ராஜ லட்சண யோகம்


ராஜ லட்சண யோகம்
x
தினத்தந்தி 28 Jun 2019 2:50 PM GMT (Updated: 28 Jun 2019 2:50 PM GMT)

ஜோதிடம் கூறும் அரிய யோகங்களில் ராஜ லட்சண யோகம் என்பதும் ஒன்றாகும். இந்த யோகம் அமையப்பெற்றவர்கள், அழகான உடல் அமைப்பும், நல்ல முகப்பொலிவையும் பெற்றிருப்பார்கள் என்ற நிலையில், இது கம்பீரமான யோகம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

 இயற்கை சுபக்கிரகங்களான குரு, சுக்ரன், புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சந்திரன் நின்ற இடத்திலிருந்து (ராசியிலிருந்து) அல்லது லக்னத்திலிருந்து 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் தனித்தனியாகவோ, இணைந்தோ அல்லது வரிசையாகவோ அமர்வதன் மூலம் இந்த யோகம் உருவாகிறது. 

சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க வாழ்வை அளிப்பதில் இந்த யோகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்துடன், பிறப்பு ஜாதக ரீதியாக திசா-புத்தி உள்ளிட்ட மற்ற அம்சங்களும் பலமாக அமையப்பெற்றவர்கள் ஆட்சி, அதிகாரம் கொண்ட பதவிகளைப் பெறுவார்கள் என்ற அடிப்படையில் ஜோதிடம் இந்த யோகத்தை ராஜ லட்சண யோகம் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நான்கு கிரகங்களில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ பகை அல்லது நீசம் பெற்றிருக்கும் நிலையில் சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த யோகத்தைப் பொறுத்தவரையில் கிரகங்கள் எந்த அளவுக்கு பலம் வாய்ந்ததாகவும், மற்ற அசுப கிரகங்களின் தாக்கத்திலிருந்து விலகி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.


Next Story