சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்


சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்
x
தினத்தந்தி 18 July 2019 12:19 PM GMT (Updated: 18 July 2019 12:19 PM GMT)

‘ஆன்மிகப் பயணத்தில் நிறைய தூரம் பயணித்து, பல நிலைகளைக் கடந்து உயர்ந்தவர்கள், தங்கள் உடல் ஓரிடத்தில் இருக்கையில் சூட்சும சரீரத்தோடு வேறு இடங்களுக்கும் செல்ல முடிந்தவர்களாக இருக்கிறார்கள்’ என்பதைப் பலருடைய அனுபவங்கள் பதிவு செய்திருக்கின்றன. கர்னல் ஓல்காட்டும் அதைக் கண்டு வியந்திருக்கிறார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார், பிலடெல்பியாவில் இருந்த போது அவர் சூட்சும சரீரத்தோடு நியூயார்க் வீதியில் நடப்பதை ஒரு முறை கர்னல் ஓல்காட் கண்டிருக்கிறார். இப்படி சூட்சும சரீரத்தோடு இருக்கும் யோகசக்தி வாய்ந்தவர்கள், தங்கள் வேலை முடிந்தவுடன் அந்த சூட்சும சரீரத்தைக் களைந்து விடுவார்கள். அது பார்வையாளர்களுக்குக் காற்றில் கரைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் யோகிகள், அடுத்தவர்களுடைய தோற்றத்தையும் அணிந்து கொள்வதுண்டு. அதையும் இந்தியாவில் இருக்கையில் கர்னல் ஓல்காட் கண்டு அதிசயித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் கர்னல் ஓல்காட், ஜம்முவில் இருந்தார். அப்போது சென்னையில் இருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார், கர்னல் ஓல்காட்டுக்கு தந்தி அனுப்பினார். அந்த தந்தியை, ஊழியர் ஒருவர், கர்னல் ஓல்காட் தங்கியிருந்த இடத்திற்கு சீருடையுடன் வந்து இரவு நேரத்தில் தந்திருக்கிறார். அதை கர்னல் ஓல்காட் பெற்றுக்கொண்டு வாசலிலேயே நின்றிருக்க, அந்த தபால் தந்தி ஊழியர் நிலவொளியில் காற்றில் கரைந்து போவதைக் கண்டு திகைத்திருக்கிறார். அப்போதுதான் அது உண்மையான தபால் தந்தி ஊழியர் அல்ல, அவரது தோற்றம் சிறிது நேரத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது அவருக்கு விளங்கியது.

இது போன்ற யோகசக்திகள் பிறந்த நாடு, வேதங்கள் உருவாகிய இடம், புத்தர் பிறந்த பூமி என்பதற்காகவே ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் இந்தியாவில் தங்கள் லட்சியத்தை நிறைவேற்ற வந்தார்கள். இந்தியா வந்த பின் கர்னல் ஓல்காட் எத்தனையோ யோகிகளையும், மகாத்மாக்களையும் நேரிலும், சூட்சும சரீரத்திலும் கண்டு மெய்சிலிர்த்திருக்கிறார்.

ஒரு நாள் அவர் ஒரு நூலைப் படிப்பதில் மூழ்கிப் போயிருந்தார். அந்த நேரத்தில் ஒரு பேரொளி அறைக்குள் பளீரிட்டது. திகைப்புடன் தலை நிமிர்ந்து பார்த்த போது, ஒரு மகாத்மா அவர் முன் நின்றிருந்தார்.

அவர் தூய வெள்ளை உடை அணிந்திருந்தார். தலையில் பட்டுத் தலைப்பாகை இருந்தது. அவருடைய கருத்த தலைமுடி நீண்டு இரு தோள்களிலும் விழுந்திருந்தது. அவர் தாடியும் கருத்து நீண்டிருந்தது. அவர் கண்களில் பேரன்பு தெரிந்தது. பார்த்தவுடன் பிரமித்து மெய்மறந்து போன கர்னல் ஓல்காட், அவரையும் அறியாமல் எழுந்து மண்டியிட்டு வணங்கினார்.

