ஆன்மிகம்

ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த லட்சுமி நாராயணர் + "||" + Lakshmi Narayana gave Jatayu the Moksha

ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த லட்சுமி நாராயணர்

ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த லட்சுமி நாராயணர்
திருநெல்வேலி அருகே அருகன்குளம் கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணர் கோவில். இந்த ஆலயம் ஜடாயு தீர்த்த கிணற்றின் மேல் அமைக்கப்பட்டிருப்பது விசேஷமானதாகும்.
ஜடாயு தீர்த்த கிணற்றில், லட்சுமி நாராயணர் சிலை உள்ளது. அதேபோல் கோவிலின் கர்ப்பக்கிரகத்திலும் லட்சுமி நாராயணர் சிலையும், ஜடாயு சிலையும் இருக்கிறது.

அயோத்தி மன்னன் தசரதனின் மகன் ராமன். இவர், விசுவாமித்திரரின் யாகத்துக்கு தடையாக இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்தார். அதோடு கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு சாப விமோசனமும் கொடுத்தார். பின்னர் மிதிலை நகர் சென்று, அங்கு ஜனகர் மாளிகையில் இருந்த சிவ தனுசை உடைத்து சீதையை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

ராமனுக்கு, அயோத்தி மன்னராக முடிசூட்ட வேண்டும் என்று தசரதர் நினைத்தார். அந்த நேரத்தில் தசரதரின் 2-வது மனைவி கைகேயி, தனது மகன் பரதன் நாடு ஆள வேண்டும், ராமன் 14 வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதையறிந்த ராமன் தனது மனைவி சீதை, தம்பி லட்சுமணருடன் வனவாசம் சென்றார். அப்படி வனத்தில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இலங்கை வேந்தன் ராவணன் வந்து சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். அப்போது சீதை தன்னை ராவணன் கடத்தி செல்கின்ற வழிப்பாதையை ராமரும், லட்சுமணரும் அறிய வேண்டும் என்று வழிநெடுகிலும் தனது ஆபரணங்களை கழற்றி வீசிக்கொண்டே சென்றாள்.

தற்போது ஆலயம் இருக்கும் இடத்தின் அருகில் வந்தபோது, சீதையை ராவணன் கடத்தி செல்வதை அறிந்த கழுகு அரசன் ஜடாயு, ராவணனுடன் போர் புரிந்தார். இந்த போரில் ராவணன், ஜடாயுவின் இறகை வெட்டினான். இதில் ஜடாயு வுக்கு உயிர் போகும் நிலை ஏற்பட்டது. அப்போது சீதை, “நான் என் கணவருக்கு உண்மையானவள் என்றால், அவர் வரும் வரை ஜடாயு உயிரோடு இருக்க வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டினாள்.

அதேபோல் சீதையை தேடி ராமனும், லட்சுமணனும் அங்கு வந்தனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்த ராமன், அவரை தனது மடியில் தூக்கி வைத்து தடவிக்கொடுத்தார். அப்போது ஜடாயு ராமரிடம், சீதையை ராவணன் கடத்தி செல்கிறான் என்ற விவரத்தை கூறியது. மேலும், “நான் இறந்தவுடன் நீங்கள்தான் இறுதிக்கடன் செய்ய வேண்டும், எனக்கு புண்ணிய தீர்த்தம் கொடுக்க வேண்டும், லட்சுமி நாராயணராக காட்சி கொடுக்க வேண்டும்” என்று ராமனை வேண்டினார்.

அதன்படி, இத்தலத்தில் ஜடாயு தீர்த்தம், ராம தீர்த்தம், சிவ தீர்த்தம் ஆகிய 3 தீர்த்தங்களை உருவாக்கி ஜடாயுவுக்கு ராமன் புனிதநீர் கொடுத்தார். மேலும் லட்சுமி நாராயணராக காட்சி கொடுத்து ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தார். அப்படி லட்சுமி நாராயணராக காட்சி கொடுத்த இடத்தில்தான் இந்த லட்சுமிநாராயணர் கோவில் உள்ளது என்று புராண வரலாறு கூறுகிறது. இந்த கோவிலுக்கு அருகில் தாமிரபரணி ஆற்றில் ஜடாயுவுக்கு ராமர் தர்ப்பணம் கொடுத்த ஜடாயுத்துறை உள்ளது.

இந்தக் கோவிலில் உள்ள 3 தீர்த்தங்களிலும் நீராடி பெருமாளை வணங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த 3 தீர்த்தங்களிலும் உள்ள தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் உள்ள ஜடாயுத்துறையில் கலக்கிறது. அங்கு இறந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் மோட்சத்துக்கு செல்வார்கள் என்பது ஐதீகம். எனவேதான் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஜடாயு தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம் செய்ய மக்கள் அதிகளவில் இங்கு வருவார்கள். ஆடி அமாவாசையன்று ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் மிகப்பெரிய சிறப்பு என்பதால் அன்று மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த கோவில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும் திறந்து இருக்கும்.

இந்த கோவிலுக்கு அருகில் ராமலிங்கசுவாமி கோவில், காட்டுராமர் கோவில், எட்டெழுத்து பெருமாள் கோவில், கோசாலை கோபால கிருஷ்ணர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.

திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், தாழையூத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து கோவிலுக்கு மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

புலவனூரான்