தங்கத்தால் ஆன பாதாள சனீஸ்வரர்


தங்கத்தால் ஆன பாதாள சனீஸ்வரர்
x
தினத்தந்தி 4 Jun 2019 12:24 PM GMT (Updated: 2019-06-04T17:54:17+05:30)

பார்வதி - பரமேஸ்வரனின் திருக்கல்யாண வைபவம், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சமயம்.. அந்த தெய்வ திருமணத்தைக் காண எண்ணற்ற தேவர்களும், ரிஷிகளும், மகான்களும், முனிவர்களும் வரத் தொடங்கினர்.

 அகத்தியர், பரத்வாஜர், வசிஷ்டர், வால்மீகி போன்றோரும் அடங்குவர். தேவலோகத்தில் இருந்து அனைவரும் பூலோகம் நோக்கித் திரண்டதில், காஞ்சிபுரமே நிரம்பி வழிந்தது.

முனிவர்கள் பலரும் தங்களது நித்ய அனுஷ்டானங்களையும், பூஜைகளையும் செய்ய தகுந்த இடமின்றி திண்டாடினர். ஆகவே காஞ்சிபுரத்தில் இருந்து வெளிவந்து, காஞ்சியை சுற்றி உள்ள தீர்த்தப் பிரதேசங்களுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டனர். தற்போது பாலாறு என்றழைக்கப்படும் வேகவதி நதிக்கரையில், முனிவர்கள் தங்குவதற்கு குடில்கள் அமைத்து தங்களது அனுஷ்டானங்களைத் தொடர்ந்தனர் .

பரமேஸ்வரனின் திருமணம் சுபமாக நடந்தேறியது. அகமகிழ்ந்த ஈசன் உடனிருந்து வாழ்த்திய முனிவர்களைப் பார்த்து, “நீங்கள் வேண்டும் வரம் என்ன?” என்று கேட்க, அவர்களோ, “என்றென்றும் தாங்கள் எங்களை ஆசீர்வதித்து அருள வேண்டும்” என்றனர்.

அவர்களின் தன்னலமற்ற கோரிக்கையை ஏற்ற இறைவன் “வேகவதி நதிக் கரையில் தாங்கள் அனைவரும் என்னை எங்கெங்கு முறைப்படி பூஜித்தீர்களோ, அதே ஷேத்திரங்களில் தங்கள் பெயர் கொண்டே யாம் லிங்கமாக அருள்புரிவோம். பலரும் வழிபடும் வகையில் அங்கே ஆலயங்கள் அமையட்டும்” என்று ஆசீர் வதித்து மறைந்தார்.

ஈசன் அருளியபடி முனிவர்கள் ஸ்தாபித்த ஷேத்திரங்கள்தான் ‘ஷடாரண்ய ஷேத்திரங்கள்’ என்று அழைக்கப்பட்டு பலரால் வழிபடப்படுகிறது. பரத்வாஜர் வழிபட்ட ஈசன் ‘பரத்வாஜீஸ்வரர்’ என்றும், வசிஷ்டர் குடில் அமைத்து வழிபட்ட ஈசன் ‘வசிஷ்டேஸ்வரர்’ என்றும், வால்மீகி வழிபட்ட ஈசன் ‘வால்மீகிஸ்வரர்’ என்றும், கவுதமர் வழிபட்ட ஈசன் ‘கவுதமேஸ்வரர்’ என்றும், காசியபர் வழிபட்ட ஈசன் ‘காசியபேஸ்வரர்’ என்றும், அத்திரி முனிவரால் வழிபட்ட ஈசன் ‘திருமந்தீஸ்வரர்’ என்றும் வழங்கப்பட்டன.

சிறப்புமிக்க அந்த திருமந்தீஸ்வரர் ஆலயம் அமைந்த இடம்தான் இன்று வாலாஜாபேட்டை என்று அழைக்கப்படும், அகத்தீஸ்வரம் ஆக அறியப்படுகிறது. இங்குதான் நம் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்ட சனீஸ்வரனுக்கு உலகிலேயே முதல்முறையாக தங்கத்திலான விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் பாதாள சனீஸ்வரனாக அருள்புரியப்போகிறார். அவருடன் செல்வங்களை அள்ளித் தரும் லட்சுமி வராகருக்கும் சேர்ந்து ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

ஈசான்ய மூலையில் 20 அடி அகலம், 27அடி நீளம், 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனிச் சன்னிதியில் சனீஸ்வரர் அருளப்போகிறார். இதற்கான சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ளது.

இதே போல் லட்சுமி வராகரும் சிறப்பான தோற்றத்தில் காட்சி தருகிறார். தனது மடியில் லட்சுமி தேவியை ஏந்தியிருக்கும் வராகர், வித்தியாசமான முறையில் அமைந்த வட்ட வடிவ ஆலயத்தில் அருள்கிறார். இந்த தெய்வத்தின் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகமும், வேலூர் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

கருவறையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் லட்சுமி வராகர், நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் மடியில் லட்சுமி தேவியை அமர்த்தி, தன் இடது கையால் அணைத்த வண்ணம் காணப்படுகிறார். மற்றொரு இடது கையில் சங்கும், வலது கரங்களில் சக்கரமும், அபய முத்திரையும் தாங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இவரை வணங்கு வதன் பலனாக வாஸ்து தோஷங்கள் நீங்கி மனை, வீடு போன்றவைகளில் ஏற்பட்ட தடைகள் அகலும்.

- சேலம் சுபா

Next Story