‘மெய்ஞானம் பெற்ற ஒரு மகான் எப்படி தேஜஸுடன் இருப்பார்?, வார்த்தைகள் இல்லாமல் அவரை அறிந்து கொள்வது எப்படி?’ என்று கர்னல் ஓல்காட் உணர்ந்து கொண்ட தருணம் அது. அந்த மகாத்மாவின் கை, ஓல்காட்டின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தது. கம்பீரமான கனிவான குரலில் அவர், கர்னல் ஓல்காட்டை எழுந்து அமரச் சொன்னார். கர்னல் ஓல்காட் இருக்கையில் அமர, அந்த மகாத்மாவும் எதிர் இருக்கையில் அமர்ந்தார்.

‘ஒவ்வொருவரும் அவரவர் கர்மாக்களுக்கு ஏற்ற நிலைகளையே அடைகிறார்கள்’ என்றும், ‘கர்னல் ஓல்காட்டின் நல்ல கர்மாக்கள் அப்போதைய நிலையை எட்ட வைத்திருக்கிறது’ என்றும் அந்த மகாத்மா கூறினார். அந்த வேளையில் அவரைச் சந்திக்க வைத்ததும் அந்தக் கர்ம விதியே என்றும், அந்த நேரத்தில் அவர் அறிய வேண்டியதை அறிய வைக்கவே தான் வந்திருப்பதாகவும் அந்த மகாத்மா சொன்னார்.

அந்த மகாத்மா, கர்னல் ஓல்காட்டுக்கு நிறைய ஞான உபதேசம் செய்தார். ‘என்ன செய்ய வேண்டும்?’ என்று வழிகாட்டும் வகையில் பேசினார். இதெல்லாம் நடந்தது எத்தனை நேரம் என்பது கூட கர்னல் ஓல்காட்டுக்குத் தெரியவில்லை. அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ கூட ஆகியிருக்கக்கூடும். ஆனால் எல்லாம் ஒரு கணம் போலத்தான் அவருக்குத் தோன்றியது.

சொல்ல வந்ததை சொல்லி முடித்து, அந்த மகாத்மா எழுந்து நின்றார். கர்னல் ஓல்காட், அவருடைய தேஜஸையே வியந்து பார்த்தார். அவரிடம் இருந்து வந்த ஒளி வெளியில் இருந்து வந்ததல்ல, அவர் உள்ளே இருந்து வந்த ஆன்ம ஒளி என்பது அவருக்குப் புரிந்தது. அந்த மகாத்மா தலையசைத்து விடைபெற்றார். அவர் செல்ல எத்தனிக்கையில் கர்னல் ஓல்காட்டுக்கு, ‘எல்லாம் கனவு அல்லது பிரமையாக இருக்கலாமோ’ என்று சந்தேகம் வந்தது.

‘நடந்திருப்பது உண்மை என்று நிரூபிக்க, ஏதாவது அடையாளம் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று அவருக்குத் தோன்றியது. அதை உணர்ந்தது போல அந்த மகாத்மா புன்னகைத்து, தன் தலைப்பாகையைக் கழற்றி அசைத்தார். அடுத்த கணம் அவர் மாயமாக மறைந்து விட்டார். ஆனால் அவர் அமர்ந்திருந்த இருக்கையில் அந்தத் தலைப்பாகை மட்டும் கிடந்தது. அது, ‘நடந்தது எதுவும் கனவோ, பிரமையோ அல்ல’ என்பதை அறிவித்தது. அதைக் கண்ட கர்னல் ஓல்காட்டுக்கு மயிர்க்கூச்செறிந்தது. ‘என்ன தவம் செய்தோம் இந்த அனுபவத்தைப் பெற?’ என்று அவர் மனம் ஆனந்தக் கூத்தாடியது.

சூட்சும சரீரத்தைப் பயன்படுத்த முடிவது யோகிகளால் மட்டுமல்ல, யோக மார்க்கத்தில் பயணம் செய்து கொண்டிருந்து, முழுமையான யோக நிலையை எட்டாத ஆட்களாலும் சில சமயம் முடியும் என்பதைப் பிற்காலத்தில் கர்னல் ஓல்காட் உணர்ந்தார்.

