பாவங்களை அகற்றும் பன்னிரு ரிஷப சேவை


பாவங்களை அகற்றும் பன்னிரு ரிஷப சேவை
x

3-6-2019 அன்று 12 ரிஷப சேவை. சித்திமதி - மதங்க முனி தம்பதியரின், கோடிக்கணக்கான மதங்க கன்னிகைகளில் மூத்தவளும் பேரழகியுமானவள், அன்னை மாதங்கி.

அன்னை மாதங்கியின் பச்சைநிறம், இந்த மண்ணையே மகிழ்வடையச் செய்ததாக அபிராமிபட்டர் போற்றுகிறார். இந்த மாதங்கியை, ‘சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி’ என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீ கரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் ஆகியவற்றை அள்ளித்தருபவள் ராஜமாதங்கி.

இந்த அன்னை அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும். ஒரு பிரளய காலத்தில் பிரம்ம தேவன், சிவபெருமானை நோக்கி மதங்கம் என்னும் யானை வடிவத்தில் தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது பிரம்மனின் மனதில் இருந்து அவரது புத்திரனாய் மதங்க முனிவர் தோன்றினார்.

அவரும் தவம் செய்ய விருப்பம் கொண்டு இடம் தேடினார். அது பிரளய காலம் அல்லவா? எங்கும் ஒரே வெள்ளம். தவமியற்ற இடம் கிடைக்கவில்லை. அப்போது நாரத முனிவர் தோன்றி, “மதங்கா! பூவுலகில் அனைத்து உயிர்களும் ஒடுக்கம் அடையும் திருவெண்காடு, பிரளயத்திலும் அழியாமல் உள்ளது. அங்கு சென்று தவமியற்று” என்று அருளினார். ஊழி காலத்திலும் அழியாத அத்தலத்தைக் கண்ட மதங்கர் அங்கேயே தவமியற்றத் தொடங்கினார்.

அப்போது மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி, மதங்க முனிவருக்கு ஆசி வழங்கினார். அதே போல் விநாயகரும் மதங்கருக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார். மோகினி வடிவ பெருமாள் ‘நாராயணி’ எனும் திருநாமத்திலும், விநாயகர் ‘மதங்க விநாயகர்’ என்ற பெயரிலும், திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்கின்றனர்.

தவமிருந்த மதங்க முனிவருக்கு அம்பிகையுடன் சிவபெருமான் திருக்காட்சி நல்கினார். அப்போது மதங்கர் அம்மையப்பனிடம், “அம்பிகையே எனக்கு மகவாய் வந்து பிறக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

உடனே பார்வதி தேவி “மதங்கரே! யான் அறிவு வடிவான சித்ரூபி. ஆதலால் உமக்கு மகளாக தோன்றுதல் இயலாது. எம் வடிவான மந்திரிணியான சியாமளாதேவியை உமக்கு மகளாக வந்து பிறக்கச் செய்கிறேன்” என அருளி மறைந்தாள். அதன்படி, ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை மதங்க தீர்த்தம் எனும் பொய்கையில் நீலோத்பல மலர் மேல் சியாமளாதேவி குழந்தையாக வந்து உதித்தாள். அப்போது பொய்கைக்கு நீராடவந்த மதங்கர் - சித்திமதி தம்பதியினர் அந்தக் குழந்தையை எடுத்து தங்கள் மகளாக வளர்த்து, பின்னாளில் சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தனர். பின்னர் ரிஷபத்தில் சக்தி மாதங்கி உடன் சிவபெருமான் எழுந்தருளி ரிஷபத்தில் திருக்கல்யாண சேவை நல்கி அருளினார்.

அந்த ரிஷப சேவை, இன்றுவரை திருநாங்கூர் ராஜமாதங்கி உடனுறை மதங்கீஸ்வரர் திருக் கோவிலில் ‘ரிஷப சேவை திருக்காட்சி' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. மதங்கர், அம்பிகை ராஜசியாமளாவை வளர்த்து வந்ததால், இத்தல இறைவி ‘ராஜமாதங்கி’ என்றும், மாதங்கியை சிவபெருமான் மணந்து ஆட்கொண்டதால் இறைவன் ‘மதங்கீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

மதங்கீஸ்வரர் ஆலயத்தில் ஈசனின் எதிரில் இரண்டு நந்திகள் உள்ளன. அதில் மதங்க நந்தி ஈசனை நோக்கியவாறும், சுவேத நந்தி மறுபக்கம் திரும்பியும் இருப்பதைக் காணலாம். மாதங்கி - மதங்கீஸ்வரர் திருக்கல்யாணத்தின்போது ஈசனின் கட்டளைக் கிணங்கி இங்குள்ள நந்தி, திருக்கயிலாயம் சென்று அன்னை மாதங்கி சார்பாக சீர் அளித்ததாம்.

