திருமண வரம் அருளும் மாங்காடு காமாட்சி அம்மன்


திருமண வரம் அருளும் மாங்காடு காமாட்சி அம்மன்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:21 AM GMT (Updated: 25 Jun 2019 10:21 AM GMT)

உலகை காக்கும் பரம்பொருளான அந்த சிவபெருமானை நாம் வணங்கி வந்தாலும், அவருக்கு இணையாக அவருக்கு அருகில் அமர்ந்து உலக மக்களுக்கெல்லாம் அருள் வழங்கும் பார்வதியும் பல்வேறு அம்சங்களோடு இந்தப் பூவுலகில் சிறப்பான வழிபாட்டைப் பெற்றிருக்கிறாள்.

சென்னை நகரை பொருத்த வரை மாங்காடு காட்சி அம்மன், திருவேற்காடு கருமாரி அம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் மற்றும் காளிகாம்பாள் கோவில் ஆகியவை மிகவும் சிறப்பு பெற்ற அம்மன் கோவில்கள். அவற்றில் மிகவும் அற்புதமான திருத்தலம் மாங்காடு காமாட்சியம்மன் கோவில். வேண்டும் வரங்களை தரும் தாயாகவும், திருமண வரம் அருளும் தெய்வமாகவும் அன்னை காமாட்சி அருள்பாலித்து வருகிறாள்.

மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் ‘மாங்காடு’ என்னும் காரணப் பெயர் பெற்றது. அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த தலம் இந்த மாங்காடு திருத்தலம். கயிலை மலையில் இருந்த போது, பார்வதி சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடினாள். அதனால் உலகமே இருண்டது. கோபமடைந்த சிவன், பார்வதியை சபித்து, தவம் செய்து மீண்டு வருமாறு கூறினார். அன்னை பார்வதி மாங்காடு வந்து நெருப்பில் தவமிருந்தாள்.

மாங்காட்டிலே காமாட்சியாய் அவதரித்த அன்னை, ஈஸ்வரனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும், ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்து குண்டங்களில் அக்னி வளர்த்து நடு குண்டத்தில் ஊசி முனையில் ஒற்றைக் காலில் சிவனைக் காண கடுந்தவம் புரிந்தாள். இதனால் அம்மை இத்தலத்திலே ‘தபசு காமாட்சி’ என்று அழைக்கப்படுகின்றாள்.

மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரியும், மலையரசன் மகளுமான தன் தேவியின் மேல் கருணை கொண்ட சிவபெருமான், அம்மைக்கு அருள் செய்ய வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அதே தலத்தில் தன்னை பூஜித்து வந்த சுக்ராச்சாரியாருக்கு முதலில் ஈசன் காட்சி தந்தார். அதோடு, அன்னையிடம் அசரீரியாக, காஞ்சிக்கு செல்லும்படியும், அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறினார்.

தவத்தில் ஆழ்ந்திருந்த அன்னை, தன் நாயகன் சொல் கேட்டு அவரை அடைய காஞ்சி மாநகருக்கு சென்றாள். அங்கு மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். அப்போது கம்பாநதியை பெருகிவரச் செய்து, பங்குனி உத்திர நன்னாளில் அம்மையை மணம் செய்தருளினார் சிவபெருமான்.

ஈசனை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் ஏற்பட்ட அவசரத்தால், தான் தவத்திற்காக வளர்த்த குண்டங்களை அணைக்காமல் மாங்காட்டில் இருந்து காஞ்சி சென்று விட்டாள் அன்னை. அதனால் அந்தத் தீயின் வெப்பம் தாங்காமல் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் தவித்தனர். உயிரினங்கள் துன்பத்தில் துவண்டன.

பார்வதி தேவியார் இந்த இடத்தை விட்டு சென்றாலும், நெருப்பு மட்டும் அணையவில்லை. ஆதிசங்கரர் இங்கு வந்து அர்த்தமேரு சக்கரத்தை நிறுவினார். இதன் மூலம் மாங்காடு குளிர்ந்தது.

இது சோழர் காலக் கட்டிடக்கலையை காட்டுகிறது. தற்போதே ராஜகோபுரம் கட்டப்பட்டது. நுழைவு வாசலுக்கு அருகே விநாயகர் சிலை உள்ளது. கோவிலின் நடுவில் அர்த்த மேரு மகா சக்கரம் உள்ளது. இங்கு மாங்காடு அன்னை காமாட்சி வீற்றிருக்கிறாள். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இந்தக் கோவிலில் விசேஷ நாட்கள் ஆகும். பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சுக்ரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம்.

ஆலயத்தில் எல்லா நாளும் நல்ல நாள் என்றாலும், ஆடி மாதம் பிறந்து விட்டால் சென்னை மக்களுக்கு இங்கு திருவிழாக் கோலம்தான். ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி, வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதி மாதம் பவுர்ணமி நாளில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

மாங்காடு காமாட்சி அம்மனுக்கு ஆறு வாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து அர்ச்சனை செய்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அம்பாளுக்கு புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.

இத்திருக்கோவிலில் ஸ்ரீசக்கரத்திற்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கு செய்யப்படும் குங்கும அர்ச்சனை மிகவும் விசேஷமானது. பஞ்சலோகத்தினால் ஆன ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் சிறப்பாக செய்யப்படுகின்றன.

மூலஸ்தானத்தில் இருந்த தவக்கோலத்திற்கு பதிலாக, ஒரு கையில் கிளியோடும் மறு கையில் கரும்போடும் கூடிய சாந்தமான அம்மனை காஞ்சிப் பெரியவர்கள் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். மாவடியில் அம்மன் தவம் செய்ததால் தல விருட்சமாக மாமரம் உள்ளது.

மாங்காடு காமாட்சி அன்னையை தரிசனம் செய்து வேண்டும் வரம் யாவும் பெற்று வாழ்வில் வளமும் நலமும் பெறுவோம்.

- அறந்தாங்கி சங்கர்

Next Story