சிவனடியாருக்கு தலைவணங்கிய நாயனார்


சிவனடியாருக்கு தலைவணங்கிய நாயனார்
x
தினத்தந்தி 23 July 2019 12:09 PM GMT (Updated: 23 July 2019 12:09 PM GMT)

சிவனை தன் சிந்தையில் வைத்து ஆட்சி புரிந்து வந்தவர், புகழ்ச்சோழ நாயனார். அதன் காரணமாக பல வெற்றிகளையும் குவித்தவர். அவரது ஆட்சியின் கீழ், பல அரசர்கள் இருந்து, அவருக்கு கப்பம் கட்டி வந்தனர். அந்த கப்பங்களை வாங்கி, சைவ நெறி தழைத்து ஓங்க திருப்பணிகளைச் செய்து வந்தார்.

27-7-2019 புகழ்சோழ நாயனார் குருபூஜை

கருவூரில் வாழ்ந்தவர் சிவகாமியாண்டார். இவரும் சிறந்த சிவனடியாரே. இவர் தினந்தோறும், மலர் கொய்து அதை இறைவனுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். அன்றும் வழக்கம்போல் பூக்கள் நிரம்பிய கூடையுடன் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது புகழ்ச்சோழ நாயனாரின் அரசவை பட்டத்து யானை, அந்த பூக்கூடையை பறித்து மலர்களை கீழே கொட்டியது. அதைக் கண்டு சிவகாமியாண்டார் பதறிப்போனார்.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்தார் எறிபத்த நாயனார். அவர், இறைவனுக்கு அர்ச்சிக்க வைத்திருந்த பூக்களை தரையில் கொட்டிய யானையையும், யானையின் செயலைத் தடுக்கத் தவறிய பாகனையும் தன் கையில் இருந்த கோடரியால் வெட்டிக் கொன்றார்.

இதுபற்றி கேள்விப்பட்டு அங்கு வந்த புகழ்ச்சோழ நாயனார், “யானை செய்த குற்றம் என்னையே சேரும். ஆகவே என்னையும் கொல்லும்” என்று எறிபத்த நாயனாரிடம் உறைவாளை வழங்கினார். அப்போது இறைவன் தோன்றி அனைவருக்கும் அருள்புரிந்தார். யானையையும், பாகனையும் உயிர் பிழைக்கச் செய்தார்.

இத்தகைய சிறப்பு மிக்க புகழ்ச்சோழ நாயனார், தன் அமைச்சர்களிடம் ஒரு முறை, “நமது அரசாட்சிக்கு அடங்காது, மாறுபட்ட அரசர்கள் இருப்பார்களானால், அவர்களைப் பற்றி கூறுங்கள்” என்று கேட்டார்.

அமைச்சர் ஒருவர், “அரசே! கப்பம் செலுத்தாத அரசன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் அதிகன். மலைகளை மதில்களாக சூழ்ந்த நகரில் காவல் மிக்கவனாக அரசு புரிந்து வருகிறான்” என்று கூறினார்.

இதையடுத்து புகழ்ச்சோழ நாயனார், “நால்வகை படைகளுடன் சென்று அதிகனை சிறைபிடித்து வாருங்கள்” என்றார்.

மன்னனின் கட்டளையை ஏற்று நால்வகை படைகளும், அதிகன் ஆட்சி செய்து வந்த நகரை நோக்கி விரைந்தன. இருதரப்புக்கும் கடும் போர் நடந்தது. எங்கும் ரத்த வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இறுதியில் அதிகனுடைய சேனைகள் உறுதியிழந்து மாண்டன. அவனுடைய மலை அரண்கள் தகர்க்கப்பட்டன.

போரில் மாண்ட எதிர்சேனை வீரர்களின் தலைகளை ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டு, புகழ்ச்சோழ நாயனாரின் முன்பாக கொண்டு வந்து குவித்தனர், தளபதிகள். மகிழ்ந்து போனான் மன்னன். தன்னுடைய அரச சேனையின் திறமையைக் கண்டு மெய்சிலிர்த்தான். தன் முன் குவிக்கப்பட்டிருந்த தலைகளை பார்த்தான்.

அப்போது அந்த குவியல்களுக்கு மத்தியில் சடைமுடியுடன், நெற்றியில் திருநீறு அணியப்பட்டிருந்த தலை ஒன்று இருப்பதைக் கண்டு, புகழ்ச்சோழ நாயனார் அதிர்ச்சியடைந்தார். அவரது மனம் அச்சம் கொண்டது. “ஐயோ.. என் வாழ்வில் நான் செய்த அனைத்து பலன்களையும் இழந்து விட்டேனே. செய்யக் கூடாத செயலை செய்து பெரும் பாவத்தை சுமந்து கொண்டேனே. சடைமுடியை கொண்ட சிவனடியாரின் தலையைக் கண்டும் என் இதயம் இன்னும் வெடிக்காமல் இருக்கிறதே. இனி எனக்கு இந்த உலகில் வாழ தகுதியில்லை” என்று கதறி அழுதான்.

அமைச்சர்களை நோக்கி, “இந்த அரசாட்சியை அறநெறி தவறாது ஆண்டு, உரிய காலத்தில் என் புதல்வனிடம் ஒப்படைப்பீர்களாக!” என்று கட்டளையிட்டான்.

பின் விறகுகளை இட்டு, பெருந்தீ வளர்த்தான். அவனது செயலைக் கண்டு அமைச்சர்கள் மனம் கலங்கிப் போனார்கள்.

அவர்களிடம், “அமைச்சர்களே! மனம் கலங்க வேண்டாம். இனி எனக்கு இவ்வுலகில் வாழ்வு இல்லை. கடமையை நீங்கள் தவறாது செய்யுங்கள்” என்று கூறினார் புகழ்ச்சோழ நாயனார்.

பின்னர் சடைமுடியுடைய தலையை தன் கையில் தாங்கியபடி நெருப்பு குண்டத்தை வலம் வந்தார். பூக்குழியில் குதிப்பது போல், அந்த தீக்குழியில் இறங்கினார். வானில் இருந்து மலர் மழை பெய்தது. வானில் தேவர்கள் வாழ்த்தி வணங்கினர். புகழ்ச்சோழ நாயனார், சிவபெருமான் திருவடி நிழலை சேர்ந்து முக்தி அடைந்தார்.

Next Story