சுப காரியங்களை விருத்தி செய்யும் குளிகை காலம்


சுப காரியங்களை விருத்தி செய்யும் குளிகை காலம்
x
தினத்தந்தி 30 July 2019 10:28 AM GMT (Updated: 30 July 2019 10:28 AM GMT)

சுப காரியம் எதுவானாலும், அதைச் செய்வதற்கு பொருத்தமான நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது உலக வழக்கம்.

ராகு காலம், எம கண்டம் ஆகிய நேரங்களில் யாரும் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். ஆனால், பலரும் குளிகை காலத்தை தேர்வு செய்து சில முக்கியமான விஷயங்களை செய்து வருவது நடைமுறையில் உள்ளது. காரணம், குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் மறுபடியும் நடக்கும் என்பது ஐதீகமாகவும், பொதுவான நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது.

குளிகை காலம் என்று சொல்லப்படும் நேரத்தில் சொத்து வாங்குவது, சுப நிகழ்ச்சிகளை மேற்கொள்வது, கடனைத் திருப்பிக் கொடுப்பது, தங்க நகைகள் வாங்குவது, பிறந்த நாளைக் கொண்டாடுவது போன்ற விஷயங்களை செய்யலாம். அதன் காரணமாக தடைகள் எதுவும் இல்லாமல் அந்த விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து வரும் என்பது மட்டுமல்லாமல், அவை போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்வதற்கான வாய்ப்பும் ஏற்படும் என்பதும் மக்களின் மத்தியில் மிக்க நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதனால் சுப காரியங்களுக்கு குளிகை காலம் உகந்ததாகவும், அசுப காரியங்களை செய்யாமல் தவிர்க்கப்பட வேண்டிய காலமாகவும் குறிப்பிடப்படுகிறது. அதன் காரணமாக, அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்வது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

குளிகை காலம் உருவானதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான புராணக்கதை உள்ளது. அதில் குளிகனின் பிறப்பு ஒரு நல்ல நிகழ்வைத் தொடங்கவே ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. குளிகன் என்ற மாந்தன், சனீஸ்வரர்-ஜேஷ்டாதேவி ஆகியோரின் மகனாக பிறந்தவர். அவருக்கு மாந்தி என்ற தங்கையும் உண்டு. குளிகனின் தாயார் ஜேஷ்டாதேவி ‘மூத்த தேவி’ என்று அழைக்கப்படுகிறாள். ஸ்ரீதேவியான மகாலட்சுமியின் அக்கா என்பதால், மக்கள் இவரை ‘மூத்த தேவி’ என்ற பொருள் தரும் ‘மூதேவி’ என்றே குறிப்பிடுகிறார்கள்.

ராவணனின் மனைவியான மண்டோதரி, நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவளுக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்று அறிந்த ராவணன், குல குரு சுக்ராச்சாரியாரைச் சந்தித்தான். “குருவே.. எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளுக்கு தலைவனாகவும், எவராலும் வெல்ல முடியாத வலிமை கொண்டவனாகவும், அழகில் சிறந்தவனாகவும் விளங்க எந்த நேரத்தில் பிறந்தால் நல்லது என்று சொல்லுங்கள்” என்று அவரிடம் கேட்டான்.

அதற்கு சுக்ராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் பிள்ளை பிறந்தால், அந்த குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்” என்று யோசனை தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், ராவணன் மேற்கண்ட யோசனையைச் சொன்ன சுக்ரன் உட்பட அனைத்து நவக்கிரக அதிபதிகளையும் சிறை பிடித்து, ஒரே அறையில் அடைத்து வைத்தான். ஒரே அறையில் இருந்த கிரக அதிபதிகள் அனைவரும், இந்த யோசனையைச் சொன்ன சுக்ராச்சாரியார் மீது மிகுந்த வருத்தமும், கோபமும் கொண்டனர். ஒரே இடத்தில் கிரக அதிபதிகள் அனைவரும் இருப்பதால், ‘கிரக யுத்தம்’ என்ற அமைப்பால் பல சங்கடங்கள் ஏற்படலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் பெரும் கவலை கொண்டனர்.

அந்த சமயத்தில் மண்டோதரிக்கு பிரசவ வலி இருந்தபோதிலும், குழந்தை பிறப்பதற்கான சூழல் ஏற்படவில்லை. அதை ராவணன் அறிந்தால் தங்களை தண்டிப்பது நிச்சயம் என்று நவக்கிரக அதிபதிகள் அச்சம் கொண்டனர். அதற்காக என்ன செய்யலாம் என்று சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். இந்தச் சிக்கலை தீர்க்க வேண்டுமானால், நம் ஒன்பது பேர்களைத் தவிர, நல்ல காரியத்தை விருத்தி செய்வதற்காக ஒரு புதிய உப கிரக அதிபதியாக ஒருவனை சிருஷ்டி செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுக்க வேண்டும். அதனால், நமக்கு நன்மை ஏற்படுவதுடன், அவனை சிருஷ்டிக்கும் அதே சமயத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவமும் ஏற்படும் என்று சுக்ராச்சாரியார் தெரிவித்தார்.

இந்த சிக்கலை தீர்க்க கிரக அதிபதிகள் அனைவரும் சனீஸ்வர பகவானை உதவி செய்ய வேண்டினர். அவரும் தனது சக்தி அம்சம் மூலம் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்கிறார். அவரே குளிகன் ஆவார். குளிகன் பிறந்த அதே நேரத்தில், மண்டோதரியும் அழகான ஒரு மகனை பெற்றெடுக்கிறாள். அவனே மேகநாதன் ஆவான்.

குளிகன் பிறக்கும்போதே நல்ல காரியங்களை நடத்தி வைக்கும் தன்மை கொண்டவனாக இருந்ததால், நவக்கிரக அதிபதிகள் அனைவரும் அவனை வாழ்த்தினார்கள். தினமும் பகல் மற்றும் இரவு ஆகிய வேளைகளில் குளிகை நேரம் என்ற அளவில் ஒரு நாழிகை நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரம் காரிய விருத்தி வேளை என்றும் கிரகங்களால் ஆசீர்வாதம் செய்யப்பட்டது. அதனால் குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தொடர்ச்சியாக நடைபெறுவதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

மூன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒன்றாக இருப்பதால் உருவான கிரக யுத்தம் அமைந்த நேரத்தில் குளிகனுக்குரிய குளிகை காலத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. அதன் அடிப்படையில் குளிகன் பிறந்த நேரத்தில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் ஆகிவிட்டது என்று சனீஸ்வரர் குறிப்பிட்டார். சனியின் புதல்வனான குளிகன் குளிர்ச்சியான தன்மையை கொண்டதால் அந்தப்பெயர் வந்ததாகவும் ஐதீகம் உண்டு. ஒவ்வொரு நாளிலும் செய்யப்படும் நல்ல காரியங்களை தொடரச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட குளிகனை சனிக்கிழமைகளில், மாலை நேரத்தில் வணங்கலாம். அதாவது, சனீஸ்வரனை வணங்கும்போது மனதில் குளிகனை தியானித்தபடி வணங்குவது ஐதீகம்.

Next Story