பிரதோஷத்தின் போது இந்த இரண்டு நந்தி களுக்கும் தொடர்ந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், திருமணத் தடை உள்ளவர் களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இத்தல மாதங்கியை தேன் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், படிப்பில் குழந்தைகளின் மந்த நிலை நீங்கி, நுண்ணறிவைப் பெறுவார்கள் என்கிறார்கள். மேலும் கல்வி, ஞானம், இசையறிவு கூடிவர இத்தல ராஜமாதங்கி வழிபாடு பெரிதும் துணைசெய்யும்.

அதுமட்டுமல்ல சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் தோன்றி அருளிய திருத்தலம் திருநாங்கூர். தமது கட்டளையை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட கோபத்தால், சிவபெருமான் இங்கு உள்ள உபயகாவேரி என்னும் இடத்தில் ருத்திரதாண்டவம் ஆடினார். அப்போது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அந்தப் பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்கியது. இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு நேருமென்று அஞ்சிய தேவர்கள், மகா விஷ்ணுவிடம் தஞ்சம் புகுந்தனர்.

மகா விஷ்ணு, ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவனையும், 11 மகாவிஷ்ணுவாய் தோன்றி கட்டித் தழுவினார். இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான், தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டருளினார். அதுபோலவே மகாவிஷ்ணுவும் பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டார். மகாவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் அமைந்த இடங்கள்தான், திருநாங்கூரில் திவ்விய தேசங்களாக அமைந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில், திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் ‘11 கருடசேவை' திருவிழா சிறப்பாக நடக்கும். அதுபோல 11 சிவாலயங்களின் சார்பாக ‘பன்னிரு ரிஷபாரூட சேவை' திருவிழா சித்ரா பவுர்ணமி நாளில் அந்த காலத்தில் இங்கு நடந்து வந்துள்ளது. கால ஓட்டத்தில் இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி விழா, பல வருடங்கள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் தற்போது சிலவருடங்களாக தொடர்ந்து வைகாசி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நன்னாளில் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம் கிடைக்கும். ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோவில்களில் உள்ள ஈசன்களும், அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்வதைக் காண்பது, நம் பாவங்களை விலக்கி முக்தியைப் பெற வழி வகுக்கும் என்கிறார்கள்.

அமைவிடம்

சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் திருநாங்கூர் அமைந்துள்ளது.

பன்னிரு சிவதலங்கள்

திருநாங்கூரில் உள்ள பன்னிரு பீட சிவ திருத்தலங்களை இங்கே பார்க்கலாம்.

1. தத்புருஷ பீடம் - திருநாங்கூர் ராஜ மாதங்கி சமேத மதங்கீஸ்வர சுவாமி திருக்கோவில்

2. அகோரபீடம் - கீழைத் திருக்காட்டுப்பள்ளி அகிலாண்ட நாயகி சமேத ஆரண்யேஸ்வர சுவாமி ஆலயம்.

3. வாமதேவ பீடம் - கீழ்சட்டநாதபுரம் திருயோகீஸ்வரம் யோகாம்பாள் சமேத யோகநாத சுவாமி ஆலயம்.

4. சத்யோத்ஜாத பீடம் - காத்திருப்பு சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வர சுவாமி திருக்கோவில்

5. சோம பீடம் - திருநாங்கூர் அமிர்தபுரீஸ்வரர் திருக்கோவில்

6. சார்வ பீடம் - அல்லிவிளாகம் செம்பதனிருப்பு நாகநாத சுவாமி ஆலயம்.

7. மகாதேவ பீடம் - திருநாங்கூர் பக்தவத்சலாம்பிகை சமேத நம்புவார்க்கன்பர் சுவாமி திருக்கோவில்

8. பீமபீடம் - திருநாங்கூர் கயிலாசநாத சுவாமி திருக்கோவில்

9. பவபீடம் - திருநாங்கூர் சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்

10. பிராண பீடம் - அத்தீஸ்வரம் பெருந்தோட்டம் அதுல்ய குஜாம்பாள் சமேத ஐராவதேஸ்வர சுவாமி ஆலயம்.

11. ருத்ரபீடம் - அன்னப்பன் பேட்டை சுந்தராம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

12. பாசுபத பீடம் - மேல்நாங்கூர் நயனவரதேஸ்வர சுவாமி ஆலயம்

Next Story