இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை


இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை
x
தினத்தந்தி 30 April 2019 5:10 AM GMT (Updated: 30 April 2019 5:10 AM GMT)

இறைநம்பிக்கையின் ஒரு பகுதிதான் இறையச்சம்

மறைவானவற்றை நம்புவது இறைநம்பிக்கை என்றால், அவற்றை பின்பற்றி வாழ்வதுதான் இறையச்சம் ஆகும்.

இவ்வுலகம், மறுவுலகம் ஆகியவற்றின் ஈடேற்றம் தரும் வழியில் வீறுநடை போடும் பாதையில் நடப்பதே இறையச்சம். மேலும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் அழிவைத்தரும் பாதையில் விலகி இருப்பதே இறையச்சம், இறைபக்தி.

இறையச்சம் குடியிருக்கும் இடம் உள்ளம்

‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோக மிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று தடவை சைகை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

‘இறைவன் உங்களின் உடல்களையோ, தோற்றங்களையோ பார்ப்பது இல்லை. அவன் பார்ப்பதெல்லாம் உங்களின் உள்ளங்களைத்தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்).

‘இறைவன் உங்களின் தோற்றங் களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. எனினும் அவன் உங்களின் உள்ளங்களையும், செயல்பாடுகளையும் தான் பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) புகாரி, முஸ்லிம்)

பக்தி பரவசம் என்பது தோற்றத்தில் மட்டும் கிடையாது. ஒருவரின் தோற்றத்தைக் கண்டு அதை தீர்மானித்தால் நாம்தான் ஏமாளிகள்.

பெரிய தாடி, நீளமான உடை, தலையில் தொப்பி, தலையை சுற்றி தலைப்பாகை, கையில் (தஸ்பீஹ்) தியான மணி, பேச்சில் இறைவன், எந்த நேரமும் தொழுகை, இத்தகைய குறி யீடுகளை மட்டும் இறையச்சத்தின் அளவுகோலாக சுருக்கிவிட முடியாது.

இரவெல்லாம் தொழுவது, பகலெல்லாம் நோன்பு நோற்பது, திருமணம் புரிந்தவர் இல்லற வாழ்வைத் துறப்பது அல்லது திருமணமே வேண்டாம் என வீட்டை விட்டு நாட்டை சுற்றுவது மட்டுமே உண்மையான பக்தி அல்ல. இவை அனைத்தும் பக்தியின் பெயரால் நடக்கும் ஆர்வக்கோளாறுகள். இஸ்லாமிய விரோதமான செயல்பாடுகள்.

‘நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழு வினர் வந்து, நபியவர்களின் வணக்க வழி பாடுகள் குறித்து வினாத்தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபியுடைய வணக்க வழி பாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.

பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே?, நாம் எங்கே?’ என்று சொல்லிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் ‘இனிமேல் நான் இரவில் எப்போதும் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்’ என்றார். இன்னொருவர் ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்’ என்றார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன், ஒருபோதும் திரு மணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே. அறிந்து கொள்ளுங்கள்! உங்களை விட நான் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவன்; இறைவனுக்கு பயந்து நடப்பவன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழுகவும் செய்கிறேன்; உறங்கவும் செய் கிறேன். மேலும், நான் மண முடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுபவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

24 மணி நேரமும் தொழுகையில் ஈடுபடுவது மட்டுமல்ல இறையச்சம். அதையும் தாண்டி மக்களுடன் மக்களாக வாழும்போது யாருக்கும் எந்தத் தொந்தரவுகளையும் கொடுக்காமல், யாருடைய சொத்தின் மீதும் ஆசைப்படாமல் நன்மைகளும் புரிந்து, இறையச்சத்தின் காரணமாக பாவங்களை விட்டும் தவிர்ந்து வாழ்வதே இறையச்சம்.

