கல்வி கற்பது, கல்வியை கற்றுக்கொடுப்பது


கல்வி கற்பது, கல்வியை கற்றுக்கொடுப்பது
x
தினத்தந்தி 23 July 2019 7:32 AM GMT (Updated: 23 July 2019 7:32 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.

இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான கல்வி கற்பது, கல்வியை கற்றுக்கொடுப்பது குறித்த தகவல்களை காண்போம்.

கல்வி கற்பதும், கற்ற கல்வியை பிறருக்கு கற்றுக் கொடுப்பதும் இஸ்லாத்தில் சிறந்த பணியாக தேர்வு செய்யப்படுகிறது. இந்தப் பணியை இஸ்லாம் மிக உயர்வாக நினைத்து, இவ்விரண்டுமே ‘நாவு சார்ந்த இறைநம்பிக்கை’ என்ற அந்தஸ்தை வழங்கி கவுரவிக்கிறது.

‘கற்பதும், கற்பிப்பதும் இறை நம்பிக்கையே’ எனும் மகுடத்தை சூட்டிய மார்க்கம் இஸ்லாம். கற்பதும், கற்பிப்பதும் மற்ற அனைத்தையும் விட முதன்மையானது எனும் பெருமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.

தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற இஸ்லாமிய இறை வணக்கங்கள் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெறுவது கல்வியே.

ஆதலால்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் முதன்முதலாக கூறிய வார்த்தையே ‘ஓதுவீராக’ எனும் கல்வி கற்பது குறித்துதான். கல்வி கற்றால்தான் இறைவனை அறிந்து, அவனை நம்பமுடியும். இறைவணக்கமும் முறையாக நிறைவேற்ற முடியும். கல்வி இல்லாமல் இறை நம்பிக்கையும், இறைவணக்கமும் செயல்வடிவம் பெற சாத்தியமாகாது.

‘தான தர்மங்களில் சிறந்தது ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று, பிறகு அதை தமது சகோதர முஸ்லிமுக்கு கற்றுக் கொடுப்பதே ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்: இப்னுமாஜா)

கல்வி கற்பது, கற்பிப்பது, சிந்திப்பது, சிந்திக்கத் தூண்டுவது, அறிவைத் தேடுவது, அதை மற்றவருக்கு வழங்குவது, ஆராய்ச்சி செய்வது ஆகிய அனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் வணக்கமாகும்.

கல்வி கற்பது ‘இறையச்சம்’ (தக்வா), கல்வியைத் தேடுவது வணக்கம் (இபாதத்), கல்வி ஞானம் பற்றி பேசுவது இறை துதி (தஸ்பீஹ்), கல்வி ஞானம் பற்றி உரையாற்றுவது அறப்போர் (ஜிஹாத்), கல்வியை கற்பிப்பது தர்மம் (ஸதகா) ஆகும்.

திருக்குர்ஆன் வசனங்களில் ஆராய்தல், சிந்தித்தல், யோசித்தல், உணர்தல், அறிதல், படிப்பினை பெறுதல், பாடம் பெறுதல், அறிவுரை பெறுதல், உற்று கவனித்தல் போன்ற கல்வி சம்பந்தமான, அறிவியல் சம்பந்தமான வார்த்தை களைக் கொண்ட வசனங்கள் மட்டும் பத்து சதவீதம் உள்ளன. கல்வியைத் தேடி பயணிக்குமாறு தூண்டும்படியான ஐம்பதுக்கும் மேற்பட்ட திருவசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பிடித்துள்ளன.

வணக்க வழிபாடுகளில் இருக்கும் மோகத்தை விட கல்வி கற்பதிலும், அதை கற்பிப்பதிலும் தான் அதிகம் இருக்க வேண்டும் என்று இந்த நபிமொழி இவ்வாறு வலியுறுத்துகிறது:

“நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, ‘அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில்தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள். இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவனை நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: தாரமீ)

‘பனூ இஸ்ரவேலரைச் சார்ந்த இருவர். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை நிறைவேற்றி விட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக்கிறார். மற்றொருவர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குகிறார். அவ்விருவரில் சிறந்தவர் யார்?’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘வணக்கசாலியை விட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர். நான் எப்படி உங்களை விட சிறந்தவனாக இருக்கிறேனோ அது போன்று’ என பதிலுரைத்தார்கள். (நூல்: தாரமீ, திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கல்வியில் பலவிதமான புரட்சிகளை பத்ர் போரின் முடிவில் ஏற்படுத்தினார்கள். பத்ர் போரில் இறை மறுப்பாளர்களில் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டார்கள். அப்போதைய வழக்கப்படி, சிறை பிடிக்கப்பட்டவர்களில் வசதி வாய்ப்புள்ளவர்கள் பிணைத்தொகை கொடுத்து விடுதலை பெற்றனர். அப்போது, கைதிகளில் வசதியில்லாத ஒருவர் 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத, வாசிக்க கற்றுக் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்யலாம் என்று நபிகளார் உத்தரவிட்டார்கள்.

