மூலிகை மருந்து பிரசாதம் தரும் ஆலயம்


மூலிகை மருந்து பிரசாதம் தரும் ஆலயம்
x
தினத்தந்தி 30 April 2019 5:17 AM GMT (Updated: 30 April 2019 5:17 AM GMT)

கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு

கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கான நினைவுத்திறனை அதிகரிக்கவும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிடவும் மரபு வழியிலான மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் சிறப்புமிக்க கோவிலாக கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், வடக்கு பரவூரில் (வடக்கன் பரவூர்) அமைந்திருக்கும் தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது.

தல வரலாறு

கொல்லூர் மூகாம்பிகை மீது பரவூர் தம்பிரான் என்பவர் அதிக பக்தி கொண்டிருந்தாா். இவர் அடிக்கடி கொல்லூர் சென்று மூகாம்பிகையை வழிபட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வயதான காலத்தில், அவருக்குக் கொல்லூர் சென்று வருவது மிகவும் கடினமாகிப் போனது.

அதனால் மனம் வருந்திய அவர், நாள்தோறும் தன்னுடைய மனக்கவலையை நீக்கியருளும்படி மூகாம்பிகையை வேண்டிக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய மூகாம்பிகை, “கொல்லூர் வந்து என்னை வழிபட முடியவில்லையே என்கிற கவலை இனி உனக்கு வேண்டாம். நீ இருக்கும் இடத்திற்கு அருகே எனக்கு ஒரு கோவிலைக் கட்டினால், நான் அங்கு வந்தருள்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பரவூர் தம்பிரான், பரவூரில் தாமரை மலர்கள் நிரம்பி இருக்கும் ஒரு குளத்தை உருவாக்கி, அதன் நடுவில் கருவறை அமைத்து, அதனுள் மூகாம்பிகை சிலையை நிறுவி இக்கோவிலைக் கட்டியதாகத் தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட இக்கோவிலில் தாமரை மலர்கள் நிரம்பிய குளத்தின் நடுவில் அமைந்திருக்கும் கருவறையில் மூகாம்பிகை அமர்ந்த நிலையில் இருக்கிறார். இங்கிருக்கும் மூகாம்பிகை தட்சிண மூகாம்பிகை என்று அழைக்கப் பெறுகிறார். இங்குள்ள கலைவாணிக்கு வீணாவாணி, வித்யாதாரிணி என்ற வேறு பெயர்களும் உண்டு. இக்கோவில் வளாகத்தில், கணபதி, சுப்பிர மணியர், விஷ்ணு, யட்சி, வீரபத்திரர், ஆஞ்சநேயர் போன்றவர்களுக்கான சிலைகளும் வழிபாட்டுக்காக நிறுவப் பெற்றுள்ளன.

இந்த ஆலயத்தில் நாள்தோறும் ஸ்ரீ வித்யா மந்திர புஷ்பாஞ்சலி, சரஸ்வதி பூஜை, திரிமதுரம், சுட்டுவிளக்கு, மூகாம்பிகை மருந்து எனும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. தை மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் தொடங்கி, உத்ரட் டாதி நட்சத்திரம் வரையிலான பத்து நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா சிறப்புக்குரியது. இவ்விழாவில், எட்டாவது நாளில் உத்சவபலி, ஒன்பதாவது நாளில் வலியவிளக்கு, பத்தாவது நாளில் மூகாம்பிகைக்கு ஆறாட்டு விழா போன்றவை நடைபெறுகின்றன. மேலும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவை தவிர, தேர்வு காலங்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

கல்வி தொடக்க வழிபாடு

தங்களுடைய பிள்ளைகளின் கல்வி சிறப்பாக அமைய விரும்பும் பெற்றோர், விஜயதசமி நாளில் இக்கோவிலுக்கு வந்து, தங்கள் பிள்ளைகளின் கல்வித் தொடக்கத்திற்கான (வித்யாரம்பம்) சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இவ்வழிபாட்டின் போது, பெற்றோர் இங்கிருக்கும் மூகாம்பிகையை வணங்கித் தங்கள் குழந்தையின் விரல் கொண்டு அரிசியில் எழுத வைக்கின்றனர். இதனை “எழுத்துநிரித்து” என்றும் கூறு கிறார்கள். இந்நாளில் இசை, நடனம், ஓவியம் போன்ற சில சிறப்புக் கலைப் பயிற்சிகளின் தொடக்கத்திற்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிற நாட்களில், பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப இக்கோவிலில் கல்வி தொடக்க வழிபாடு செய்யப்படுகிறது.

இக்கோவிலில் வழிபடும் மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிப்பதுடன், தேர்வில் அதிக மதிப்பெண்களும் கிடைக்கும் என்கிறார்கள். இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட சிறப்புக் கலைப் பயிற்சிகளில் தேர்ச்சியடைய விரும்புபவர்கள், இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்து பயனடைகின்றனர்.

நீங்காத நோயுடையவர்கள், செய்யும் செயல்களில் தடை காண்பவர்கள் இத்தலத்தில் தரப்படும் அர்ச்சனைப் பொருட்களைப் பெற்று, பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை அர்ச்சகரிடம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் பிரசாதத் தட்டை, கோவில் முன்பு அதற்கென வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் செலுத்த வேண்டும். இப்படிச் செய்பவர்களுக்குச் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரை யிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில், வடக்கன் பரவூர் (வடக்குப் பரவூர்) எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவி லுக்கு செல்ல எர்ணாகுளம், குருவாயூர் நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

- தேனி மு.சுப்பிரமணி


Next Story
  • chat