுவின் விசுவாசம் கிறிஸ்தவர்களுக்கு மாபெரும் சவால். விண்ணில் நிகழ்கின்ற விஷயங்களுக்கு மண்ணில் பாதிப்பு இருக்கும் என்பதும், மண்ணில் நாம் வாழும் வாழ்க்கை இறைவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதும் இந்த நூல் சொல்லும் இரண்டு பார்வைகளாகும்.

இந்த நூல் சொல்லும் இரண்டு முக்கியமான பாடங்கள் வியப்பானவை. ஒன்று, சாத்தான் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும். கடவுளைப் போல அவனும் எல்லா இடங்களிலும் இருப்பான் எனும் பொதுவான நம்பிக்கை தவறானது. இரண்டு, கடவுளின் அனுமதியில்லாமல் அவருடைய மக்களை சாத்தான் தொட முடியாது எனும் உண்மை. இந்த இரண்டு புரிதல்களும் நமக்கு யோபு நூலின் வாயிலாக கிடைக்கிறது.

யோபுவின் நோய்க்குக் காரணம் அவனது பாவம் என அவனை குற்றம் சுமத்துகின்றனர் நண்பர்கள். யோபுவோ, தான் குற்றமற்றவன் என்கிறார். நோய்க்கும், பாவத்துக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதையும், எல்லா நோய்களும் பாவத்தின் விளைவல்ல என்பதும் இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ளும் ஒரு பாடமாகும்.

- சேவியர்


Next Story