நற்பாக்கியங்கள் நிறைந்த இரவு


நற்பாக்கியங்கள் நிறைந்த இரவு
x
தினத்தந்தி 24 May 2019 8:13 AM GMT (Updated: 24 May 2019 8:13 AM GMT)

ஒருமுறை வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்பு தோன்றி, பனி இஸ்ராயீல் கூட்டத்தை சார்ந்த “ஷம்ஊன்” பற்றிய சில விபரங்களை கூறினார்கள்.

ஷம்ஊன் என்பவர் ஆயிரம் மாதங்கள் தொடர்ந்து இறை வணக்கத்தில் ஈடுபட்டவர். இவர் பகலில் நோன்பும், இரவில் இறை தியானத்திலும் இருந்தவர். இதை எடுத்துக்கூறி, ‘ஷம்ஊனுக்கு இறைவன் என்ன நன்மையை வழங்குவான் என்று நாயகமே உங்களுக்கு தெரியுமா?’ எனக்கேட்டார் ஜிப்ரீல் (அலை).

அதற்கு நபிகளார், ‘எனக்கு தெரியாதே, அல்லாஹ்வே அதனை அறிந்தவன்’ என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், ஜிப்ரீல் (அலை) அவர்கள் வாயிலாக ‘கத்ர்’ என்ற திருக்குர்ஆனின் 97-வது அத்தியாயத்தை நபிகளாருக்கு இறக்கி வைத்தான்.

நபிகளாருக்கும் அவர்களை பின்பற்றுகின்ற அவர்களது சமூகத்தவருக்கும் இறைவன் தந்த மாபெரும் சலுகை தான் இந்த லைலத்துல் கதர் இரவாகும். சோபனச் செய்தி கூறும் ‘கத்ர்’ என்ற அத்தியாயம் இவ்வாறு பேசுகிறது:

‘நிச்சயமாக (குர்ஆனாகிய) இவ் வேதத்தை மகிமை மிக்க (அந்த) இரவில் (தான்) நாம் இறக்கி வைத்தோம். (நபியே) அந்த மகிமை மிக்க இரவு என்ன என்பது உமக்குத் தெரியுமா?. (அந்த ஓர் இரவு) ஆயிரம் மாதங்கள் (இறைவணக்கத்தில் ஈடுபடுவதை) விட மேன்மையானதாகும்’.

‘(அந்த இரவில் தான்) மலக்குகள் (என்ற வானவர்களும்) பரிசுத்த ஆவியுமான (ஜிப்ரீலும்) தங்களுடைய ரப்பின் (இறைவனின்) கட்டளை கொண்டு (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் (பூமியில்) இறங்கிவருகின்றனர். (அந்த இரவானது) சாந்தி மயமானதாக இருக்கும், அ(ந்த அமைதிமிக்க சாந்தியான)து அதிகாலை உதயமாகும் வரை (நீடித்து) இருக்கும்’. (திருக்குர்ஆன் 97:1-5)

‘லைலத்துல் கத்ர்’ என்ற அந்த புனித இரவானது வருடத்தில் ஒரு முறை ரமலானில் கடைசி 10 இரவுகளில், அதாவது 21, 23, 25, 27, 29 ஆகிய ஒற்றைப்படை இரவுகளில் ஒரு இரவாக வருகிறது.

அந்த இரவு எப்போது வருகிறது என்பது குறித்து நபிகளாருக்கு எடுத்துக் காட்டப்பட்டது. அது குறித்து மக்களிடம் அறிவிப்பதற்காக அவர்கள் வந்தபோது இரு சகோதரர்கள் சண்டை சச்சரவில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களை சமாதானப்படுத்திய நபிகளார், ‘புனிதம் மிக்க அந்த இரவு எது என்பது என் மனதில் இப்போது இல்லை, நீங்கள் அதனை ரமலானின் கடைசி 10 இரவுகளில் ஒற்றைப்படை இரவில் தேடிக்கொள்ளுங்கள்’ என்றார்கள்.

எவர் ஒருவர் தூய எண்ணத்தோடு அந்த புனித இரவில் இறைவனை வணங்கி வழிபடுவாரேயானால் அவர் 83 வருடமும் 4 மாதங்கள் வணங்கியதற்க்கு சமமான நன்மையை அடையப் பெற்றவர் ஆவார்.

நபி (ஸல்) அவர்கள் இந்த புனித இரவின் மகிமை குறித்து இவ்வாறு கூறுகிறார்கள்: ‘யார், இந்த இரவில் நம்பிக்கையோடு நன்மையை எதிர்நோக்கி இறைவனை வணங்குகிறாரோ, அவருடைய முன்பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகிறது, இன்னும், இந்த இரவின் நன்மையை இழப்பவன் அனைத்து பலனையும் இழந்தவனாவான்’ என்றார்கள்.

அந்த மகத்துவம்மிக்க இரவை அடைந்தால் எவ்வாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, அண்ணலார் கற்றுக்கொடுத்த பிரார்த்தனை தான் இது:

‘இறைவா, நீ எமது பிழைகளை மன்னிப்பவன். இன்னும் நீ (தனது அடியாளர்கள்) மன்னிப்புக் கோருவதை விரும்பக் கூடியவன். எனவே எமது பிழைகளை எல்லாம் மன்னித்தருள்வாயாக’.

இறைவனின் மன்னிப்பின் மூலமே மனிதர்கள் சிறப்படைய முடியும். இறைவன் மனிதர்களை மன்னிப்பதை போன்றே மனிதர்களும் சகமனிதர்களை மன்னிக்க பழக வேண்டும். மன்னிப்பு என்பது இறைவனின் தூய குணமாகும். பிறரை மன்னிப்பதின் வாயிலாகவே மனித மனம் தூய்மை அடைகிறது. மன்னிக்கும் மனோபாவத்தால் தான் பழிதீர்க்கும் எண்ணத்தை நீக்க முடியும். அத்தகைய மனப்பக்குவத்தை பெற்றவர்களால் தான் உலகில் என்றும் இனிமையாய் வாழ முடியும். இதுவே இந்த பிரார்த்தனை நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.

இறைவனால் நாம் மன்னிக்கப்பட வேண்டும் என்று நாமெல்லாம் விரும்புவதை போன்று மற்ற மனிதர்களின் குற்றம் குறைகளையும், தவறுகளையும் நாம் தாராளமாக மன்னித்துப் பழக வேண்டும். அப்போது தான் மனமானது சாந்தியை பெற முடியும் எனவும் நபிகளார் அறிவுறுத்தி உள்ளார்கள்.

நபிகளார் மன்னிப்பின் மாண்பினை சொன்னது மட்டுமல்ல அவர்கள் தங்களது வாழ்நாள் எல்லாம் அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.

நபிகளாரின் வழி நின்று நாமும் பிறரை மன்னித்து வாழப்பழகுவதோடு, மகிமை பொருந்திய லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதத்தை விட சிறந்த பாக்கியமுள்ள இந்த இரவுகளை நாம் வாழும் காலமெல்லாம் அடையப்பெறுவோமாக. மேலும், பிறரை மன்னிப்பதின் வாயிலாக இறை மன்னிப்பை பெறும் தகுதிமிக்கவர்களாக நம்மை நாமே ஆக்கிக் கொள்வோமாக, ஆமீன்.

மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.


Next Story