நன்மையும் செய்வார் ராகு பகவான்


நன்மையும் செய்வார் ராகு பகவான்
x
தினத்தந்தி 30 July 2019 10:46 AM GMT (Updated: 30 July 2019 10:50 AM GMT)

நவக்கிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு பகவான். ஒளி கிரகங்களான சூரிய - சந்திரர்களை தன் பிடியில் சிக்க வைத்து, அவர்களின் சக்தியை செயலிழக்க செய்யும் அளவுக்கு வலிமை மிக்கவர்.

கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகமும் ராகுதான். இவர் மனித தலையும், பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம். மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களே, ஒருவரின் சிந்தனை உறுப்புகள். இந்த ஐம்புலன்களும், மனித உடலில் தலைப்பகுதியில் உள்ளன.

ராகுவிற்கு மனித தலை. அதில் உள்ள ஐம்புலன்களை இயக்கி, புறச் சிந்தனைகளை உருவாக்கி உலக பற்றோடு வாழ வைப்பதே ராகுவின் வேலை. உலக பற்றோடு இருக்கும் மனிதனே தவறு செய்வான். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே அகச் சிந்தனைகள் உருவாகும். ஐம்புலன்களையும் அடக்க பாடம் கற்பிப்பவரே ராகு பகவான். இவர் உறவுகளில் தாய் மற்றும் தந்தை வழி தாத்தாக்களை குறிப்பார். இடங்களில் பொந்துகள், குழிகள், படரும் கொடிகளையும், உறுப்புகளில் தோலையும் குறிக்கிறார்.

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது. ஆனால் தான் இருக்கும் வீட்டையே, சொந்த வீடாக எடுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவர். தன்னோடு சேர்ந்திருக்கும் கிரகங்களின் பலனைக் கொடுப்பவர். ராகு சென்ற பிறவியில் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசைகளைச் சொல்பவர்.

பாம்புகள் புற்றில் வசித்தாலும், அந்த புற்றுகள் பாம்பினால் உருவாக்கப்படுவதில்லை. கறையான் புற்று மற்றும் பொந்துகளில் வசிக்கும். அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களை அழிப்பதும்தான் ராகுவின் வேலை.

ஜாதகத்தில் கேந்திர, திரிகோணங்களில் இருக்கும் ராகுவும், சுயசாரம் பெறும் ராகுவும், தசா புத்தி காலங்களில் அதிக வலுப்பெற்று பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ற பலனை முழுமையாக அனுபவிக்கச் செய்கிறது. மறை ஸ்தானங்களில் உச்சம் பெறாத ராகு, விபரீத ராஜ யோகத்தையும் தரும்.

அதே நேரத்தில் ஒருவரது ஜாதகத்தில் அதிக கிரகங்கள் ராகு சாரம் பெற்று இருந்தாலோ, அல்லது கிரகண காலத்தில் ஒருவர் பிறந்திருந்தாலோ அந்த ஜாதகர் மீளாத் துயரத்தில் தவிப்பார். நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, வெளி நாட்டிற்கு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷம் அருந்த செய்தல், கூட்டுமரணம், திடீர் ஏற்றம், திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு, மாந்திரீகம், மற்றவர்களின் வாழ்வை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷக்கடி போன்ற பிரச்சினைகளால் பாதிப்படையச் செய்வார். அசுப கிரக தசா புத்தி, அந்தர காலங்களில் ஏற்ற, இறக்கங்கள் மிகுதியாக இருக்கும்.

இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதற்கு அல்லது ராகுவின் பாதிப்பை ஓரளவு சரி செய்வதற்கு, கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்து வரலாம். கும்பகோணம் அய்யாவாடி பிருத்தியங்கரா தேவி வழிபாடு, துர்க்கை, காளி போன்ற தெய்வங்களின் வழிபாடும் நன்மை வழங்கும். வளர்ந்து வரும் புற்றுக்கு சென்று வழிபாடு செய்யலாம். கால பைரவர் வழிபாடு, பஞ்சமி திதியில் கருடனை வழிபடுவது, சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவது போன்றவையும், ராகு பகவானின் பாதிப்புகளில் இருந்து உங்களை மீட்டெடுக்கும்.



பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story