அதுபோல, சிறுவர்களுக்கு இலவச கல்வி சேவையை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இந்த இலவச கல்வி சேவையில் கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் ஸைத்பின் ஸாபித் (ரலி). மதீனாவில் இருக்கும் போது, நபியவர்களுக்கு இறை செய்தி வரும்போது, அதை எழுதும் எழுத்தாளராக ஸைத்பின் ஸாபித் (ரலி) திகழ்ந்தார். இவர் தனது கல்வியை, பத்ர் யுத்த கைதிகளிடமிருந்து கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நபி (ஸல்) அவர்கள், மஸ்ஜித் நபவி பள்ளிவாசல் திண்ணையில் வைத்து பரம ஏழைகளான எழுபதுக்கும் அதிகமான தோழர்களுக்கு இலவச கல்வியை இலவச உணவுடன் கற்றுக்கொடுத்தார்கள். இவர்கள் ‘திண்ணைத் தோழர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். கல்வி கற்பவர்களுக்கு இலவச உணவையும், இலவச விடுதியையும் முதன்முதலாக வழங்கியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே. இவ்வாறு திண்ணையில் இலவச கல்வி கற்றவர்களில் ஒருவர் தான் அபூஹூரைரா (ரலி) அவர்கள். இவர் நபிகளாரிடமிருந்து 5374 நபிமொழிகளை அறிவித்திருக்கிறார். அதிகமான நபிமொழிகளை அறிவித்தவர்களில் இவரே முதல் இடத்தை பெறுகிறார்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் பெண் கல்விக்காகவும், அடிமைப் பெண்களின் கல்விக்காகவும் பாடுபட்டார்கள். அண்ணலாரின் அன்பு மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) கல்வியின் பல துறைகளில் விற்பன்னராக சிறந்து விளங்கினார்கள். இவர்கள் 1) குர்ஆன் வழிக்கல்வி, 2) வாரிசுரிமைக் கல்வி, 3) கவிதை ஞானம், 4) வரலாற்று அறிவு, 5) மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளில் சிறந்து விளங்கினார்கள். மேலும் நபிகளாரிடமிருந்து 2210 நபிமொழிகளையும் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும், நபியவர்கள் இளைஞர், முதியோர், குடும்பத் தலைவர் ஆகியோரின் கல்வி திட்டத்தையும் உலகில் முதன் முதலாக தொடங்கி வைத்தார்கள்.

‘மூவருக்கு (இறைவனிடம்) இரண்டு கூலிகள் உண்டு. அவர்களில் ஒருவர் தம்மிடமுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களை கற்பித்து, கற்பிப்பதையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து, அவளை மணந்தவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), நூல்: புகாரி)

உமர் (ரலி) கூறுவதாவது:

‘நானும், எனது அண்டை வீட்டுக்காரரும் உமய்யா பின் ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். நபியின் அவைக்கு கல்வி கற்க நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒருநாள் அவர் செல்வார்; ஒருநாள் நான் செல்வேன். நான் சென்று நபியிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காக கொண்டு வந்து அறிவித்து விடுவேன். அது போன்று அவரும் செய்வார்’. (நூல்: புகாரி)

இருவரும் குடும்பத் தலைவராக இருந்ததினால் ஒருவர் மாற்றி ஒருவர் வேலைக்கும் சென்று, கல்வி கற்கவும் சென்று, தான் கற்ற கல்வியை மற்றவருக்கு தெரிவிப்பார்கள். இதுதான் இளைஞர், முதியவர், குடும்பத்தலைவர் ஆகியோரின் கல்வித் திட்டம்.

‘கல்வி என்பது ஒரு ஞானம் நிறைந்தவனின் விழுபொருள். அது எங்கு கிடைத்தாலும் அதை பெற்றுக்கொள்வது ஏற்றமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), திர்மிதி).

இஸ்லாம் கல்வியை இறை நம்பிக்கையின் ஒரு அங்கம் என்று வெகுவாக பாராட்டி, ஆர்வமூட்டி மக்களுக்கு பயன்தரும் பல கல்வியாளர்களை, சிந்தனையாளர்களை, ஆராய்ச்சியாளர்களை உருவாக்கித் தந்துள்ளது.

Next Story