சப்தஸ்வர அன்னை


சப்தஸ்வர அன்னை
x
தினத்தந்தி 28 May 2019 6:11 AM GMT (Updated: 28 May 2019 6:11 AM GMT)

கோயம்புத்தூரில் இருந்து பூண்டி செல்லும் சாலையில் செம்மேடு அருகே அமைந்துள்ளது கோட்டைக்காடு என்ற ஊர்.

இங்கு கோவில் கொண்டுள்ள அன்னை முத்துவாளியின் தலை, கைகள், வயிறு என ஒவ்வொரு பகுதியில் தட்டும் போதும் ஒவ்வொரு ஸ்வரமாக ஒலி ஏற்படுகிறது. ஏழு ஸ்வரங்கள் தன்னிடம் அடக்கம் என்பதை இந்த அம்மன் சிலை காட்டுகிறது.

இரட்டை நடராஜர்

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருக்கிறது, கடம்பவனநாதர் ஆலயம். இங்கு இரண்டு நடராஜப் பெருமானை தரிசனம் செய்யலாம். ஒரே சன்னிதியில் இருவரும் அருகருகே இரண்டு நடராஜர்களை தரிசனம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இதில் ஒரு நடராஜருக்கு ஒருவருக்கு உத்ராயணத்திலும், மற்றவருக்கு தட்சிணாயத்திலும் பூஜைகள் நடக்கின்றன.

கை கட்டிய எமன்

கும்பகோணம் அருகிலுள்ளது தி.காவல் என்னும் கிராமம். இங்குள்ள சிவன் கோவிலில் இரு கைகளும் கட்டிப்போடப்பட்ட நிலையில் எமதர்மனும், அருகில் கையில் எழுத்தாணியுடன் சித்ரகுப்தனும் காட்சி தருகின்றனர்.

தூணில் சரபேஸ்வரர்

மாடம்பாக்கம் தேனு புரீஸ்வரர் ஆலயத்தில் தூணில் சரபேஸ்வரர் வீற்றிருக்கிறார். இவருடன் சூலினி மற்றும் பிரத்யங்கரா தேவியரும் காட்சியளிக்கிறார்கள். ராகுவின் அதிதேவதை சூலினி துர்க்கை. பிரத்யங்கரா தேவி நாகத்தை மோதிரமாக அணிந்தவர். சரபமூர்த்தியின் வால்தான் ராகு பகவான். எனவே இவரை ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளையில் வணங்க நாகதோஷம் நீங்கும்.

யோக கேது

சீர்காழி வட்டம் செம்மங்குடி கிராமத்தில் கேது மூர்த்தி உடலோடு ஐந்து தலை நாகம் குடை பிடிக்க யோக கேதுவாக அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார். இவரை செவ்வல்லி மலர் கொண்டு பூஜித்தால் கிரகதோஷம், வியாதிகள் நீங்கி நலம் பெறலாம்.

தொகுப்பு:- நெ.ராமன், சென்னை.

Next Story