செம்மை வாழ்வு தரும் செவ்வாய்


செம்மை வாழ்வு தரும் செவ்வாய்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:50 AM GMT (Updated: 25 Jun 2019 11:50 AM GMT)

விண்வெளியில் பூமிக்கு அடுத்துள்ள கிரகம், செவ்வாய். அதோடு செவ்வாய்க்கு ‘பூமிக்காரகன்’ என்ற பெயரும் உண்டு. ஏனென்றால் பூமியைப் போன்றே ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை செவ்வாயில் இருப்பதாக நம்பப்படுகிறது.

கிரகங்களில் மிகக் கடினமான பாறைகளால் ஆன கிரகம் செவ்வாய். அது உறுதியான, வலிமையான கிரகமாகும். மிக உஷ்ணமான கிரகமும் செவ்வாய்தான். மண்ணாசையை குறிப்பது செவ்வாய் கிரகம். மண்ணாசை உள்ளவன் பூமியை ஆக்கிரமிக்க நினைப்பான்.

செவ்வாய் ‘சகோதர காரகன்’ என அழைக்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சகோதரர்கள் நிலை பற்றி, செவ்வாயின் நிலைகொண்டே கணிக்கப்படுகிறது. செவ்வாய் போர்க் குணம் கொண்ட ஒரு கிரகம். மேஷத்தில் செவ்வாய் இருக்கும் போது, எந்த காரியத்தையும் வெறித்தனமாக செய்யும். விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் வேகம் குறைவாக இருக்கும். பெண்களின் ருது நிகழ செவ்வாய் மிக முக்கிய காரண கர்த்தாவாக இருக் கிறார்.

சகோதரம், வீரம், வெட்டுக்காயம், தீக்காயம், விபத்தில் ரத்தம் அதிகமாக உடம்பில் இருந்து வெளியேறுதல், எதிரிகள், காம இச்சை, கெட்ட பெயர் எடுத்தல், மழை பெய்யாமல் போகுதல், விளையாட்டு கலை, போர்க்கலை போன்றவை செவ்வாயின் காரத்துவம்.

செவ்வாய்க்கு 4, 7, 8 ஆகிய பார்வைகள் உள்ளன. 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். செவ்வாயின் பிற பெயர்கள் பூமிக்காரகன், சேய், அங்காரகன், குஜன் ஆகும்.

ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்றவர்கள், தைரியம், நிர்வாகத் திறன், முரட்டுத்தனம், பிடிவாதம், கோபம், அதீத காம உணர்வு, போட்டி மனப்பான்மை மிக்கவர்களாக இருப்பார்கள். அத்துடன் அரசியல், மத்திய அரசுப்பணியாளர், சீருடைப் பணியாளர்கள், ராணுவம், விளையாட்டு வீரர், தற்காப்பு கலையில் ஆர்வம், கட்டுமஸ்தான உடல்வாகு உள்ளவராகவும் இருப்பர். செவ்வாய் பலம் பெற்றவர் களுக்கே, வீடு மற்றும் வாகன யோகம் சிறப்பாக அமையும்.

இந்த ஜாதகரின் சகோதரர்கள் நல்ல உயர்ந்த நிலையில், ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள். சகோதரர்களுடன் நட்புறவு ஏற்படும். அதே வேளையில் ஜாதகர் பெண்ணாக இருந்தால், அவரது கணவர் உயர்ந்த நிலையில் இருப்பார்.

முருகன் வழிபாட்டிலும், சிவப்பு நிற ஆடைகள் அணிவதிலும் ஆர்வம் ஏற்படும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் செவ்வாய் ஓரையில் நடக்கும். மேஷ, விருச்சிக லக்னம் அல்லது மேஷ, விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் நட்பு உண்டாகும். செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் நட்பு ஏற்படும். அறுவை சிகிச்சை மருத்துவருடன் தொடர்பு கிடைக்கும். மாமிச உணவு வகை மீது அதிக நாட்டம் உண்டாகும். கலகம் செய்வதில் விருப்பம் உண்டாகும். மலைப் பிரதேசங்களுக்கு சென்று வர வாய்ப்புக் கிடைக்கும்.

ஜனன ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்களுக்கு, சகோதரர்கள் தாழ்ந்த நிலையில் சலன புத்தி உடையவராக இருப்பார்கள். பெண் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தால் கணவருக்கு முன்னேற்றக் குறைவு ஏற்படும். வீடு, வாகன யோகம் குறையும். அரசு பணி, அரசு ஆதரவில் தடை தாமதம் ஏற்படும்.

அப்படி இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து, மலை மீதுள்ள முருகனை வழிபடுவது நல்ல பலன் தரும். செவ்வாய்க்கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும். தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். செவ்வாய் தசைக் காலங்களில் சிரமம் மிகுதியாக இருந்தால் ரத்த தானம் செய்ய வேண்டும். பூமி மற்றும் உடன் பிறந்தவர்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, சிவப்பு நிற பசுவை தானம் வழங்க வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் ஆலயம் சென்று வழிபட்டு வரலாம்.

செவ்வாய் பற்றிய தகவல்

நிறம் - சிவப்பு

குணம் - குரூரன்

மலர் - செண்பகம்

ரத்தினம் - பவளம்

சமித்து - கருங்காலி

தேவதை - முருகன்

பிரத்யதி தேவதை - ஷேத்திரபாலன்

திசை - தெற்கு

ஆசனவடிவம் - முக்கோணம்

வாகனம் - அன்னம்

தானியம் - சிவப்புத் துவரை

உலோகம் - செம்பு

பிணி - பித்தம்

சுவை - துவர்ப்பு

ராகம் - சுருட்டி

நட்பு - சூரியன், சந்திரன், வியாழன்

பகை - புதன், ராகு, கேது

சமம் - சுக்ரன், சனி

ஆட்சி - மேஷம், விருச்சிகம்

மூலத்திரிகோணம் - மேஷம்

உச்சம் - மகரம்

நீசம் - கடகம்

நட்சத்திரங்கள் - மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

திசா காலம் - 7 ஆண்டுகள்

பாலினம் - ஆண்

கோச்சார காலம் - 1½ மாதம்

உருவம் - குள்ளம்

உபகிரகம் - தூமன்

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story