‘நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் போது ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘இது ஸதகா (பொதுச் சொத்து) பொருளாக இல்லாமல் இருந்தால், அதை நான் சாப்பிட்டிருப்பேன்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

பொதுச்சொத்தை சாப்பிடுவதிலிருந்து நபியவர்களை தடுத்தது இறையச்சமே. பாவம் புரிவதிலிருந்து ஒருவனை தடுக்கும் கேடயமாக இறையச்சம் இருப்பது போன்று, நடந்துவிட்ட பாவத்தை எண்ணி, அதற்குரிய தண்டனை இந்த உலகிலேயே கிடைத்தால் போதும் என நினைத்து, பரிகாரம் தேடி அலைய வைப்பதும் இறையச்சமே.

நபித்தோழர் மாயிஸ் பின் மாலிக் (ரலி) பாவம் ெசய்ததும், குற்ற உணர்ச்சி அவரை உலுக்கியது. இறை தண்டனையை அஞ்சி நபியவர்களிடம் வந்து தான் தவறு புரிந்ததை சுயவாக்குமூலம் கூறினார். தனக்கு இவ்வுலகிலேயே மரண தண்டனை வேண்டுமென மனதார வேண்டினார்.

மூன்று தடவை அவரின் கூற்றை மறுத்த நபி (ஸல்) அவர்கள், நான்காவது தடவை அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனை வழங்கும்படி உத்தரவிட்டார்கள். செய்துவிட்ட குற்றத்திற்கு அவரை பரிகாரம் தேடவைத்தது இறையச்சமே.

திருக்குர்ஆனில் 258 இடங்களில் இறையச்சம் குறித்து பல்வேறு வாசக வடிவில் வருகிறது. அவற்றில் எழுபது இடங்களில் ‘நீங்கள் இறைவனை அஞ்சுங்கள்’ என இறைநம்பிக்கையாளர்களை நோக்கி நேரடி ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

இந்த ஆணைகளின் மூலம் வணக்க வழிபாடு, சமூக, பொருளாதார, தனிமனித வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, நீதி, நிர்வாகம், அரசியல், கொடுக்கல் வாங்கல் என மனித வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட, தொடர்பில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் இறையச்சம் இடம்பெற வேண்டும் என இறைவன் ஆணை பிறப்பிக்கிறான்.

மூன்று விஷயங்களில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும்.

1) இறைவனை மதிப்பதில் உண்மை வேண்டும், போலித்தனம் இருக்கக்கூடாது.

‘எந்த மனிதருக்கும் இறைவன் எதையும் அருளவில்லை என்று அவர்கள் கூறியதால் இறைவனை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை’. (திருக்குர்ஆன் 6:91)

2) இறைவனுக்காக அர்ப்பணிப்பதில் உண்மை இருக்க வேண்டும்.

‘இறைவனுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்’ (திருக்குர்ஆன் 22:78)

3) இறையச்சத்தில் உண்மை இருக்க வேண்டும்.

‘நம்பிக்கை கொண்டோரே! இறைவனை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்’ (திருக்குர்ஆன் 3:102)

“மக்களில் சங்கையானவர் யார்?” என நபியவர்களிடம் கேட்கப்பட்டது. “அவர்களில் இறைவனை மிகவும் அஞ்சுபவரே!” என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

‘உங்களில் இறைவனை அதிகம் அஞ்சுபவரே இறைவனிடம் அதிகம் சிறந்தவர்’. (திருக்குர்ஆன் 49:13)

“நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் ‘இறைவா! நான் உன்னிடம் நேர்வழி, இறையச்சம், பத்தினித்தனம், போதும் என்ற மனம் ஆகியவற்றை கேட்கிறேன்’ என இவ்வாறு கூறுவார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்)

வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவும், இறைவன் விரும்பும் செயல்களை செய்யவும், அவன் வெறுக்கும் செயல்களை விட்டு பாதுகாத்துக் கொள்ளவும், நல்லவனாக வாழவும் அவசியமான தேவை இறையச்சமே.

- மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.


Next Story