ஆன்மிகம்

ஐந்து சபை கொண்ட சிதம்பரம் + "||" + Chidambaram with five councils

ஐந்து சபை கொண்ட சிதம்பரம்

ஐந்து சபை கொண்ட சிதம்பரம்
பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குவது சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயம். ஐந்து சபைகளில், பொற்சபை என்ற சிறப்பை பெற்ற திருத்தலம்.
‘சித்’ என்றால் ‘அறிவு’ அல்லது ‘ஞானம்’, ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ அல்லது ‘வெளி’ என்று பொருள். ‘சிதம்பரம்’ என்பதற்கு ‘அறிவு வெளி’ அல்லது ‘ஞான வெளி’ ஆகிறது.

முன் காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்த வனமாக இருந்ததால் ‘தில்லை நகர்’ என்றும், பெருவெளி வடிவமானதால் ‘சிதம்பரம்’ என்றும், புலிக்கால் கொண்ட முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம் ஆகையால் ‘புலியூர்’ என்றும், பொன் தகடுகளால் வேயப்பட்ட ஆலயம் என்பதால் ‘பொன்னம்பலம்’ என்றும் பல பெயர்களால் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.

முதன்மைக் கடவுளான சிவன் பரவியிருக்கும் உலகின் வடிவில், திருவாரூர் மூலதாரமாகவும், திருவண்ணாமலை மணிப்பூரகமாகவும், திருக்காளத்தி கழுத்தாகவும், திருவானைக்கா நாபியாகவும், காசி புருவ மத்தியாகவும், சிதம்பரம் இருதயமாகவும் திகழ்வதாக சொல்லப்படுகிறது.

இத்தலத்தில் நடராஜர் திருநடனம் புரியும் தூய செம்பொன்னால் ஆன சிற்சபை, விலைமதிப்பற்ற ஸ்படிக லிங்கத்துக்கு ஆறுகால அபிஷேகம் நடைபெறும் பொன்னால் வேயப்பட்ட முகடு கொண்ட பொற்சபை, பேரம்பலம் எனப்படும் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளும் தேவசபை, சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் புரிந்த நிருத்த சபை, பக்தர்களுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் நடராஜப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ராஜ சபை எனும் ஐந்து சபைகளும் உள்ளது.

சைவ, வைணவ பேதமின்றி இங்கு வரும் பக்தர்கள், நடராஜரை தரிசித்த உடன் பெருமாளையும் தரிசிக்கும் வண்ணம் கிழக்குப் பார்த்த தில்லைக் கோவிந்தராஜன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதி ஆழ்வார்களால் மங்களா சாசனம் பெற்றதாகும். நடராஜரின் ஆனந்தக் கூத்தினை கண்டு ஆனந்திக்க, பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.

இத்தலத்தின் சிறப்பே மாயையை உணர்த்தும் சிதம்பர ரகசியம் எனும் இறையின் தத்துவம்தான். ஞானப் பெருவெளி எனும் அகண்ட வெளித் தலமானதால், உருவமற்ற அருவ வழிபாட்டைக் குறிக்கும் வகையில் ‘சிதம்பர ரகசியம்’ விளங்குகிறது. சபாநாயகரின் வலப்புறத் திரையை அகற்றியவுடன் தொங்கிக்கொண்டு இருக்கும் தங்கத்தால் ஆன வில்வத்தள மாலையை மட்டும் தரிசிப்பது இதனால்தான். இறைவடிவம் ஏதுமற்ற ஆகாயப் பெருவெளி வடிவில் சிவபெருமான் எங்கும் வியாபித்திருப்பதை இது குறிக்கிறது.

சேலம் சுபா