சுகமான வாழ்வு தரும் சுக்ரன்


சுகமான வாழ்வு தரும் சுக்ரன்
x
தினத்தந்தி 23 July 2019 12:13 PM GMT (Updated: 23 July 2019 12:13 PM GMT)

கிரகங்களில் மிகவும் பிரகாசமானதும், நட்சத்திர அந்தஸ்து பெற்றதுமான கிரகம் சுக்ரன். இவர் அசுரர்களின் குருவாக விளங்குபவர்.

பூமிக்கு மிகவும் அருகில் உள்ள கிரகம் சுக்ரன் ஆகும். இது பெண் கிரகம் என்பதால், பெண்ணாசையை உண்டாக்கும். ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையைப் பற்றிக் கூறும் கிரகம் என்பதால், ‘களத்திர காரகன்’ என்று இவர் அழைக்கப்படுகிறார். ஆடம்பர வாழ்வு, பணம் பொருள் மீது ஆசையைத் தூண்டுதல், உடல் உழைப்பை விரும்பாமல் சொகுசாக வாழவேண்டும் என்று நினைக்க வைப்பவர் சுக்ரன். இவருக்கு பிருகு, காப்பியன், அசுர மந்திரி, உச்னம் ஆகிய பெயர்களும் உண்டு. இவர் உறவுகளில் மூத்த சகோதரி, பெரியம்மா மற்றும் மனைவி ஆகியோரை குறிப்பார். உறுப்புகளில், உடலில் உள்ள அனைத்து சுரப்பிகள், அலங்காரம் செய்து கொள்ளக்கூடிய அனைத்து இடங்களையும் குறிப்பவர் இவரே.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் சுக்ரன் நல்ல முறையில்அமைந்துவிட்டால், வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அந்த நபர் அனுபவித்து விடுவார். இளம் பெண்களுடன் நட்பு உருவாகும். கலை, கவிதை, நடிப்பில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். முக்கிய நிகழ்வுகள் எல்லாம் சுக்ர ஓரையில் நடக்கும். ரிஷபம் மற்றும் துலாம் லக்னம், ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்களுடன் தொடர்பு உண்டாகும். வங்கியில் சேமிப்பு உயரும். லட்சுமி, விஷ்ணு அம்ச பெயர்களைக் கொண்டவர்களுடன் நெருங்கிய நட்பில் இருப்பார்கள். வெள்ளை நிற ஆடைகளின் சேர்க்கை, அவற்றை அணிவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். விலை உயர்ந்த உணவு வகைகளை உண்பதில் நாட்டம் இருக்கும். அலங்காரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உயர்ரக ஆடை, ஆபரணம், வாசனை திரவியங்கள் பயன்படுத்தி மகிழ்வார்கள். தன்னை அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள். சொகுசு வாகனத்தில் பயணம் செய்வார்கள். ராஜபோக வாழ்வு, பல மாடி வீடு கட்டுதல் ஆகிய நற்பலன்கள் நடைபெறும்.

ஜனன ஜாதகத்தில் சுக்ரன் பலம் குறைந்து காணப்பட்டால், அந்த நபருக்கு வீடு, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை இருக்காது. இளமைப் பொழிவு குறையும். ஜனன கால ஜாதகத்தில் சுக்ரன் பலம் குறைந்தவர்கள், வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி லலிதா சகஸ்ஹர நாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்தாலும் நன்மைகள் சேரும். வெள்ளை மொச்சையை வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். இளம்பெண்களுக்கு ஆடை தானம் தரலாம்.

சுக்ரனைப் பற்றி..

நிறம் - வெண்மை

குணம்- சாத்வீகம்

மலர் - வெண்தாமரை

ரத்தினம் - வைரம்

சமித்து- அத்தி

தேவதை - இந்திராணி

பிரத்யதி தேவதை - இந்திரன்

திசை - கிழக்கு

ஆசன வடிவம்- ஐங்கோணம்

வாகனம் - கருடன்

தானியம் - வெள்ளை

மொச்சை

உலோகம் - வெள்ளி

பிணி- சீதளம்

சுவை - இனிப்பு

ராகம்- பரம்பு

நட்பு - புதன், சனி, ராகு, கேது

பகை - சூரியன், சந்திரன்

சமம் - செவ்வாய், குரு

ஆட்சி - ரிஷபம், துலாம்

மூலத்திரிகோணம் - துலாம்

உச்ச வீடு- மீனம்

நீச்ச வீடு - கன்னி

நட்சத்திரம் - பரணி, பூரம், பூராடம்

தசா காலம் - 20 வருடங்கள்

பார்வை - 7-ம் இடம்

பாலினம் - பெண்

கோசார காலம் - 1 மாதம்

உயரம் - நடுத்தரம்

உபகிரகம் - இந்திர தனுசு

ஸ்தலம் - ஸ்ரீரங்கம், கஞ்சனூர்

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story