மங்கல வாழ்வளிக்கும் மணமை அகத்தீஸ்வரமுடையார்


மங்கல வாழ்வளிக்கும் மணமை அகத்தீஸ்வரமுடையார்
x
தினத்தந்தி 23 July 2019 10:55 AM GMT (Updated: 23 July 2019 10:55 AM GMT)

சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டில், வழிபாட்டு சிறப்புமிக்க பல திருக்கோவில்கள் மக்களால் போற்றி வணங்கப்படுகிறது.

 சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, மணமை கிராமம். இங்கு அகத்தீஸ்வரமுடையார் என்னும் சதாசிவ நாதர் திருக்கோவில் இருக்கிறது.

சிறப்பு வாய்ந்த இத்திருக்கோவில் வெளிப்பட்டதே சுவையான வரலாறு. மணமை கிராமத்தில் இக்கோவில் இருந்ததே பலருக்கு தெரியாது. வழிபாடு இல்லாமல் கோவில் மீது மரம், செடி, கொடிகள் வளர்ந்தும், புற்று மண்ணால் சிவலிங்கம், அம்பாள், நந்தி மூடப்பட்டும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது. கோவில் இருந்த இடத்திற்கு வருவதற்கே பலர் தயங்கினர். அப்படிக் கிடந்த ஆலயத்தை சிலர் உழவாரப் பணிகளைச் செய்யத் தொடங்கினர். பலரின் உதவியோடு ஆலயம் கடந்த 2017-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த ஆலயத்தைச் சுற்றி சீர்திருத்தம் செய்யும் பொழுது, கருவறை அருகே உடைந்த கல்வெட்டு பலகை கிடைத்தது. அது மூன்றாம் குலோத்துங்கச் சோழனது 24-வது ஆண்டு கல்வெட்டாகும். அதில் மணமை என்ற இந்த ஊர் ‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக்கு உட்பட்ட ஆமூர் நாட்டுக்கு உட்பட்ட, மணமையான ஜனநாத நல்லூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாதன் என்பது முதலாம் ராஜராஜ சோழனது சிறப்பு பெயராகும். இந்த ஆலயத்தின் விளக்கு எரிக்க, திரு நட்டப்பெருமாள் என்பவன் மூன்று பசுக்களை ஆலயத்திற்கு அளித்துள்ளான் என கல்வெட்டு குறிப்பு சொல்கிறது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புடன் விளங்கியிருக்கிறது.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய திருக்கோவிலின் வாசலில் பலிபீடம் உள்ளது. அதையடுத்து நந்தியம்பெருமான், இறைவனை நோக்கி அமர்ந்துள்ளார். கருவறையில் இறைவன், லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். பெரிய வடிவத்துடன் காட்சி தரும், இறைவன் சோழர்காலத்தில் செய்யப்பட்ட திருமேனியைக் கொண்டவர். கருவறையின் வாசலில் துவார விநாயகர் எழுந்தருளியுள்ளார். கருவறையின் அர்த்த மண்டப நுழைவு வாசலில் வலதுபுறம் விநாயகப்பெருமானும், இடதுபுறம் முருகப்பெருமானும் உள்ளனர்.

கருவறை தேவகோட்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வத் திருமேனிகளைக் கண்டு வழிபடலாம். சண்டிகேசுவரர் சன்னிதியும் இடம் பெற்றுள்ளது. தெற்குத் திருச்சுற்றில் சைவசமய குரவர் களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். அருகில், ஆலய திருப்பணியின் போது கிடைத்த பலகைக் கல்வெட்டினை ஒரு பீடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

வடக்குத் திருச்சுற்றில் கருவறையின் இடது புறத்தில் திருநீலகண்டேஸ்வரர் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக் கிறார். அகத்தீஸ்வரமுடையார் கோவில் அருகே வயல்வரப்பில் புதைந்து கிடந்த இவரை, ஆலயத்தில் எழுந்தருளச் செய்துள்ளனர். தன்னை வழிபடுபவர்களுக்கு, வழிகாட்டுபவராக இந்த நீலகண்டேஸ்வரர் திகழ்கிறார். இவரது சன்னிதிக்கு அருகில் வில்வ மரமும், வன்னிமரமும் உள்ளது. அதனை பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். வடக்கு திருச்சுற்றில் நாகர் வடிவமும், வடகிழக்கு மூலையில் பைரவ மூர்த்தியும் வீற்றிருந்து அருள்கிறார்கள். அம்பாள் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மனோன்மணி அம்பாள் தனது கரங்களில் அங்குசம், பாசம் தாங்கியும், அபய கரத்துடன் அருளாசி வழங்கு கிறார்.

மணமை திருக்கோவிலுக்கு எதிரே சிறிய குன்று உள்ளது. இங்கு கன்னிமார் கோவிலும், சுனையும் உள்ளது. பலர் கன்னிமார் கோவிலை குலதெய்வமாக போற்றி வணங்குகின்றனர். பவுர்ணமி நாளில் இந்த மலையைச் சுற்றிவரும் ‘கிரிவலம்’ சிறப்பாக நடைபெறுகிறது. கிரிவலம் செல்லும் வழியில் கங்கையம்மன் கோவில், விநாயகர் போன்ற பல திருக்கோவில்கள் உள்ளன. மேலும் இவ்வூரின் ஏரியில் காணப்படும் கங்கை சுனைக் கிணறு, வற்றாமல் சுவையான நீரை வழங்குவது தனிச் சிறப்பாகும். மக்கள் பலர் இந்தக் கிணற்றில் இருந்து நீர் எடுத்துச் செல்கின்றனர்.

இந்தக் கோவிலில் பிரதோஷ வழிபாடு, சங்காபிஷேகம், நவராத்திரி, சிவராத்திரி, திருவாதிரை, ஆருத்ரா தரி சனம் போன்ற சிறப்பு வழிபாடுகளும், திருமுறை ஓதுதல் போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன. இங்கு எழுந்தருளியுள்ள அம்பாள் சன்னிதியில் மூன்று பவுர்ணமி தினங்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருத்தலமாக இது விளங்குகிறது.

அமைவிடம்

திருக்கழுக்குன்றம் வட்டத்தில், மணமை மதுரா லிங்கமேடு கிராமம் என இவ்வூர் குறிக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் மணமை பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது.

கி.ஸ்ரீதரன்

Next Story