ஒரு நாள் அவர், ஒரு கட்டுரையை எழுதி முடித்திருந்தார். கட்டுரை அந்த வீட்டின் கீழே உள்ள தரை தளத்தில், அவர்கள் வழக்கமாக எழுதும் அறையில் இருந்தது. முதல் மாடியில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் படுக்கை அறை இருந்தது. கர்னல் ஓல்காட்டின் படுக்கை அறையோ இரண்டாவது மாடியில் இருந்தது. அவர், தன் படுக்கை அறைக்குச் சென்று உறங்குவதற்கு முன் உடைமாற்றினார். அப்போது அவருக்கு, அவருடைய கட்டுரையில் கடைசி வாக்கியத்தில் மூன்று வார்த்தைகளைச் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது.

‘மறுநாள் காலை வரை அந்த வார்த்தைகள் நினைவிருக்குமா?’ என்பதும் சந்தேகமாக இருந்தது. இப்போதே ஏதாவது தாளில் எழுதி வைத்துக் கொள்ளலாம் என்றால், அந்தப் படுக்கை அறையில் தாளோ, பேனா அல்லது பென்சிலோ இருக்கவில்லை. மறுபடி உடைமாற்றி இரண்டு மாடி இறங்கிச் சென்று அந்தக் கட்டுரையில் அந்த மூன்று வார்த்தைகளைச் சேர்க்க அவருக்குச் சோம்பலாக இருந்ததால், அவர் படுத்துக் கொண்டார்.

அப்போது அவருக்கு ‘சூட்சும சரீரத்தில் கீழே போய் அந்தக் கட்டுரையில் மூன்று வார்த்தைகளைச் சேர்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ என்று தோன்றியது. இதற்கெல்லாம் எண்ணம் வலிமையாக இருக்க வேண்டும் என்று அவர் கேள்விப்பட்டிருந்தார். உறங்கச் செல்லும் முன் எண்ணும் எண்ணங்கள் முக்கியமானவை என்றும், உறக்கத்தில் கூட அவை அற்புதங்கள் நிகழ்த்த வல்லவை என்பதையும் அவர் அறிஞர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தார். எனவே அந்த மூன்று சொற்களையும் அந்தக் கட்டுரையில் சேர்க்க வேண்டும் என்று எண்ணிய படியே அவர் உறங்கிப் போனார்.

மறுநாள் காலை எழுந்து அவர் கீழே வந்தபோது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “நீங்கள் நேற்று இரவு என்ன சாகசம் செய்ய முயற்சி செய்தீர்கள்?” என்று கேட்டார். கர்னல் ஓல்காட், ஒன்றும் விளங்காமல் விழித்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். “உங்கள் சூட்சும சரீரம் சுவற்றில் ஊடுருவிக் கீழே இறங்குவதைப் பார்த்தேன். ஏதோ உறக்கத்தில் நடப்பவர் போலத் தெரிந்தீர்கள்.”

கர்னல் ஓல்காட் தன் கட்டுரையில் மூன்று வார்த்தைகள் சேர்க்க எண்ணி இருந்ததையும், அதைச் சூட்சும சரீரத்தில் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடியே உறங்கியதையும் சொன்னார்.

பரபரப்புடன் இருவரும் கீழே சென்று அந்தக் கட்டுரையை எடுத்துப் பார்த்தார்கள். அந்தக் கட்டுரையில் கடைசி பக்கத்தில் கடைசி வாக்கியத்தில், கர்னல் ஓல்காட்டின் இரண்டு வார்த்தைகள் முழுவதாகவும், மூன்றாவது வார்த்தை பாதியும் அவர் கையெழுத்திலேயே சேர்க்கப்பட்டிருந்தது. மூன்றாவது வார்த்தையை முடிக்கும் முன் சக்தி தீர்ந்து போயிருக்கலாம் என்று சொல்லும்படியாக அந்தச் சொல்லின் கடைசிப் பகுதி கோணலாக நீண்டிருந்தது.

-தொடரும்.

Next Story